இலங்கையில் தவெகவை தொடங்க சிலர் விஜய்க்கு அழைப்பு ஏன்?

TVK, Politics, Tamilnadu, Srilanka, Political party

பட மூலாதாரம், TVKHQ

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!' என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் கடந்த 18ம் தேதி வெளியிட்ட கருத்து பேசுப் பொருளாகியுள்ளது.

விஜய், முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர் இலங்கை தமிழர்கள் குறித்து முதல் தடவையாக கருத்து வெளியிட்டிருந்தார்.

நடிகராக இருந்த காலத்தில் விஜய்க்கு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் ரசிகர் கூட்டம் இருந்தாலும், அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலான சிங்கள மக்கள் விஜய்க்கு எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கச்சத்தீவை இந்தியாவிற்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் பிரசார மேடைகளில் விஜய் கருத்துக்களை வெளியிட்ட பின்னரே, சிங்கள மக்கள் மத்தியில் விஜய்க்கு கடும் எதிர்ப்பு காணப்படுகின்றது.

அதேசந்தர்ப்பத்தில், கச்சத்தீவு விவகாரத்தில் விஜய்க்கு இலங்கை தமிழர்கள் மத்தியிலும் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக மீனவ சமூகம் விஜயின் இந்த கருத்துக்கு எதிர்ப்புக்களை கடந்த காலங்களில் வெளியிட்டிருந்தனர்.

Srilanka, Politics, TVK, Vijay

பட மூலாதாரம், RISHI SENTHIL

படக்குறிப்பு, மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்

தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தமிழக வெற்றிக் கழகத்தை இலங்கையிலும் ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் சமூகத்தில் கலந்துரையாடப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு மக்களின் பிரச்னைகள், மலையக தமிழர்களின் பிரச்னைகள் தொடர்பிலும் தமிழக முதலமைச்சர் விஜயுடன் கலந்துரையாடல்களை நடத்த பல்வேறு தரப்பினர் முயற்சித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

''யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழர்களுக்கான தேசிய தலைவர் ஒருவர் இல்லாத சூழ்நிலையில், அந்த இடைவெளியை உலகத் தமிழர்களுக்கான நிரப்பும் இடத்தில் விஜய் உள்ளார்'' என்கிறார் மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்

இந்தியாவிற்கு வெளியில் விஜய் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தால் அதற்கான ஆதரவை வழங்க தாம் தயாராகவுள்ளதாக ரிஷி செந்தில் கூறுகின்றார்.

''புலம்பெயர்ந்த தேசங்களிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏராளமான தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் இந்திய வம்சாவளி மக்கள் பெருமளவு ஆதரவு கொடுத்தார்கள். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்து கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இலங்கையில் நானும் என்னை சார்ந்த இளைஞர்களும் ஆதரவு வழங்கியிருந்தோம்.'' என்கிறார் அவர்.

சிங்கள ஊடகவியலாளரான அமில சஞ்ஜீவ பாலசூரிய

பட மூலாதாரம், AMILA SANJEEWA BALASOORIYA

படக்குறிப்பு, சிங்கள ஊடகவியலாளரான அமில சஞ்ஜீவ பாலசூரிய

இலங்கையில் அரசியல் கட்சி தொடங்க வேண்டிய அவசியம் என்ன?

''பிரபல்யமான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்படுகின்றது என்றே இதனை கூற வேண்டியுள்ளது. இந்த இடத்தில் இரண்டு விடயங்களை கூறிக் கொள்ள வேண்டும். இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தோல்வியடைந்துள்ளனர். அதனாலேயே விஜயின் கட்சியை இலங்கைக்கு கொண்டு வர அவர்கள் முயற்சி செய்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.'' என்கிறார் சிங்கள ஊடகவியலாளரான அமில சஞ்ஜீவ பாலசூரிய.

''மற்றொரு விடயம், திறமையான, பிரபல்யமான நடிகரின் முகத்தை காண்பித்து எமது நாட்டிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர். இலங்கையில் சிறந்த வரலாற்று பின்புலத்தை கொண்ட அரசியல் கட்சிகள் இருக்கும் போது, இவ்வாறான கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிடுவோர் குறித்து ஆராய வேண்டும். இந்தியாவிலுள்ள கட்சியொன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படுமாக இருந்தால், அது பாரிய பிரச்னையாக காணப்படுகின்றது'' என்கிறார் அவர்.

வாய்ப்பு உள்ளதா?

''கட்சியொன்றை ஆரம்பிக்கின்றமையானது உடனடியாக சாத்தியமாகும் விடயம் இல்லை. இது இலங்கையில் மாத்திரம் நடக்கவில்லை. மலேசியாவை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கும் இந்த நிலைமை காணப்படுகின்றது. இதற்கு முன்னதாக சீமானுக்கு இப்படியான ஒரு நிலைமை இருந்தது. சீமானுக்கு இலங்கையை பிரிட்டன், கனடாவில் கூட அவருடன் இயங்கும் வகையிலான அரசியல் அமைப்புக்கள் இருந்தன. ஆனால், அது கட்சியாக மாறவில்லை. அது கட்சியாக மாற வேண்டும் என்றால், அவ்வாறான கட்டமைப்புக்கள் நேரடியாக இலங்கை போன்ற நாடுகளில் இல்லை.'' என்கிறார் சர்வதேச அரசியல் ஆய்வாளர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி

மேலும்,'' சீமானுக்கு இருந்ததை போன்ற ஆதரவுகள் விஜய்க்கு இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் - பாரதிய ஜனதா கட்சிக்கு இருந்த ஆதரவு கூட இருக்கலாம். ஆனால் விஜய்க்கு உள்ள செல்வாக்கு கட்சியாக மாறி இளைஞர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

TVK, Politics, Tamilnadu, Srilanka, Political party

பட மூலாதாரம், TVKHQ

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இலங்கையை பொருத்த வரையில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது என மக்கள் எதிர்பார்க்கின்றார்களா? என ஜனகன் விநாயகமூர்த்தியிடம் நாம் வினவினோம்.

''அரசியல் கட்சி என்று மட்டும் இல்லை. இலங்கையின் மொத்த அரசியலிலும் ஒரு மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு தேவைப்பாடு காணப்படுகின்றது. உலக அரசியலிலேயே மாற்றம் தேவைப்படுகின்றது. இவ்வளவு காலம் இருந்தது கொள்கை ரீதியான அரசியல். கட்சி, கட்சிக்கான கொள்கை, கொள்கைக்கான ஒரு அரசியல் என்ற நிலைமை காணப்பட்டது. அந்த காலக்கட்டம் இன்று மாற்றமடைந்து, செயற்பாட்டு அரசியலை நோக்கி நகர்கின்றது.

உலகம் முழுவதும் செயற்பாட்டு அரசியலை நோக்கி நகரக்கூடிய சூழ்நிலை தான் காணப்படுகின்றது. ஆகவே கட்சி அரசியல் உடைகின்றது. செயற்பாட்டை நோக்கி நகர்கின்றது. ஆகவே ஒரு செயற்பாட்டின் ஊடாக அரசியலை நகர்த்துவதாக இருந்தால், அதனை செய்து காட்டுவாராக இருந்தால் மக்கள் அவரை நோக்கி நகரக்கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.'' என்கிறார் அவர்

''இலங்கையிலும் இவ்வளவு காலம் கட்சி அரசியலை நோக்கமாக கொண்ட அரசியல் காணப்பட்டது. முஸ்லிம் அரசியலில் கூட கட்சி அரசியல் இருந்தது. இன்று கட்சி அரசியல் முடிவுக்கு வருகின்றது. ஆகவே பேச்சு அரசியலை விட, செயற்பாட்டு அரசியலுக்கு வலு அதிகமாக இருக்கும்" என அவர் கூறுகின்றார்.

இலங்கையில் வந்து விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றது என ஜனகன் விநாயகமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

சட்ட ரீதியாகவும் அதற்கான ஒரு கேள்விக்குறி இருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

எனினும், அமைப்பு ரீதியாக இயங்கி, இலங்கையிலுள்ள அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவு கொடுக்க முடியும் என அவர் கூறுகின்றார்.

''இலங்கையில் இந்த விடயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், சிங்கள மக்கள் மத்தியில் விஜய்க்கான ஆதரவு இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். கச்சத்தீவு வேண்டும் என்று சொன்னவுடனேயே விஜய் இலங்கைக்கு எதிரியாக மாறிவிட்டார். ஆகவே பெரும்பான்மை மக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு குறைவாகவே இருக்கின்றது.'' என்கிறார் அவர்.

''சாதி அரசியல், மத அரசியல், கட்சி அரசியல் என்ற அனைத்தையும் உடைத்து, இன்னுமொரு பயணம் இருக்கின்றது என்பதை விஜய் காட்டியிருக்கின்றார். அதை இலங்கையிலுள்ள இன்னுமொருவராலும் ஏற்படுத்த முடியும். இந்த வகையில் விஜய் இங்கு ஒருவருக்கு முன்மாதிரியாக திகழலாம்''

''விஜயின் தாக்கம் இலங்கை அரசியலில் இருக்க போவதில்லை. ஆனாலும், விஜயினால் ஏற்படுத்தப்பட்ட பயணம் தற்போது இங்குள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இலங்கை தமிழ் அரசியலிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு. ஏனென்றால், விஜய்க்காக அங்கு ஓட்டு போட்டார்கள். விஜயை உருவாக்கினார்கள். ஆனால் இங்கு விஜயை உருவாக்க முடியாது தானே. அதனால் மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு'' என அவர் குறிப்பிடுகின்றார்.

Srilanka, TVK, Political Party, Vijay, Bharath Arulsamy

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சட்டத்தரணி பாரத் அருள்சாமி

இலங்கையில் விஜய் நேரடியாக கட்சி துவங்க முடியுமா?

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியொன்றை இலங்கையில் ஆரம்பிக்க முடியும் என்ற போதிலும், விஜயின் நேரடி தலையீட்டில் அவ்வாறான கட்சியை ஆரம்பிக்க முடியாது என சட்டத்தரணி பாரத் அருள்சாமி தெரிவிக்கின்றார்.

''தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பிக்க முடியும். கட்சியொன்றை ஆரம்பிக்கும் உரிமை இலங்கை பிரஜைகளுக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு கட்சியொன்றை இலங்கையில் ஆரம்பிக்கும் அதிகாரம் அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை. எனினும், வெளிநாட்டு பிரஜைக்கு முதலீடு செய்து, இலங்கை பிரஜை ஊடாக கட்சியொன்றை ஆரம்பிக்கும் அதிகாரம் உள்ளது. கடந்த தேர்தலில் வெளிநாட்டு பிரஜாவுரிமையை கொண்ட அள்ளிராஜா சுபாஷ்கரன் கட்சியொன்றை ஆரம்பித்திருந்தார். அவர் முதலீடு செய்திருந்தார். ஆனால், அவரின் பெயரில் ஆரம்பிக்கவில்லை. அமெரிக்க பிரஜாவுரிமையை கொண்ட பஷில் ராஜபக்ஸவும் கட்சியொன்றை ஆரம்பித்தார். ஆனால், கட்சி அவரின் பெயரில் இல்லை. இவ்வாறு இலங்கை பிரஜையின் ஊடாக கட்சியொன்றை ஆரம்பிக்க முடியும். எனினும், விஜயிக்கு நேரடியாக கட்சியொன்றை ஆரம்பிக்க முடியாது." என பாரத் அருள்சாமி குறிப்பிடுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு