சிங்கப்பூர்: கட்டுப்பாடுகள், சோதனைகளை மீறி கடத்தி வரப்பட்ட குழந்தைகள் - கும்பல் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டெஸ்ஸா வோங்
- பதவி, ஆசிய டிஜிட்டல் செய்தியாளர்
- எழுதியவர், அஸ்துதேஸ்த்ரா அஜெங்ராஸ்த்ரி
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
டேவிட் மற்றும் அலி இருவரும் மார்கஸை முதன்முதலில் பார்த்தபோதே, அவன் தங்களின் மகனாகப் பிறக்க வேண்டியவன் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.
"என்னைப் பொறுத்தவரை அது முதல் பார்வையிலேயே ஏற்பட்ட ஈர்ப்பு" என்கிறார் டேவிட்.
அவர்களின் நீண்ட தத்தெடுப்புப் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு, இந்தோனீசியாவைச் சேர்ந்த அந்தக் குழந்தை அவர்களின் கைகளில் இருந்தது.
அந்தக் குடும்பம் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்கத் தயாராக இருந்தது.
ஆனால் இப்போது, பல ஆண்டுகளுக்குப் பிறகு, மார்கஸ் சிங்கப்பூருக்குக் கடத்தப்பட்டதாக நம்பப்படுவதால், அவனை இழக்கும் சாத்தியத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில் சிங்கப்பூரில் தத்தெடுப்பதற்காக இந்தோனீசியாவில் சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாகக் கூறப்படும் குறைந்தது 20 குழந்தைகளில் அவனும் ஒருவன்.
மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, தற்போது மேற்கு ஜாவாவில் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதாவது, தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை சிங்கப்பூரில் கழித்துள்ள மார்கஸ் மற்றும் பிற குழந்தைகள், தத்தெடுத்த பெற்றோருடனேயே வாழ வேண்டுமா அல்லது இந்தோனீசியாவில் உள்ள சொந்த (உயிரியல்) பெற்றோரிடம் திரும்பிச் செல்ல வேண்டுமா என்பதை அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
இந்தக் குழந்தைகளுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து இரு நாடுகளும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
டேவிட் மற்றும் அலிக்கு இந்த கடந்த சில மாதங்கள் மிகவும் வேதனை நிறைந்ததாக இருந்தன.
இந்நிலையில் , பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு, தங்கள் குழந்தைகளை விற்பனை செய்யும் பெற்றோரால் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் இந்தோனீசியாவின் குழந்தைக் கடத்தல் என்ற நீடித்த சிக்கலை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நுணுக்கமான சோதனைகளுக்குப் பெயர் பெற்ற சிங்கப்பூர், இந்த மனிதக் கடத்தலைக் கண்டறிய எப்படித் தவறியது, அதுமட்டுமின்றி இந்தத் தத்தெடுப்புகளில் சிலவற்றிற்கு எவ்வாறு ஒப்புதல் அளித்தது என்ற கேள்விகளையும் இது எழுப்பியுள்ளது.
மார்கஸைத் தங்களுடனேயே வைத்திருக்கும் வாய்ப்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று டேவிட் மற்றும் அலி அஞ்சுவதால், தங்களது புனைப்பெயர்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிபிசியிடம் தங்களின் கதையைப் பகிர்ந்துகொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
"அந்தக் கவலை எப்போதும் எங்களது மனதின் ஆழத்தில் இருந்துகொண்டே இருக்கிறது" என்று கூறும் டேவிட் ,
"மார்கஸ் எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படலாம் என்ற எண்ணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது"என்கிறார்.
'அவன் எங்களைப் பார்த்து புன்னகைத்தான்'
டேவிட் மற்றும் அலி இருவருக்கும் எப்போதுமே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
அலி பலமுறை வேதனைமிக்க கருச்சிதைவுகளை எதிர்கொண்ட பிறகு, அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர்.
ஆனால் சிங்கப்பூர் குழந்தையை தத்தெடுக்க அவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு தத்தெடுப்பு நிறுவனம் அவர்களுக்கு 142 என்ற வரிசை எண்ணைக் கொடுத்திருந்தது.
அதனால், இதே நிலையை எதிர்கொள்ளும் பல சிங்கப்பூர் மக்களைப் போலவே, அவர்களும் வெளிநாடுகளில் இருந்து குழந்தையைத் தத்தெடுக்க முயன்றனர்.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் தத்தெடுக்கப்படும் குழந்தைகளில் தோராயமாக மூன்றில் இரண்டு பங்கினர் வேறு இடங்களில், பொதுவாக அண்டை நாடுகளில் பிறந்தவர்களாக உள்ளனர் .
டேவிட் மற்றும் அலி இந்தோனீசியக் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.
சில வாரங்களுக்குப் பிறகு, அந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வீடியோ அழைப்பில், கேமராவிற்கு முன்னால் காட்டப்பட்ட ஒரு குழந்தையை அவர்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"எங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவனிடம் என்ன இருந்தது தெரியுமா? அவன் மிகவும் புத்திசாலி. அவன் எங்களைப் பார்த்து புன்னகைத்தான்" என்று நினைவு கூர்கிறார் டேவிட்.
அந்தத் தம்பதியினர் பல்லாயிரக்கணக்கான டாலர்களைச் செலுத்தினர், இந்தத் தொகை நிறுவனத்தின் கட்டணம், சட்டச் செலவுகள், குழந்தைக்கான செலவுகள் மற்றும் அக்குழந்தையைப் பெற்ற பெற்றோருக்குக் கொடுப்பதற்கான ஒரு "அடையாளத் தொகை" ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அவர்களிடம் கூறப்பட்டது.
சில மாதங்களுக்குள், மார்கஸ் சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டான்.
அவன் தங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட அந்த நொடியில், "நாங்கள் பதற்றமாகவும், பயமாகவும், ஆனால் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தோம்," என்று கூறிய டேவிட், "நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம், இதுதான் உண்மையான தொடக்கம் என்று கூறினோம்" என்கிறார் அலி.
சிங்கப்பூரில் மார்கஸின் தத்தெடுப்பு மிக விரைவாக அங்கீகரிக்கப்பட்டது, இறுதிக் கட்டம் அவனது குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதாக இருந்தது.
குடிவரவு அதிகாரிகள் அவர்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்தபோது, அவர்கள் நல்ல செய்தியை எதிர்பார்த்தனர்.
அதற்குப் பதிலாக, அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. குடியுரிமை விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மார்கஸ் அநேகமாக சிங்கப்பூருக்குள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது.
சிங்கப்பூர் அரசாங்கம் தங்களின் சோதனைகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று நினைத்த டேவிட், "அப்போதுதான் நான் கோபமடைந்தேன்" என்றார்.
" 'நீங்கள் உங்கள் கடமையைச் சரிவரச் செய்யவில்லையா? நீங்கள் அனைத்து சோதனைகளையும் செய்தீர்கள், இல்லையா? நீங்கள் எங்களை ஒரு கடினமான ஆனால் அவசியமான செயல்முறைக்கு உட்படுத்தினீர்கள், அதனால்தான் நாங்கள் அதற்குக் கட்டுப்பட்டோம்' என நான் அவர்களிடம் கூறினேன். அவர்களால் எங்களுக்குப் பதிலளிக்க முடியவில்லை"என்கிறார் டேவிட்.

பட மூலாதாரம், BBC Indonesian
மேற்கு ஜாவாவில் தற்போது மொத்தம் 19 பேர் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் குழந்தைகளைச் சட்டவிரோதமாக விலைக்கு வாங்கி, "சுரண்டல்" நோக்கத்திற்காக வெளிநாடுகளுக்குக் கடத்தியதாகவும், அதே நேரத்தில் அவை சட்டப்பூர்வமான தத்தெடுப்புகள் போலக் காட்டுவதற்காக ஆவணங்களை போலியாகத் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்தோனீசியச் சட்டத்தின்படி, ஒரு நபருக்குப் பணம் செலுத்துவதும், சுரண்டல் நோக்கத்திற்காக அந்த நபரை இடமாற்றம் செய்வதும் மனிதக் கடத்தலாக வரையறுக்கப்படுகிறது.
