சௌதி இளவரசரின் பிரமாண்ட கனவு திட்டத்தில் பின்னடைவு ஏன்? மாறும் யதார்த்தம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செபாஸ்டியன் அஷர்
- பதவி, உலக விவகாரங்கள் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
முழுமையான அதிகாரத்துடன் ஆட்சி செய்த மன்னர்கள், தங்களின் உச்ச அதிகார காலத்தில் உருவாக்கிய பிரம்மாண்ட திட்டங்களின் சின்னங்களில் தங்களது புகழின் தடத்தை விட்டுச் சென்றனர்.
மத்திய கிழக்கின் வளமான சமவெளிகள், மலைச்சரிவுகள் மற்றும் பாலைவனங்களில் அந்த அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன.
ஆனால், இன்றைய காலத்தின் முக்கிய சர்வாதிகார ஆட்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஒரு தலைவர், தனது மிகப்பெரிய கனவுத் திட்டங்களுக்கான நினைவாக வெறும் டிஜிட்டல் தடத்தையே விட்டுச் செல்லக்கூடிய நிலை உள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பு, முகமது பின் சல்மான் அல்லது பரவலாக எம்பிஎஸ் என அறியப்படும் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், அறிவியல் கற்பனை உலகத்திலிருந்து வந்தது போல தோன்றிய ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். அது 'விஷன் 2030' என்று அழைக்கப்பட்டது.
அந்த திட்டத்தின் மூலம், உலகையும் செளதியையும் மாற்றக்கூடிய அதிநவீன தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் மாபெரும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என கூறப்பட்டது.
அந்த கனவுத் திட்டங்கள், ஆடம்பரமான விளம்பர காட்சிகள் மற்றும் எதிர்கால நகரங்களைப் போன்ற கற்பனை வடிவமைப்புகள் மூலம் உலக கவனத்தை ஈர்த்தன. சிலர் அதனை வியப்புடன் பார்த்தாலும், சிலர் கேலியாகவும் விமர்சித்தனர்.
செளதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியத்தின் சுமார் 1 டிரில்லியன் டாலர் மூலதனத்தைக் கொண்டு இது திட்டமிடப்பட்டது. எண்ணெய் வளத்தைச் சார்ந்திருக்கும் இந்த நிதி, எண்ணெய் இல்லாத ஒரு எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட இருந்தது.

பட மூலாதாரம், NEOM
2030 இலக்கை எட்ட இன்னும் நான்கு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், செளதி அரேபியாவின் மிகப்பெரிய கனவுத் திட்டங்களில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது ஒரு அளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கு நிதி நெருக்கடிகள் பாதி காரணமாகும், ஏனெனில் மத்திய கிழக்கில் தற்போதைய போருக்கு முன்பு ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலையின் பெரும் வீழ்ச்சி, செளதி அரேபியாவின்செல்வ வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தற்போது போரின் காரணமாக எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்திருந்தாலும், அந்த மோதல் உருவாக்கியுள்ள நிச்சயமற்ற சூழல் செளதியின் வருவாய் மற்றும் செலவுத்திட்டங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும், மிக அதிக செலவுடைய இந்த எதிர்காலத் திட்டங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் வருவார்கள் என்ற செளதியின் எதிர்பார்ப்பும் முழுமையாக நனவாகவில்லை.
கற்பனையிலிருந்து யதார்த்தத்திற்கு
மிகவும் பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் தற்போது சுருக்கப்பட்டு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அல்லது முழுமையாக கைவிடப்படும் நிலையில் உள்ளன.
அவற்றில் பல, 500 பில்லியன் டாலர் மதிப்பிலான நியோம் மெகா திட்டத்தின் கீழ் வந்தவை.
