'மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்': தவெக அரசின் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சிபிஎஸ்இ பள்ளிகளில், 6ஆம் வகுப்பு முதல் கட்டாய மூன்றாவது மொழியை (R3) அறிமுகப்படுத்த வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில், தற்போதைய கல்வியாண்டின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் மூன்று மொழிகள் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 15ஆம் தேதி வெளியிடப்பட்ட புதிய சிபிஎஸ்இ சுற்றறிக்கையின்படி, "ஜூலை 1ஆம் தேதி முதல், ஒன்பதாம் வகுப்பிற்கு மூன்று மொழிகள் (R1, R2, R3) கற்பது கட்டாயமாக்கப்படும். அவற்றில் குறைந்தது இரண்டு மொழிகளாவது இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்".

இது மும்மொழிக் கொள்கை குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ள நிலையில், "இரு மொழிக் கொள்கைதான் நமது அடிப்படையான கொள்கை. உறவுகளுடன் பேச தமிழ் மொழி, உலகுடன் பேச ஆங்கில மொழி என்பதே எங்கள் கொள்கை" என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல்கள் முடிந்து புதிய அரசுகள் அமைந்துள்ளன, இதுவரை இந்த 3 மாநிலங்கள் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்படும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாமல் உள்ளன.

'இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தி, இந்த 3 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசின் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன' என கடந்த மே 13ஆம் தேதி 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் 'மும்மொழிக் கொள்கை', இந்தியை மூன்றாவது மொழியாக திணிக்கும் முயற்சி என்ற வாதத்தை முன்வைத்து இதற்கு முந்தைய திமுக அரசு, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வந்தது.

இந்நிலையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

புதிய சிபிஎஸ்இ சுற்றறிக்கையின்படி 9 மற்றும் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள், கட்டாயமாக மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். அவற்றில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு மொழியைக் கற்க விரும்பும் மாணவர்கள், அதனை மூன்றாவது மொழியாகவோ அல்லது கூடுதலாக நான்காவது மொழியாகவோ (ஆங்கிலம் தவிர்த்து) கற்கலாம். அதேசமயம், பத்தாம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கு (R3) பொதுத் தேர்வு நடத்தப்படாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

"முதலில் 6ஆம் வகுப்புக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த மாணவர்கள் தொடர்ந்து 3 மொழிகளைக் கற்பார்கள் என நாங்கள் ஏற்பாடுகளை செய்து வந்தோம். ஆனால், தற்போது 9ஆம் வகுப்பு மாணவர்களும் புதிதாக ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்பது அவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறும்" என்கிறார் புதுச்சேரி திலாசுப்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி (சிபிஎஸ்இ) ஆசிரியை பச்சையம்மாள்.

"மூன்றாவது மொழியைக் கற்பிக்க போதுமான ஆசிரியர்களோ, பாட புத்தகங்களோ இல்லாத சூழல் நிலவுகிறது எனும்போது, இன்னும் சில வாரங்களில் (ஜூலை 1 முதல்) இதை நடைமுறைக்கு கொண்டுவருவது எளிதான ஒன்றல்ல" என்றும் பச்சையம்மாள் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் 33,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் சிபிஎஸ்இ கல்வி முறையைப் பின்பற்றி வருவதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

"இன்று சிபிஎஸ்இ பள்ளிகளில் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த மும்மொழிக்கொள்கை, நாளை பிஎம் ஸ்ரீ பள்ளிகள் மூலமும் தமிழ்நாட்டுக்குள் கொண்டுவரப்படும். இதனால் மொழிகள் கற்பதிலேயே மாணவர்கள் தங்கள் ஆற்றலை இழக்கக்கூடும். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய விஷயங்களை அவர்கள் எப்படி கற்க முடியும்?" என கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

'மூன்றாவது மொழி பெரும்பாலும் மனப்பாட முறைகள் மூலம் கற்பிக்கப்படுவதால், நடைமுறையில் மாணவர்கள் அதிலிருந்து மிகக் குறைந்த பயனையே பெறுகிறார்கள்' என்றும், 'குறிப்பாகப் போதுமான வளங்கள் இல்லாத சூழ்நிலைகளில், கட்டாய மும்மொழிப் பயன்பாடு மாணவர்களிடம் அறிவாற்றல் சுமையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும்' என்றும் ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

நிச்சயமாக தமிழக அரசு மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையக்கூடாது என வலியுறுத்தும் பிரின்ஸ் கஜேந்திர பாபு, "மொழிகள் சார்ந்த பிரச்னையாக மட்டுமே இதை அணுகக்கூடாது. இரு மொழிகள் கற்பது என்பதே அறிவியல்பூர்வமாக சிறந்த முறை, அதை விடுத்து மூன்றாவது மொழியை திணிக்கும்போது அது மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும்" என்கிறார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் என்றால் என்ன?

'பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா' என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பள்ளிகள், தேசியக் கல்விக் கொள்கையின் அமலாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டன.

குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு வழிகாட்டியாக மாறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பள்ளிகள் இருக்கும் என தேசிய கல்விக் கொள்கை-2020இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட மத்திய/மாநில/யூனியன் பிரதேச அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும். உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பள்ளிகளாக உருவாக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என, 2022ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது.

"'முன்மாதிரி பள்ளிகளாக மாற்றுவது' என்று கூறுவதன் மூலமே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்று மறைமுகமாகக் கூறப்படுகிறது. மாநில அரசு உருவாக்கி வைத்திருக்கும் அரசுப் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடவே இந்தத் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுக்கிறது" என்று கூறுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்

பட மூலாதாரம், @dpradhanbjp/X

படக்குறிப்பு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்பதற்கு திமுக அரசு மறுத்துவிட்டது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் 'மும்மொழிக் கொள்கை', இந்தியை மூன்றாவது மொழியாக திணிக்கும் முயற்சி என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்காததால் 'சமக்ரா சிக்‌ஷா அபியான்' என்ற ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் (2024-25) தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.2,153 கோடி நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.

"தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றால் தான் நிதி வழங்கப்படும்" என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வருடம் கூறினார்.

2018ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டம் பிரீ கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாகும். அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைப்பதும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

'சமக்ரா சிக்‌ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகையில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.2,153 கோடி. இந்தத் தொகையை மத்திய அரசு முறையாக ஒதுக்காமல் காலம் தாழ்த்துவதாக திமுக அரசு குற்றம் சாட்டி வந்தது.

தமிழ்நாட்டிற்கான நிதியை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு சார்பாக வழக்கும் தொடரப்பட்டது.

ஆனால், 2025-2026 ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.1847 கோடியில், ரூ.450 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் இன்னும் இணையவில்லை.

கடந்த வருடம் அக்டோபர் மாதம், கேரளாவில் ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி 'பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைவதாக' அறிவித்தது. கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

தவெக அரசின் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்

பட மூலாதாரம், @imrajmohan/X

படக்குறிப்பு, தமிழக முதலமைச்சர் விஜயுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் (கோப்புப் படம்)

இந்நிலையில், 'பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தி, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசின் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன' என கடந்த மே 13ஆம் தேதி 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் தமிழ்நாடு இணைவது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், "மறைமுக அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம்" எனக் கூறியுள்ளார்.

"இரு மொழிக் கொள்கைதான் எங்களது அடிப்படையான கொள்கை. உறவுகளுடன் பேச தமிழ் மொழி, உலகுடன் பேச ஆங்கில மொழி என்பதே எங்கள் கொள்கை. பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார்.

தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு இன்னும் வழங்காதது குறித்துப் பேசிய அவர், "கடந்த 2 ஆண்டுகளாக அந்த நிதி நமக்கு வந்து சேரவில்லை. அது மிகப்பெரிய துயரம். அது எங்களுக்கான நிதியோ, அதிகாரிகளுக்கான நிதியோ அல்ல. அது மாணவர்களுக்கான நிதி. அதை நிறுத்திவைப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதேசமயம் மறைமுக அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம்" எனக் கூறினார்.

"நாங்கள் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது, மாநில கல்வி உரிமையை பறிக்கும் தேசிய கல்வி கொள்கையை (2020) அரசு ஒருபோதும் தமிழ்நாட்டில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினோம்" என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா.

சென்னை தலைமைச் செயலகத்தில் மே 18ஆம் தேதி முதலமைச்சர் விஜயை சந்தித்துள்ள இந்திய மாணவர் சங்கத்தினர் கல்வி தொடர்பான 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்துள்ளனர்.

"தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. முன்பு இருந்த திமுக அரசு இந்தக் கொள்கையை வலிமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் இதற்காக மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு, இருமொழிக் கொள்கை தான் இந்த அரசின் கொள்கை என முதலமைச்சர் உறுதியாகக் கூறினார்" என்கிறார் மிருதுளா.

'கண்மூடித்தனமாக எதிர்க்கக்கூடாது'

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்

பட மூலாதாரம், @narayanantbjp/X

படக்குறிப்பு, தமிழக பாஜவின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

ஆனால், மும்மொழிக் கொள்கை தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை தமிழக பாஜவின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

"திமுக அரசின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருப்பதால் தான் மும்மொழிக் கொள்கை விஷயத்தில் திமுக எடுத்த அதே முடிவை தவெக-வும் எடுத்துள்ளது" என்கிறார் அவர்.

"பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் குறித்தும், தேசிய கல்விக் கொள்கை குறித்தும் முதலில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். அதன் பிறகு, அது வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, 'கொள்கை' என்று திமுக போலவே பேசுவது வீண்."

"பி.எம்.ஸ்ரீ மூலம், கிராமப்புற, ஏழை மாணவர்கள் கூட மூன்று மொழிகளைக் கற்க முடியும். இதில் மாணவர்களுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன. அதை ஆராயாமல், தவெக அரசு கண்மூடித்தனமாக இதை எதிர்க்கக்கூடாது" என்றும் அவர் கூறினார்.

'மொழிப் பிரச்னையைக் கடந்து அணுக வேண்டும்'

"'தேசிய கல்விக் கொள்கை' தொடர்பாக விவகாரத்தில், மீண்டும் மீண்டும் மொழிகளை வைத்தே இந்த பிரச்னை அணுகப்படுகிறது. மொழிப் பிரச்னையைக் கடந்து தமிழ்நாடு அரசு இதை அணுக வேண்டும்" என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

"இன்று இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மொழிகள் தொடர்பான நடைமுறை சிக்கல்களை எளிதில் கடந்துவிடலாம். அப்படியிருக்க அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு இந்தத் திணிப்பை கொண்டுவருகிறது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான்" என்கிறார் அவர்.

"மொழிகளைத் திணிப்பதில் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட திறமையான ஆசிரியர்களை முழு நேர அடிப்படையில் நியமிக்க, உலக தரத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்ற முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கல்வி வேறு, அரசியல் வேறு இந்த புரிதலின் அடிப்படையில் மத்திய அரசும் தமிழக அரசும் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்" என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு