ஆசிய விளையாட்டு தகுதிச் சுற்றில் வினேஷ் போகாட் தோல்வி - சர்ச்சைகளைக் கடந்து சவாலாகும் பயணம்

வினேஷ் போகாட், மல்யுத்த விளையாட்டு, இந்தியா, ஆசிய விளையாட்டு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மல்யுத்த விளையாட்டிற்கு திரும்பும் வினேஷ் போகாட்டின் முயற்சி மல்யுத்த போட்டியைப் போலவே மிகப்பெரிய போராட்டமாக மாறி வருகிறது.
    • எழுதியவர், சௌரப் துக்கல்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றின் மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வெளியேறினார்.

மூன்றாவது போட்டியில் தனது சொந்த மாநிலமான ஹரியாணாவைச் சேர்ந்த மீனாட்சி என்கிற மல்யுத்த வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். வினேஷ் 4 புள்ளிகள் பெற்ற நிலையில் மீனாட்சி 6 புள்ளிகளைப் பெற்றிருந்தார்.

இந்த தோல்வி உடன் ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறினார் வினேஷ் போகாட்.

ஆசிய போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் விளையாட வினேஷ் போகாட் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஏற்கெனவே மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் வினேஷ் போகாட். தாயான பிறகு மல்யுத்த விளையாட்டிற்கு திரும்பும் அவரின் முயற்சி மல்யுத்த போட்டியைப் போலவே மிகப்பெரிய போராட்டமாக மாறி வருகிறது.

மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு நீதிமன்றங்கள், கூட்டமைப்பின் கொள்கைகள், தகுதி தொடர்பான சர்ச்சைகள் மற்றும் நிர்வாக தடைகளுக்கு இடையே வினேஷ் போகாட் சிக்கித் தவிக்கிறார்.

ஒரு தடை முடிவுக்கு வந்தாலும் மற்றொன்று உடனே தொடங்குவதைப் போலவே தெரிந்தது.

சமீபத்திய சர்ச்சை மே 30 அன்று புது டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தொடங்கியது. இந்த நிகழ்வு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் நாட்டின் மிகவும் வெற்றிகரமான பெண் மல்யுத்த வீராங்கனை இடையேயான நீண்டகால பகையின் புதிய அத்தியாயமாக உள்ளது.

ஹரியானாவின் ஜுலானா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வாகவும் உள்ளார் வினேஷ்.

முன்னதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தகுதி விதிகளின்படி தகுதிச் சுற்றில் கலந்து கொள்ள வினேஷுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதன் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உச்ச நீதிமன்றம் சென்றாலும் நிவாரணம் கிடைக்கவில்லை. உயர் நீதிமன்றத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

சட்டப் போராட்டம் முடிவடைவதாக தெரிந்த நிலையில் மற்றுமொரு சர்ச்சை உருவானது.

சனிக்கிழமை என்ன நடந்தது?

வினேஷ் போகாட், மல்யுத்த விளையாட்டு, இந்தியா, ஆசிய விளையாட்டு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, முதல் போட்டியில் 7-1 என்கிற கணக்கில் வென்ற வினேஷ் மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சனிக்கிழமை காலை அன்று கேடி ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் கலந்துகொள்ள வினேஷ் பதிவு செய்தார்.

ஆனால் மே 28-ஆம் தேதி வெளியான மல்யுத்த கூட்டமைப்பின் சுற்றறிக்கையின்படி, அவர் 50 கிலோ பிரிவில் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறியதாக வினேஷ் தெரிவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த எடைப் பிரிவில் தான் அவர் கலந்து கொண்டிருந்தார். அதன்பிறகு தான் இந்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் அறிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது குழு வெளியிட்ட காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் இந்த முடிவை வினேஷ் கேள்வி எழுப்பியிருந்தார்.

"மல்யுத்த கூட்டமைப்பு மே 28-ஆம் தேதி வந்த சுற்றறிக்கையை எனக்கு அனுப்பவில்லை. இந்த சுற்றறிக்கை எங்கிருந்து வந்தது? 53 கிலோ பிரிவில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும்," என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வுகள் மல்யுத்த உலகில் பலரும் ஆச்சர்யப்படுத்தி இருந்தது. ஏனெனில் மே மாதத்தின் தொடக்கத்தில் கோண்டாவில் நடைபெற்ற தேசிய தரவரிசை தொடரில் 53 கிலோ பிரிவில் தான் வினேஷ் பதிவு செய்திருந்தார். இந்தப் பிரிவுக்காக தான் அவர் பயிற்சி எடுத்து வந்தார். ஆனாலும் இந்தத் தொடரில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்ட பிரிவைவிட 53 கிலோ பிரிவு கடினமானது என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.

2018 ஆசிய போட்டிகளில் 50 கிலோ பிரிவில் வினேஷ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 2014 போட்டிகளில் 48 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 2022 உலக சாம்பியன்ஷிப் தொடரில் 53 கிலோ பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்த முடிவை விமர்சித்தவர்க்ளில் துரோனாச்சாரியா விருது வென்ற பயிற்சியாளரான மஹாவீர் சிங் போகாட் ஒருவர். வினேஷ் மற்றும் இதர போகாட் சகோதரிகளுக்கு அவர் தான் மல்யுத்த பயிற்சி வழங்கினார்.

வினேஷ் எந்தப் பிரிவில் போட்டியிடுவார் என மல்யுத்த கூட்டமைப்பு எவ்வாறு முடிவு செய்யலாம் என மஹாவீர் கேள்வி எழுப்பியிருந்தார்.

"எந்தப் பிரிவில் போட்டியிடலாம் என்பதை முடிவு செய்வது வீரரின் உரிமை. அவர் 53 கிலோ பிரிவில் போட்டியிட விரும்பினால் அதற்கு அவர் அனுமதிக்கப்பட வேண்டும். அதோடு கடைசி நேரத்தில் எடையை இழப்பது என்பது சரியானது மட்டுமல்ல சாத்தியமானதும் இல்லை. இவை அனைத்தும் வினேஷ் மீது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது." என்று அவர் தெரிவித்தார்.

எடை மட்டும் தான் பிரச்னையா?

வினேஷ் போகாட் , மல்யுத்த விளையாட்டு, இந்தியா, ஆசிய விளையாட்டு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​50 கிலோ மல்யுத்தப் போட்டியின் அரையிறுதியில் போகாட், கியூபாவின் யுஸ்னெலிஸ் குஸ்மான் லோபஸைத் தோற்கடித்தார்.

மஹாவீரைப் பொருத்தவரை இந்தப் பிரச்னை எடையைப் பற்றியது மட்டுமல்ல.

"இந்த நேரத்தில் ஒரு மல்யுத்த வீரரின் கவனம் விளையாட்டில் தான் இருக்க வேண்டும். அதைவிடுத்து அவர்கள் நிர்வாகப் பிரச்னைகளைச் சந்திக்க நிர்பந்திக்கப்படுகின்றனர்," என்கிறார் அவர்.

மேலும் அவர், "இத்தகைய அழுத்தங்கள் வீரரின் கவனத்தைப் பாதிக்கும். முக்கியமான போட்டிகளில் வீரரின் கவனம் மிகவும் முக்கியம்." என்றார்.

மல்யுத்த கூட்டமைப்பை விமர்சித்த அவர் வினேஷ் விளையாட்டிற்கு திரும்புவதற்கு கூட்டமைப்பு தேவையற்ற தடைகளை ஏற்படுத்தி வருகிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "மல்யுத்த போட்டிகளில் அவர் செய்துள்ள சாதனைகளைப் பொருத்தவரையில் தகுதிப் போட்டிகளில் விளையாட அனுமதித்திருக்க வேண்டும். ஆனாலும் மல்யுத்த கூட்டமைப்பு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது." என்றார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு 53 கிலோ பிரிவில் கலந்து கொள்ள வினேஷ் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிய விளையாட்டுகள் தகுதிச் சுற்றின் ஒப்புக்கொள்ளப்பட்ட அட்டவணையின்படி பெண்கள் 53 கிலோ பிரிவு உள்பட அனைத்து பிரிவுகளுக்குமான எடை பரிசோதனை புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.

வினேஷ் போகாட் உள்பட தகுதியுள்ள அனைத்து மல்யுத்த வீரர்களும் எடை பரிசோதனையில் கலந்து கொண்டு தேவையான நடைமுறைகளை முடித்தனர். அதன்படி தேவையான நிபந்தனைகளை நிவர்த்தி செய்யும் அனைத்து மல்யுத்த வீரர்களும் தகுதிச் சுற்றில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்." என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சர்ச்சையின் பின்னணி என்ன?

வினேஷ் போகாட் , மல்யுத்த விளையாட்டு, இந்தியா, ஆசிய விளையாட்டு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த மாத தொடக்கத்தில் கோண்டாவில் நடைபெற்ற தேசிய தரவரிசைப் போட்டியில் பங்கேற்க வினேஷ் போகாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சர்ச்சை திடீரென தோன்றவில்லை. இதன் பின்னணியில் நிகழ்ந்த பல்வேறு தொடர் சம்பவங்கள் தான் வினேஷின் ஆதரவாளர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது.

டிசம்பர் 2025-இல் சர்வதேச பரிசோதனை முகமை (ஐடிஏ) போட்டிக்கு வெளியே நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் வினேஷ் தோல்வியடைந்ததாகத் தெரிவித்தது.

அவரின் மாற்று திட்டங்கள் பற்றி ஊக்கமருத்து எதிர்ப்பு முகமைகள் அறிந்திருந்ததை இது காட்டுகிறது.

இரண்டு மாதங்கள் கழித்து ஆசிய விளையாட்டுகளுக்கான தேர்வு கொள்கையை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டது. அதன்படி சில குறிப்பிட்ட தேசிய போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு மட்டுமே தகுதியை நிர்ணயித்தது.

வீரர்களின் தங்களின் திட்டங்களை மேற்கொள்வதற்கான அவகாசம் வழங்குவதற்காக இத்தகைய கொள்கைகள் வழக்கமாக முன்கூட்டியே அறிவிக்கப்படும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓய்வு மற்றும் அதனைத் தொடர்ந்த தாய்மையால் விளையாட்டில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த வினேஷுக்கு இந்தக் கொள்கை பாதகமாக அமைகிறது.

கோண்டாவில் நடைபெற்ற தேசிய தரவரிசை தொடரில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது இந்த விவகாரம் மேலும் சர்ச்சைக்கு உரியதாக ஆனது.

பின்னர் சட்ட தலையீடுகள் மூலம் ஆசிய விளையாட்டு தொடருக்கான தகுதிச் சுற்றில் கலந்துகொள்ள அவர் அனுமதி பெற்றார். ஆனாலும் அவரின் எடைப் பிரிவைச் சுற்றிய நிச்சயமற்றத்தன்மை புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தேசிய முன்னாள் பயிற்சியாளரும் மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினருமான பிஆர் சோந்தி, இந்தச் சூழ்நிலையின் தாக்கம் ஒரு வீரருடன் மட்டும் நின்றுவிடாது என்கிறார்.

"வினேஷ் வெற்றிகரமாக மீண்டும் வந்தால், அது மேலும் பல பெண்களும் இந்த விளையாட்டைத் தேர்வு செய்து திருமணம் மற்றும் குழந்தை பெற்ற பிறகும் விளையாட்டைத் தொடர உந்துதலாக இருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், "தற்போதைய குழப்பம் மற்றும் போட்டிகளில் வினேஷ் பங்கேற்கவிடாமல் தடுக்கப்படும் விதம் மல்யுத்த கூட்டமைப்பின் பிம்பத்தை பாதித்து இந்திய மல்யுத்தத்தின் மீதே தேவையற்ற எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குகிறது." என்றார்.

கொள்கையில் உள்ள தெளிவற்றத்தன்மை

வினேஷ் போகாட் , மல்யுத்த விளையாட்டு, இந்தியா, ஆசிய விளையாட்டு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியாவில் மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பெண் விளையாட்டு வீரர்கள் திரும்புவது தொடர்பாக முறையான கொள்கை எதுவும் இல்லை.

இந்தச் சர்ச்சை இந்திய விளையாட்டுத் துறையில் உள்ள ஒரு முக்கியமான பிரச்னையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு முன்னணி வீரர்களுக்கான நிறுவனமயப்பட்ட கொள்கையின் போதாமை தான் அது.

பல நாடுகளில் பெண் வீராங்கனைகளுக்கு தரவரிசை பாதுகாப்பும், தகுதியில் நெகிழ்வுத்தன்மையும் மகப்பேறு விடுப்பிற்கு பிறகான ஆதரவும் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் வீரர்கள் கடந்த காலங்களில் என்ன சாதனைகள் செய்திருந்தாலும் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

வினேஷைப் பொருத்தவரை மீண்டும் வருவது என்பது மல்யுத்தத்தைப் பொருத்தது மட்டுமல்ல.

2024 பாரிஸ் ஒலிம்பிக் பிறகு அறிவித்த ஓய்விலிருந்து மீண்டும் வந்து ஜூலை 2025-இல் அவர் தாயானார். களத்திற்கு வருவதற்கு முன்பாகவே கூட்டமைப்பு விதிகள், சட்ட நடைமுறைகள் மற்றும் தகுதி சார்ந்த தொடர் சிக்கல்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் இயல்பான விதிகளைப் பின்பற்றுதலா அல்லது உருவாக்கப்பட்ட தேவையற்ற தடைகளா என்பது பற்றிய விவாதங்கள் இருக்கலாம்.

ஆனால் வினேஷ் திரும்பி வருவது என்பது அவரது மல்யுத்த திறன்களின் மீதான பரிசோதனை மட்டுமல்ல, அவரின் பாதையை தேவையானதை விட மேலும் கடினமாக்குவதாக பலரும் நம்பும் இந்த அமைப்பை அவர் எதிர்கொள்ளும் திறன் மீதான பரிசோதனையும் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு