'திருச்செந்தூர் கோவிலில் ஜிபே மூலம் ரூ.1000 பெற்ற அர்ச்சகர்' - பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் ரமேஷ்

பட மூலாதாரம், Handout
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் முக கவசம் அணிந்து ஆய்வு செய்ய சென்ற அறநிலையத்துறை அமைச்சர் தரப்பிடம் விரைவாக தரிசனம் செய்ய அழைத்து செல்வதாக கூறி பணம் வாங்கிய அர்ச்சகர் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளார்.
அந்த நபர் கோவிலில் தன்னார்வலராக வேலை செய்பவர் என்றும் அவர் கோவில் அர்ச்சகராக பணியாற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் நிறுவன ஒப்பந்த காவலர்கள் இருவர் பணியிலிருந்து விடுவிக்க இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் முறைகேடாக பணம் கையூட்டு பெற்ற முடியிறக்கும் பணியாளர்கள் இருவரின் தொழில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Handout
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முக கவசம் அணிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது நடந்தது பற்றி அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது,''திருச்செந்தூர் கோவிலில் இன்று அதிகாலை திடீர் ஆய்வு செய்வதற்காக உதவியாளருடன் சென்றபோது, நான் அமைச்சர் என்று தெரியாமல் சண்முக மண்டபம் அருகில் அர்ச்சகர் ஒருவர் எனது உதவியாளரிடம் நபருக்கு ரூ.1000 வழங்கினால் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறினார். கையில் பணம் இல்லை என்றதும் 'ஜி பே' மூலம் பணம் அனுப்பலாம் என்று கூறி பணத்தை பெற்றுக்கொண்டு எனது உதவியாளரை சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து சென்றார்'' என கூறினார்.
''பின்னர் இதுகுறித்து விசாரணை செய்து அர்ச்சகரிடம் விளக்கம் பெறப்பட்டது. அவர் அளித்த விளக்கக் கடிதத்தில் தன்னை மன்னிக்குமாறு கேட்டிருந்தார். மறு உத்தரவு வரும் வரை பணம் பெற்ற அர்ச்சகர் கோவிலுக்கு வரவும் பூஜை கைங்கர்யம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.'' என அமைச்சர் கூறினார்.
"திருச்செந்தூர் கோவிலில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை தமிழக முதல்வர் விஜய்யிடம் சமர்ப்பிக்கப்படும். முதல்வர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அறநிலைத்துறை ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து திருச்செந்தூர் கோவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் கூறினார்.
அர்ச்சகர்கரிடம் மன்னிப்பு கடிதம் மட்டும் பெற்றால் போதுமா? என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்டுவது குறித்து பிபிசி தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர், "ஆயிரம் ரூபாய் பெற்று விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் சென்ற அர்ச்சகர் கோவில் நிர்வாகத்தில் பணி செய்யாதவர் என்பதால் அவரிடம் விளக்கக் கடிதம் பெறப்பட்டுள்ளது. மற்றவர்கள் (காவலர்கள்) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அறநிலையத்துறை அமைச்சரின் நடவடிக்கையை கோவில் திரிசுதந்திரர்கள் சபை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருச்செந்தூர் கோவில் திரிசுதந்திரர்கள் சபையின் தலைவர் மூர்த்தி, ''அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்கது. தவறு யார் செய்தாலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்." என்று கூறினார்.
திரிசுதந்திரர்கள் சபையில் உள்ள அர்ச்சகர்கள் பாரம்பரியமாக திருச்செந்தூர் கோவிலில் வழிபாட்டுப் பணிகளைச் செய்துவருவதாக அவர் கூறினார்.
''கோவில் சார்பில் எங்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை'' என்று அவர் கூறினார்.
அமைச்சர் தரப்பிடம் பணம் வாங்கிய அர்ச்சகரும் திரிசுதந்திரர்கள் சபையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