அதில் மிகவும் கவனம் ஈர்த்த திட்டமான "தி லைன்" நகரத் திட்டமும் தற்போது மாற்றமடைந்து வருவதாகத் தெரிகிறது. செளதியின் வடமேற்கு பகுதியில், இதுவரை மேம்படுத்தப்படாத பரந்த நிலப்பரப்பில் 161 கிலோமீட்டர் நீளமாக நேர்கோட்டில் அமைக்கப்படவிருந்த இந்த நகரம், நகர வளர்ச்சியின் வரையறையையே மாற்றும் என கூறப்பட்டது. மேலும், தி ஷார்ட் கட்டடத்தை விட உயரமாக உருவாகும் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது, அந்த எதிர்காலக் கனவுத் திட்டம் ஆரம்பத்தில் கூறப்பட்ட அளவிலான அதிசய நகரமாக இல்லாமல், மிகவும் சாதாரணமான வடிவத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், NEOM
வடமேற்கு மலைப்பகுதிகளில் உள்ள ட்ரோஜெனா குளிர்கால சுற்றுலாத் தள திட்டமும் சுருக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியா என்பது வறண்ட பாலைவனம் என்ற பிம்பத்தைப் பிம்பத்திற்கு மாறாக அங்கு பனி பொழிகிறது, ஆனால் அது நீண்ட காலம் நீடிப்பதில்லை.
வருடம் முழுவதும் இயங்கும் ஒரு மலைப்பகுதி சுற்றுலாத் தலம் என்ற யோசனை, அந்தப் பகுதியைச் செயற்கையான ஒரு உலகிற்குள் கொண்டு சென்றது. ஆனால், அது இனி சாத்தியமில்லை எனக் கருதப்படுகிறது.
அங்கே பல மைல் நீளமுள்ள பனிச்சறுக்குச் சரிவுகளும், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி, ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் கடைகளைக் கொண்ட ஒரு முழுமையான பனிச்சறுக்குக் கிராமமும் உருவாக்கப்படவிருந்தது. அரேபியாவின் மலைகளில் ஒரு மினி செயின்ட் மோரிட்ஸ் போல அது உருவாக்கப்படவிருந்தது.
இப்பகுதி 2029-ஆம் ஆண்டு ஆசிய குளிர்கால விளையாட்டுகளை நடத்துவதற்குத் தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டுகள், கஜகஸ்தானில் நடத்தப்படவுள்ளன.
எம்பயர் ஸ்டேட் கட்டடத்தைப் போல 20 மடங்கு பெரியதாக இருக்கக்கூடிய, குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களைக் கொண்ட ஒரு பிரமாண்டமான அமைப்பான 'தி கியூப்' முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 50 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
மிகச் சமீபத்தில், விளையாட்டு உலகில் ஒரு முன்னணி சக்தியாக மாற வேண்டும் என்ற சௌதி அரேபியாவின் மாபெரும் லட்சியத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய எல்ஐவி கோல்ஃப் தொடர், மிக அதிக செலவுமிக்க ஒரு தோல்வித் திட்டமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இது இன்றுவரை சுமார் 5 பில்லியன் டாலர் செலவை ஏற்படுத்தியுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவோ அல்லது நற்பெயர் வழங்குவது போன்றோ எந்தப் பலனையும் தரவில்லை.
'சௌதி, இங்க்.' புத்தகத்தின் ஆசிரியரான எலன் ஆர். வால்ட் போன்ற சௌதி அரேபியாவை நீண்ட காலமாக கவனித்து வருபவர்கள், இதை ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றாகவே உணர்கிறார்கள்.
"'தி லைன்' திட்டத்திலும் அதே விஷயம் தான் நடக்கிறது. 'நாங்கள் இந்த பிரமாண்டமான விஷயத்தை உருவாக்கப் போகிறோம். சற்று பொறுங்கள். இப்போது நாங்கள் இதைக் கணிசமாகக் குறைக்கப் போகிறோம்' என்று கூறுவது போல தான் இதுவும். இதே விஷயம் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கிறது. இது முகமது பின் சல்மானுக்கு முன்பிருந்தே இப்படித்தான் உள்ளது. முதலில் பிரம்மாண்ட அறிவிப்புகள் வெளியாகும். ஆனால் இறுதியில் அந்தத் திட்டம் கட்டப்படவே இல்லை அல்லது ஆரம்பத்தில் கூறிய அளவுக்கு மிகக் குறைவான வடிவில் மட்டுமே உருவாகும்," என்று வால்ட் கூறுகிறார்.
முந்தைய மன்னரான மன்னர் அப்துல்லாவின் ஆட்சியில், 2000-களில் உருவாக்கப்படவிருந்த புதிய நகரங்களை வால்ட் குறிப்பிடுகிறார்.
இந்த "பொருளாதார நகரங்கள்" திட்டமும் சௌதி அரேபியாவின் பொருளாதாரத்தை எண்ணெய் சாராத ஒன்றாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இது பல ஆண்டு காலங்களாக அந்நாட்டில் எப்போதும் இருந்து வரும் ஓர் அவசியத் தேவையாகும்.
பல தசாப்தங்களாக, என்றும் நீடிக்காத ஒரே இயற்கை வளமான எண்ணெயை மட்டும் நம்புவது, வலுவான மற்றும் பல்துறை பொருளாதார வளர்ச்சிக்கு தடையாகக் கருதப்பட்டு வந்தது.
ஆனால், பல பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்ட போதிலும், அந்தத் திட்டங்களின் முடிவுகள் பெரும்பாலும் ஏமாற்றமளிப்பவையாகவே இருந்தன. திட்டமிடப்பட்ட நகரங்களில் சில தொடங்கப்படவே இல்லை; மற்றவை சிறிய அளவிலான திட்டங்களாக மாற்றப்பட்டன. அவற்றில் மிகப்பெரியதாக இருந்த 100 பில்லியன் டாலர் மதிப்பிலான 'மன்னர் அப்துல்லா பொருளாதார நகரம்' திட்டம் உருவானாலும், அதை பெரிய வணிக மற்றும் சுற்றுலா மையமாக மாற்றும் இலக்கு முழுமையாக நிறைவேறவில்லை.
இந்தத் திட்டங்களின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, அரசுத்துறை சாராத உண்மையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே முக்கிய நோக்கமாக இருந்தது. குறிப்பாக, வேகமாக அதிகரித்து வரும் செளதியின் இளம் தலைமுறையினருக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2016-ஆம் ஆண்டிலும், வேலையின்மை விகிதம் இன்னும் சுமார் 12% என்ற அளவிலேயே இருந்தது.
இத்தகைய திட்டங்களின் பின்னணியில் உள்ள அதிகாரிகள், அவற்றின் சாத்தியக்கூறுகள் குறித்து ஒரு யதார்த்தமான பார்வையை எடுக்கத் தவறிவிடுகிறார்கள் என்று வால்ட் கருதுகிறார்.
"இந்தத் திட்டங்களுக்கு சந்தை எங்கே இருக்கிறது என்று அவர்கள் நினைத்தார்கள்? இது சாத்தியமென்று யார் கூறினார்கள்? அங்கு 'ஆம்' என்று மட்டுமே சொல்லும் மனப்பான்மை அதிகமாக உள்ளது. மன்னர் கேட்க விரும்புவதைச் சொல்வதே பலரின் நோக்கமாக இருக்கிறது. ஆலோசகர்களும் அதேபோல செயல்படுகிறார்கள். பெரிய ஒப்பந்தங்களைப் பெற வேண்டும் என்பதால், செளதி வாடிக்கையாளர்கள் கேட்க விரும்புவதைச் சொல்கிறார்கள். இறுதியில் திட்டங்கள் தோல்வியடைகின்றன," என்று அவர் கூறுகிறார்.
இந்த நடைமுறை பல ஆண்டு காலங்களாகவே நீடிக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் கேள்விகள் கேட்பதன் மூலம் தாங்கள் பெற்றுள்ள அதிக லாபம் தரும் ஒப்பந்தங்களை இழக்க விரும்பாததே இதற்குப் பொதுவான காரணமாகும்.
பெரும் மாற்றம்
2017-இல் முகமது பின் சல்மான் சௌதி அரேபியாவின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றபோது, அவர் முற்றிலும் சீரமைக்கப்பட வேண்டிய ஒரு அமைப்பையே பெற்றார் என்று சிலர் நம்புகிறார்கள்.
பல ஆண்டுகளாக சௌதி அரேபியாவில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து வரும் பொருளாதார ஆய்வாளர் கானெம் நுசீபே, "நவீன உலகத்துடன் முற்றிலும் தொடர்பில்லாத, முழுமையான தேக்க நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு சமூகப் பொருளாதார அமைப்பைத் தான்" முகமது பின் சல்மான் எதிர்கொண்டார் என்று குறிப்பிடுகிறார்.
விஷன் 2030 திட்டம் சௌதி அரேபியாவை பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் ஆகிய மூன்று வழிகளில் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டது.
"அவர்களுக்கு மிகவும் சவாலான விஷயம் என்னவென்றால், இந்த மாற்றங்கள் அனைத்தையும் அவர்கள் ஒரே நேரத்தில் செயல்படுத்த வேண்டியிருந்தது" என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் சக்திவாய்ந்த மற்றும் மிகவும் பழமைவாத இஸ்லாமிய தலைமையால் செலுத்தப்பட்ட சமூகக் கட்டுப்பாடு, சௌதி அரேபியா தனது முழு பொருளாதாரத் திறனை அடைவதற்கு ஒரு முக்கியத் தடையாக முகமது பின் சல்மான் மற்றும் அவரது ஆலோசகர்களால் பார்க்கப்பட்டது.
முகமது பின் சல்மான் தலைமையிலான அரசியல் மாற்றம், வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக ஆற்றல்மிக்க, இளைய தலைமுறையினரிடம் அதிகாரத்தின் கடிவாளம் ஒப்படைக்கப்பட்டதாகக் காட்டப்பட்டது.
ஆனால், அரசியல் விவாதங்களுக்கான புதிய இடங்கள் அனுமதிக்கப்பட்டன என்பது இதன் பொருள் அல்ல.
மாற்றத்தின் அளவையும் வேகத்தையும் தடுத்த மற்றும் அவரது ஆட்சியின் மீது ஒரு நீண்ட நிழல் படிந்த சில பிரச்னைகளுக்கு முகமது பின் சல்மான்தான் பொறுப்பாவார் என்கிறார் நுசீபே.
அவர் 2017-இல் ஆட்சியாளராகப் பதவியேற்ற அதே நேரத்தில், ரியாத்தில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் சௌதி அரேபியாவின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் வணிகர்களைப் பெருமளவில் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதை ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று சௌதி அரசு சித்தரித்தாலும், மற்றவர்கள் இதை அதிகார மிரட்டலாகவே பார்த்தனர்.
மேலும், 2018-இல் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் காஷோகி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது, பட்டத்து இளவரசரின் நற்பெயரில் ஒரு கறையை ஏற்படுத்தியது. இது காலப்போக்கில் மங்கியிருக்கலாம், ஆனால் அது இன்னும் நீங்காத ஒன்றாகவே உள்ளது.
செளதி அதிகாரிகள் கருத்து வேறுபாடுகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பது குறித்து நேரடி அனுபவம் கொண்ட ஒரு நபர், சௌதியில் பிறந்தவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளரும் மனித உரிமை ஆர்வலருமான அப்துல்லா அல்-அவ்தா.
அவரது தந்தை சல்மான் அல்-அவ்தா, ஒரு முன்னணி சௌதி இஸ்லாமிய அறிஞர் ஆவார்.
அவர் "கலவரத்தைத் தூண்டினார்" உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 2017 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் அடைக்கப்பட்டவர்கள் சுமார் 100 பில்லியன் டாலர்களைத் திருப்பித் தந்தபோதிலும், இது போன்ற நிகழ்வுகள் விஷன் 2030 திட்டத்திற்கு நிதியளிக்கும் நோக்கத்திற்கு எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியுள்ளன என்று அப்துல்லா நம்புகிறார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
"நீண்ட கால அடிப்படையில், இது உண்மையில் முதலீட்டாளர்களை பயமுறுத்தி விலகச் செய்துள்ளது" என்று கூறிய அவர், ''அடக்குமுறைகள், செளதியை முதலீட்டாளர்கள் பார்க்கும் விதத்தையும் பாதித்தது. முதலீட்டாளர்கள் விரும்புவது உறுதியான மற்றும் கணிக்கக்கூடிய சூழல். ஆனால் அங்கு அந்த நிலைத்தன்மை இல்லை. ஒரு நாள் நீங்கள் முதலீட்டாளராக இருக்கலாம்; அடுத்த நாள் எந்தத் தெளிவான காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டவராக மாறலாம். அதை யாரும் விரும்பமாட்டார்கள்," என்றும் அவர் கூறுகிறார்.
விஷன் 2030 திட்டம் மக்களின் விவாதப் பொருளை மாற்ற உதவியது. அதேபோல் 2016 முதல் சௌதி அரேபியாவிற்கு வரத் தொடங்கிய முக்கிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளின் அணிவகுப்பும், நாட்டின் உள்நாட்டு யதார்த்தத்தையும் அதன் வெளிநாட்டு பிம்பத்தையும் பெருமளவில் மாற்றியமைத்தன.
இது மேலோட்டமானதாக இருக்கவில்லை. பெண்களுக்கு இறுதியாக வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கியது போன்ற தலைப்புச் செய்திகளாக மாறிய நடவடிக்கைகள் சௌதி அரேபிய சமூகத்தை மாற்றியமைத்தன.
எந்த அளவிற்கு என்றால், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு முன்னணி சௌதி ஃபேஷன் இன்ஃப்ளூயன்ஸர் என்னிடம் கூறுகையில், அவர் சௌதிக்குச் செல்லும்போதெல்லாம் அவரது சௌதி நண்பர்கள் அவரது பின்தங்கிய சிந்தனைப் போக்கைக் கிண்டல் செய்ததாகக் குறிப்பிட்டார்.
ஆனால், மனித உரிமைப் பிரச்னைகள் இந்த மாற்றங்களை இன்னும் மறைத்துவிட்டன.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உலகைச் சேர்ந்த பல முக்கியப் புள்ளிகள் சௌதி அரேபியாவுக்குச் செல்வதில் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் மற்றவர்கள் அதன் மனித உரிமைப் பிரச்னைகளைக் குறிப்பிட்டு மறுத்துவிட்டனர்.
கார் பந்தயம் மற்றும் குத்துச்சண்டை போன்ற நிகழ்வுகளுக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரியாத்திற்குத் திரண்டனர், ஆனால் மற்ற சுற்றுலாப் பயணிகள் சௌதி அரேபியா மீதான எதிர்மறையான கருத்துக்களால் பின்வாங்கினர்.
இருப்பினும், சௌதியைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு, முகமது பின் சல்மானின் லட்சியங்கள் ஊக்கமளிப்பதாகவும், ஆதரவு பெற்றதாகவும் இருக்கின்றன என்ற உண்மையை இது மறுத்துவிடாது.
விஷன் 2030
பெரும் ஆடம்பரமான சில திட்டங்களில் செலவுகளை குறைத்திருப்பது, வெளிநாட்டு பார்வையில் குறைந்தபட்சம் ஒரு பகுதி தோல்வியை ஒப்புக்கொண்டதுபோல் தோன்றுகிறது. ஆனால் செளதி அதிகாரிகள் அதை இயன்ற அளவு நேர்மறையாகவே காட்ட முயல்கிறார்கள்.
"இப்போது அவர்களின் சிந்தனை என்னவென்றால், இந்த மெகா திட்டங்களுக்குப் பதிலாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய வெற்றிகளையும், சிறிய சாதனைகளையும் அடைவதுதான்" என்று அப்துல்லா கூறுகிறார்.
"உதாரணமாக, செங்கடல் தீவு ரிசார்ட்டான 'சிந்தலா' அவர்கள் விளம்பரப்படுத்தக்கூடிய ஒரு சிறிய வெற்றியாக இருக்கலாம். இது அடிப்படையில் மிகவும் பாரம்பரிய பாணியிலான ஒரு ரிசார்ட் ஆகும். தி லைன் மற்றும் தி கியூப் போன்றவற்றுக்குப் பதிலாக, இதையே விஷன் திட்டத்தின் ஒரு பகுதியாகக் காட்ட முடியும். இதன் மூலம், 'இவைதான் நியோம் திட்டத்தின் அடிப்படையைக் குறிக்கின்றன, முழு திட்டமும் நமக்குத் தேவையில்லை' என்று அவர்களால் கூற முடியும்" என்று அவர் விளக்குகிறார்.
இது அதிகாரிகள் இப்போது சொல்லத் தொடங்கியுள்ள விஷயங்களுடன் ஒத்துப்போகிறது. பொது முதலீட்டு நிதியத்தின் ஆளுநரான யாசிர் அல்-ருமையான் சமீபத்தில், புதிய ஐந்து ஆண்டு திட்டத்தின் கீழ் நிதியின் கவனம் செலவினத் திறனை மேம்படுத்துவதிலும், திட்டங்களின் செயல்திறனை நிலையான முறையில் மதிப்பீடு செய்வதிலும் இருக்கும் என்றும், நிதி வளங்களின் நீடித்த தன்மையை உறுதி செய்வதே இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த மறு கவனம் செலுத்துதல் என்பது சௌதி அதிகாரிகளுக்கு அடிப்படையில் இருக்கும் மிகச்சிறந்த வழி மற்றும் அவர்கள் விஷன் 2030 திட்டத்தையே காப்பாற்றுவதற்கான ஒரு பாதையாகும்.
முன்னணி சௌதி தொழிலதிபரும் மேலாண்மை ஆலோசகருமான தாமெர் ஷேக்கர் இதை வேறு விதமாக விளக்குகிறார்.
"நாம் இப்போது பார்ப்பது லட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டத்திலிருந்து, செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டத்திற்கான இயல்பான பரிணாம வளர்ச்சியாகும். ஒவ்வொரு பெரிய தேசிய மாற்றமும் ஒரு புள்ளியை எட்டும்போது, அங்கு அறிவிப்புகளின் அளவை விட முன்னுரிமை அளித்தல், வரிசைப்படுத்துதல் மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்தல் ஆகியவை மிகவும் முக்கியமானதாக மாறுகின்றன." என்கிறார் தாமெர் ஷேக்கர்.
கருத்தாக்கத்தில் அவ்வளவாக அறிவியல் புனைகதையாக இல்லாத சில முக்கியத் திட்டங்கள் தொடர்ந்து உருவாக்கப்படும்.
தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற சில முக்கியத் திட்டங்கள், அதாவது அறிவியல் புனைகதை போன்ற கருத்துருக்கள் குறைவாகக் கொண்ட திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
அதில் ரியாத்தில் உள்ள பழைய தலைநகரான திரியாவின் மறுவடிவமைப்பு மற்றும் புனரமைப்பு, மற்றும் சௌதி தலைநகருக்கு அருகில் அமையவுள்ள பிரமாண்டமான அதிநவீன தீம் பார்க்கான 'சிக்ஸ் பிளாக்ஸ் கித்தியா சிட்டி' ஆகியவை அடங்கும்.
பெட்ராவுக்கு இணையான நபடியன் நினைவுச் சின்னங்களுக்குப் புகழ்பெற்ற, வடக்கில் உள்ள பழங்கால தளமான அல்உலாவின் வெற்றிகரமான வளர்ச்சி, இதுபோன்ற திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதற்கான ஒரு முன்மாதிரியாகும்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு காலத்தில் மறக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியை, சௌதி அரேபியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய மற்றும் கலாசார அடையாளத்தின் முதன்மைத் திட்டமாக மாற்றுவதற்கான இந்தத் திட்டத்திற்கு ஏற்கெனவே பல பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
மேலும், இதை ஒரு உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்றுவதற்காக இன்னும் பல பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது, உதாரணத்திற்கு 'தி லைன்' திட்டத்தை விட எளிதில் அடையக்கூடிய ஒரு இலக்காகும்.
நிச்சயமாக விளையாட்டுத் துறையில், சௌதி அரேபியாவால் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான 2034-ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் உரிமையைப் பெற முடிந்தது.
செலவுகளை ஓரளவுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக மிகவும் லட்சியமான சில கருத்துருக்கள் சுருக்கப்பட்டதாகத் தோன்றினாலும், முகமது பின் சல்மான், அதன் வடிவமைப்புகளில் ஒரு தொலைநோக்கு அம்சம் இருப்பதை உறுதி செய்ய முயற்சிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

பட மூலாதாரம், NEOM
விஷன் 2030 திட்டம் தொடர்பான தங்களின் திட்ட மாற்றங்களை செளதி அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறுவது, கடந்த காலத்தில் இருந்த மறைத்தல் மற்றும் குழப்பம் போன்ற நடைமுறைகளிலிருந்து ஒரு மாற்றம் என காட்ட முயல்கிறார்கள். அதாவது, தாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு, பாதையை சரிசெய்துள்ளோம் என்ற செய்தியை முன்வைக்கிறார்கள்.
இதன் மூலம், அவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, தங்கள் போக்கைத் திருத்திக்கொண்டார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.
வளைகுடா பகுதியின் அரசியல் மற்றும் பொருளாதார நகர்வுகளுக்கான நிபுணரான மேட் சலாய், இது வெளிநாட்டு அரசியல்வாதிகள் மற்றும் தூதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரை பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்.
மேலும், "அவர்களைப் பொறுத்தவரை, சௌதி அரேபியா குறைந்தபட்சம் தனது தவறுகளை ஓரளவாவது ஒப்புக்கொண்டு அதைப் பற்றிப் பேசுகிறது என்பது நிச்சயமாக ஒரு நேர்மறையான அறிகுறியாகும். ஆனால் இது பெரும்பாலான முதலீட்டாளர்களும் பங்குதாரர்களும் எதிர்பார்க்கும் அளவிற்குச் செல்லும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறுகிறார் மேட் சலாய்.
சௌதி தொழிலதிபர் தாமெர் ஷேக்கர் இதில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்.
"பல சந்தர்ப்பங்களில், ஒழுங்குபடுத்தப்பட்ட முன்னுரிமை அளித்தல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்... சர்வதேச அளவிலான விவாதங்கள் பெருகிய முறையில் 'அறிவிப்புகள் எவ்வளவு பெரியவை?' என்பதிலிருந்து 'அதன் செயல்பாட்டு மாதிரி எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தது?' என்ற கேள்வியை நோக்கியே மாறி வருகின்றன" என்று தாமெர் ஷேக்கர் தெரிவித்தார்.
திட்டத்தை முடக்கும் செயல்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போருக்கு முன்பே விஷன் 2030 திட்டம் குறித்த மறுமதிப்பீடு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
இந்த மோதல் வளைகுடா பகுதி முழுவதிலும் உள்ள தற்போதைய நிலையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதற்குமான ஒரு வணிக மற்றும் சுற்றுலா மையமாக மாற வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னெடுத்த உத்தி குறித்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
சௌதி அரேபியா இதை பின்பற்றுவதுடன் மட்டும் நிறுத்தாமல், அதைவிட மேலாகச் செய்யவே விரும்பியிருந்தது.
இந்தத் திட்டம் மறுசீரமைக்கத் தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில், இந்தப்போர் விஷன் 2030 திட்டத்தின் எதிர்கால திசை குறித்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக சலாய் கூறுகிறார்.
"போருக்கு முன்பு, சௌதி அரேபியா அதிக முதலீடுகளைப் பெற விரும்பிய முக்கிய துறைகளாக செயற்கை நுண்ணறிவு மற்றும் சுற்றுலா, உற்பத்தி, சுரங்கத் தொழில் மற்றும் சில உள்ளூர் தொழில்கள் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் இருந்தன. ஆனால் சுரங்கத் தொழிலைத் தவிர, இவை அனைத்தும் இந்தப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன." என்கிறார் அவர்.
''போருக்கு முன்பு, நியோம் திட்டம் இனி செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட தொழில்களுக்கான ஒரு மையமாக மறுவரையறை செய்யப்படப் போகிறது என்பதே முக்கிய செய்தியாக இருந்தது. போரின் பின்னணியில் இது நிச்சயமாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஆனால் இதன் முக்கிய செய்தி மாதந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இது ஒரு சில உத்திசார்ந்த குழப்பத்தைக் குறிக்கிறது. ஆனால் சௌதி அதிகாரிகள் தாங்கள் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதை உணர்ந்துள்ளனர் என்ற வகையில் இது ஒரு நேர்மறையான அறிகுறியாகும்." என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Reuters
விஷன் 2030 திட்டம் ஒரு வித்தியாசமான சௌதி அரேபியா உருவாவதற்கு உதவியுள்ளது, இது சிலரின் கொண்டாட்டத்திற்கும் மற்றவர்களின் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
ஆனால், அந்த மாற்றத்திற்கு மூன்று தூண்கள் இருந்தன என்றாலும், நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
அரசியல் ரீதியாக, கருத்து வேறுபாடுகள் எப்போதும் போல கடுமையாகவே தண்டிக்கப்படுகின்றன.
சமூக ரீதியாக, பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ரியாத் போன்ற ஒரு நகரத்தில் வாழ்வதற்கான ஒட்டுமொத்த உணர்வே மாறியுள்ளது.
இது, 20 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத பல வகையான பொழுதுபோக்கு அம்சங்களுக்காக சௌதி மக்கள் தங்களது சொந்த நாட்டிற்குள்ளேயே செலவழிக்கும் பணத்தின் அளவை அதிகரித்துள்ளது.
பொருளாதார ரீதியாக, விஷன் 2030-இன் மெகா திட்டங்கள் நாட்டை இறுதியாக ஒரு எதிர்காலத்தை நோக்கி முன்னோக்கி கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன, அதில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அரசின் மகத்தான எண்ணெய் வளத்திற்கு இணையானதாக மாறும். ஆனால் அது ஒரு பகுதியே நனவாகியுள்ளது.
சௌதி தலைமைக்கு, இது ஒரு காலத்தில் கற்பனை செய்யப்பட்ட அளவில் இல்லாவிட்டாலும், நிச்சயமாக ஒரு வெற்றிக் கதையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.
முகமது பின் சல்மான் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவராகக் காட்டிக்கொள்ள விரும்பினாலும், அவரும் அவரைச் சுற்றி உள்ளவர்களும் தேவைப்படும்போது யதார்த்தமானவர்களாகவும் தங்களைக் காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இனி இணையத்தில் மட்டுமே இருக்கக்கூடிய திட்டங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட பல பில்லியன் டாலர்களுக்காக அவர்கள் சௌதி மக்களிடம் பொறுப்பேற்க வேண்டியதில்லை.
கணிக்கப்பட்ட வரை, சௌதி இளைஞர்களிடையே பட்டத்து இளவரசரின் புகழ் இன்னும் அதிகமாகவே உள்ளது. இதனால் தான் 'தி கியூப்' போன்ற மெகா திட்டங்களை வீணான காகிதங்களைப் போலக் குப்பையில் தூக்கி எறிய முடிகிறது.
சௌதி அரேபியாவின் பணத்தை நம்பி வளர்ந்த விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை மற்றும் அதற்கு அப்பால் உள்ள உலகைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள், இப்போது அந்த நிதி ஓட்டம் குறையவோ அல்லது முற்றிலும் நிறுத்தப்படவோ வாய்ப்புள்ள புதிய சூழலை எதிர்கொள்கின்றன.
எலன் ஆர். வால்ட்டின் கூற்றுப்படி, எல்ஐவி கோல்ஃப் தொடர் போன்ற சில திட்டங்கள் ஆரம்பத்திலிருந்தே சரியானதாகத் தோன்றவில்லை.
"கேள்வி என்னவென்றால், அவர்களின் அசல் உத்தி என்னவாக இருந்தது? என்பதுதான். அதாவது, அவர்கள் வெறும் மக்கள் தொடர்புக்காக மட்டுமே இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்திருக்க மாட்டார்கள். அப்படிச் செய்வது மிகவும் அபத்தமானதாக இருக்கும்." என்று அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