இருநாடுகளுக்கு இடையேயான தத்தெடுப்புகளுக்கு இந்தோனீசியாவில் கடுமையான விதிகளும் செயல்முறைகளும் உள்ளன, பிரதிவாதிகள் இவற்றை மீறிச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணையின் போது, அந்த 20 குழந்தைகளில் குறைந்தது 12 குழந்தைகள் ஏற்கனவே சிங்கப்பூருக்குள் நுழைந்துவிட்டது நீதிமன்றத்தில் தெரியவந்தது.
சிங்கப்பூர் அதிகாரிகள் இந்த எண்ணிக்கையை பிபிசியிடம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
தற்போது விசாரணையை எதிர்கொண்டு வருபவர்களில் ஒருவரான 'லி சியு லுவான்' என்ற இந்தோனேசியப் பெண் தான் இந்த கும்பலின் தலைவி என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தது 18,000 சிங்கப்பூர் டாலர்கள் (14,000 டாலர் ; 10,300 யூரோ) தருவதாக உறுதியளித்த குறைந்தது நான்கு சிங்கப்பூர் தொடர்புகளுக்கு, தத்தெடுப்புக்காகக் குழந்தைகளை வழங்கியதை லி ஒப்புக்கொண்டுள்ளார்.
தரகர்களாகச் செயல்படவும், குழந்தைகளைக் கண்டறியவும், குழந்தைகளைப் பராமரிக்கவும் மற்றும் ஆவணங்களை போலியாகத் தயாரிக்கவும் ஆட்களைச் சேர்த்ததாக லி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தத்தெடுப்பிற்காகத் தங்கள் குழந்தைகளைக் கொடுக்க விரும்பும் பெற்றோரைத் தேடி, தரகர்கள் சமூக ஊடகங்களை அலசியதாகக் கூறப்படுகிறது.
ஒரு சம்பவத்தில், ஒரு தரகர், குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் ஒரு பெண்ணாக நடித்து, ஒரு ஆணை அவரது பச்சிளம் மகனை தத்துக்கொடுக்க சம்மதிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
குழந்தைகள் பெறப்பட்டதும், அவர்கள் பொன்டியானாக்கில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பணியமர்த்தப்பட்ட செவிலித்தாய்களால் பராமரிக்கப்பட்டனர்.
பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் தத்தெடுப்பு ஆவணங்களைப் போலியாகத் தயாரிப்பதற்காகவே லி ஒருவரைத் பிரத்தியேகமாக வேலைக்கு அமர்த்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலர், ஆவணங்களில் குழந்தைகளின் சொந்த பெற்றோர் போல நடித்ததாகக் கூறப்படுகிறது.
போலி ஆவணங்களில் அவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டது மட்டுமின்றி, அவர்கள் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்களுடன் வீடியோ அழைப்புகளிலும் பேசியுள்ளனர்.
அவர்களுக்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோருகின்றனர்.

பட மூலாதாரம், BBC Indonesian
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளில் மார்கஸும் ஒருவர் என்பதற்கு, டேவிட் மற்றும் அலிக்கு அதிகாரிகளிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை.
ஆனால் பிபிசி அதற்கான தெளிவான ஆதாரங்களைக் கண்டறிந்து, அவற்றை அந்தத் தம்பதியினருடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
நீதிமன்ற ஆவணங்களை ஆய்வு செய்தபோது, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளின் பட்டியலில் மார்கஸின் முழு இந்தோனீசியப் பெயரும் இடம் பெற்றிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
விசாரணையில் உள்ள ஒரு பெண், சில குழந்தைகளின் உயிரியல் தாய் என்று பொய்யாக கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர், மார்கஸின் இந்தோனீசிய தத்தெடுப்பு ஆவணங்களில் அவனது தாயாகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இன்டர்போலின் இந்தோனீசியப் பிரிவு, இந்தக் குழந்தைகளைக் கையாண்ட சிங்கப்பூர் தத்தெடுப்பு நிறுவனத்தை அடையாளம் கண்டுள்ளது.
அது, டேவிட் மற்றும் அலிக்கு மார்கஸை வழங்கிய அதே நிறுவனம்தான்.
அந்த நிறுவனம் இன்னும் சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு வணிகமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிபிசி அந்த நிறுவனத்தின் உரிமையாளரைத் தொடர்பு கொள்ள முயன்றது, ஆனால் இன்னும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
இந்தோனீசிய நீதிமன்ற நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதைக் சுட்டிக்காட்டி, அந்த நிறுவனம் மற்றும் லி சியு லுவானின் சிங்கப்பூர் கூட்டாளிகள் என்று கூறப்படுபவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறதா என்ற பிபிசியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கச் சிங்கப்பூரின் உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
உள்துறை அமைச்சகமும் , சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கைகளை அது பிபிசிக்குச் சுட்டிக்காட்டியது.
அதில், விசாரணைகளுக்கு உதவும் வகையில் அவர்கள் இந்தோனீசியத் தரப்புடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சமீபத்திய வழக்கு பற்றிய செய்திகள் வெளியானதில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இது குறித்துத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரசு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே குழந்தைகள் தத்தெடுக்கப்படுவது அங்கீகரிக்கப்பட்டது என்றும், தத்தெடுத்த பெற்றோர்கள் "சட்டத்திற்கு இணங்க ஒவ்வொரு செயலையும் செய்த நிரபராதிகள்" என்றும் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், தத்தெடுப்பு நிறுவனங்கள் தான் தங்களின் குழந்தைகள் "முறையான ஆதாரங்களில்" இருந்து வருவதை உறுதி செய்வதற்கும் கடுமையான சோதனைகளைச் செய்வதற்கும் பொறுப்பானவர்கள் என்றும், தத்தெடுக்கும் பெற்றோர்களும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் வாதிட்டது.
மார்கஸ் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறு தங்களின் மனதில் ஒருமுறை கூடத் தோன்றியதில்லை என்று டேவிட்டும் அலியும் கூறுகின்றனர்.
தங்களால் இயன்றவரை தங்களின் பின்னணி சோதனைகளைச் செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் போதிய விவரம் இல்லாததால் அது வரம்புக்குட்பட்டதாகவே இருந்தது என்றும் அவர்கள் கூறினர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது அது தான் முதல் முறை.
மார்கஸைத் தத்தெடுப்பதற்கான ஒப்புதல் செயல்முறையின் போது தங்களைச் சுற்றியுள்ள அதிகாரிகள் முழுமையான சோதனைகளைச் செய்திருந்ததால், இந்தப் பொறுப்பு சிங்கப்பூர் அரசாங்கத்தையே சாரும் என்று இந்தத் தம்பதியினர் வாதிடுகின்றனர்.
"இது சட்டப்பூர்வமானதா என்று பார்ப்பதில் அதிகாரிகள் தான் நிபுணர்கள். அவர்கள் எத்தனையோ தத்தெடுப்பு நடவடிக்கைகளைக் கையாளுகிறார்கள். நாங்கள் அல்ல" என்று அலி கூறினார்.
சிங்கப்பூருக்குள் நுழைந்த குழந்தைகள் குறித்து ஏதேனும் சோதனைகள் நடத்தப்பட்டதா மற்றும் வெளிநாட்டுக் குழந்தைகளின் தத்தெடுப்புகள் குறித்து வழக்கமாக எப்படி சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பது போன்ற பிபிசியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் மறுத்துவிட்டது.
பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்குத் தாங்கள் ஆதரவை வழங்கி வருவதாகவும், அவர்களின் குழந்தைகளின் குடியுரிமை விண்ணப்பங்களைச் பரிசீலிப்பதில் "சில தாமதங்கள்" ஏற்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டிருந்த முந்தைய அறிக்கைகளை அந்த அமைச்சகம் சுட்டிக்காட்டியது.
தத்தெடுப்பு செயல்முறைகள் குறித்த மறுஆய்வை நடத்துவதாகவும் அந்த அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
குழந்தைகளுக்கான கள்ளச் சந்தை
இந்தோனீசியாவில், கடந்த சில ஆண்டுகளில் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட, குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குறைந்தது ஏழு கும்பல்களில் இந்த வழக்கும் ஒன்றாகும்.
யோக்யகர்த்தாவில் இருந்து செயல்பட்ட அத்தகைய ஒரு கும்பல், குறைந்தது 66 குழந்தைகளைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, 2021 மற்றும் 2024-க்கு இடையில் கடத்தப்பட்ட சிறு குழந்தைகளின் எண்ணிக்கை 27-லிருந்து 70-ஆக, அதாவது கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்துள்ளது.
இவை அவர்கள் கண்காணித்த வழக்குகளை மட்டுமே கணக்கில் கொள்கின்றன, உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
சில பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை விற்குமாறு கடத்தல்காரர்களால் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அதே வேளையில், மற்றவர்கள் தங்களது குழந்தைகளை வளர்க்கும் வசதி இல்லாததாலோ அல்லது பணத்தேவைக்காகவோ அவ்வாறு செய்ய முன்வந்துள்ளனர்.
மேற்கு ஜாவா நீதிமன்ற விசாரணையின் போது, 'தானி ஹிதாயத்' என்ற சாட்சி கூறுகையில், தனது மனைவி தங்களின் ஐந்தாவது குழந்தையைப் பெற்றெடுக்கவிருந்த போது தான் வேலையில்லாமல் இருந்ததாகவும், தங்களின் "நிதி மற்றும் பொருளாதார நிலைமை மேம்பட்டதாக இல்லை" என்றும் தெரிவித்தார்.
தத்தெடுப்புகளுக்கான ஃபேஸ்புக் குழு ஒன்றில் ஹிதாயத் இணைந்தார், அப்போது தனக்குக் குழந்தைகள் இல்லை என்று கூறி ஒரு பெண் அவரை அணுகினார். குழந்தை பிறந்தவுடன் அவர் அதைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அந்தப் பெண் ஹிதாயத்திற்கு ஐந்து மில்லியன் ருபியா (290 டாலர்; 214 யூரோ) கொடுத்ததுடன், மேலும் இரண்டு மில்லியன் தருவதாக உறுதியளித்தார். தனது மனைவி குணமடைவதற்கு அந்தப் பணம் தேவைப்பட்டதாக ஹிதாயத் கூறினார்.
அந்தப் பெண் இந்தக் கடத்தல் கும்பலின் தரகர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இறுதியில் ஹிதாயத்தான் அவர்களைக் காட்டிக் கொடுத்தார்.
தனக்கு வரவேண்டிய இரண்டாவது தவணைப் பணம் கிடைக்காதபோது, தனது மகன் கடத்தப்பட்டதாகக் கூறி ஹிதாயத் காவல்துறையிடம் சென்றார்.
காவல்துறையினர் அந்தப் பெண்ணைப் பிடித்து, அவரது தொலைபேசியை ஆய்வு செய்தபோது, அவர் சிங்கப்பூர் மற்றும் இந்தோனீசியாவில் தத்தெடுப்பதற்காக மேலும் பல குழந்தைகளை ஏற்பாடு செய்திருந்ததும் தெரியவந்தது.
ஹிதாயத்தின் மகன் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது சமூக நலத்துறையின் பராமரிப்பில் உள்ளார். அந்தக் குழந்தை சிங்கப்பூருக்கு அனுப்பப்படவிருந்த 20 குழந்தைகளில் ஒரு குழந்தை அல்ல.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளின் உயிரியல் பெற்றோர் மீது விசாரணை நடத்தப்படுமா என்று இந்தோனீசியக் காவல்துறையிடம் பிபிசி கேட்டுள்ளது.
இதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விற்கத் தூண்டும் மூலக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தீர்வு காண இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளும் ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
வறுமை, தாய்மார்களுக்குப் போதிய ஆதரவு இல்லாமை, அரசாங்க உதவிகளைப் பெறுவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் திருமணத்திற்கு வெளியே குழந்தை பெற்றுக் கொள்வதால் ஏற்படும் கலாசார அவப்பெயர் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தோனீசியாவின் கிராமப்புறப் பகுதிகளில் தத்தெடுப்பு குறித்து மிகவும் சாதாரணமான ஓர் அணுகுமுறையும் நிலவுகிறது.
அங்கு முறையான தத்தெடுப்பு செயல்முறைகள் இன்றி, சிறு குழந்தைகளை உறவினர்களுக்கோ அல்லது அண்டை வீட்டாருக்கோ கொடுப்பது கலாசார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
எனவே, கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களில் சிலர் தங்கள் செயல்களைப் பிறர்நலன் கருதிச் செய்யும் செயல்களாகச் சித்தரிக்க முனைகின்றனர்.
மேற்கு ஜாவா வழக்கில் உள்ள பிரதிவாதிகள், தாங்கள் "குடும்பங்களுக்கு உதவி" செய்ததாகவும், தாங்கள் செய்தது சட்டவிரோதமானது என்று தங்களுக்குத் தெரியாது என்றும் வாதிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் லி சியு லுவான் கூறுகையில், தத்தெடுப்புக்காகக் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது "தவறு என்று தனக்குத் தெரியாது" என்றும், தனது சிங்கப்பூர் கூட்டாளி இது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்று தன்னை நம்ப வைத்ததாகவும் கூறினார்.
"யார் குழந்தைகளை விற்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிப்பது மட்டுமே இங்கு முக்கியமல்ல" என்கிறார் மேற்கு ஜாவாவைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலர் எகோ கிரிஸ்வாண்டோ .
முக்கியமான பிரச்னை என்னவென்றால், "குழந்தைகள் இறுதியில் வர்த்தகப் பொருட்களாக நடத்தப்படுகிறார்கள். எனவே, இதற்கான காரணத்தைத்தான் நாம் ஆராய வேண்டும்"என்கிறார்.
குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் கடத்தலைத் தடை செய்வதற்கும் இந்தோனீசியாவில் ஏராளமான சட்டங்கள் இருந்தாலும், அவை தொடர்ந்து முறையாக அமல்படுத்தப்படாததே இன்னும் ஒரு பிரச்னையாக நீடிக்கிறது என்று கிரிஸ்வாண்டோ குறிப்பிடுகிறார்.
சுயாதீன உரிமை அமைப்பான இந்தோனீசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஐ ரஹ்மாயந்தி இதுகுறித்து கூறுகையில், தேவையற்ற குழந்தைகளை ஒப்படைப்பதற்கான "பாதுகாப்பான இடங்களையோ அல்லது சேவைகளையோ வழங்குவதற்கான திறனை அரசாங்கம் இன்னும் உருவாக்கவில்லை" என்றார்.
"பேபி பாக்ஸ்கள்" என்று அழைக்கப்படும் இதுபோன்ற வசதிகள் இந்தோனீசியாவில் மிகவும் அரிதாகவே உள்ளன.
இந்த இடைவெளியைப் பயன்படுத்தி ஒரு கள்ளச் சந்தை உருவாகியுள்ளது, அங்கு கடத்தல்காரர்கள் "மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண சமூக ஊடகங்களை வெளிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இலவசப் பிரசவம், பணத்துடன் வீடு திரும்புதல், குழந்தையைத் தங்களுடன் அழைத்து வருதல் போன்றவை இதில் அடங்கும்" என்று ரஹ்மயந்தி கூறினார்.
ரஹ்மாயந்தி மற்றும் கிரிஸ்வாண்டோவின் கருத்துகளுக்குப் பதிலளிக்குமாறும், குழந்தைக் கடத்தலைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் இந்தோனீசியாவின் பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் பிபிசி கேட்டுள்ளது.
அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி
டேவிட்டும் அலியும் வழக்கின் தீர்ப்புக்காகப் பதற்றத்துடன் காத்திருக்கும் வேளையில், மார்கஸுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் என்ன நடக்கும் என்ற ஒரு முக்கியக் கேள்விக்கு மட்டும் விடை கிடைக்காமல் உள்ளது.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகள் கொள்கை அடிப்படையில் அவர்களின் சொந்த பெற்றோரிடம் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இந்தோனீசிய மனித உரிமை ஆர்வலர்களும் அதிகாரிகளும் வாதிடுகின்றனர்.
இது "இந்தோனீசியாவின் தேசியப் பெருமை" சார்ந்த விஷயம் என்று ஒரு இந்தோனீசியக் காவல் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், இந்த விசாரணை முடிந்து குழந்தைகளின் தலைவிதி குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் நேரத்திற்குள், அவர்கள் சிங்கப்பூரில் உள்ள தங்களைத் தத்தெடுத்த பெற்றோரின் பராமரிப்பில் பல ஆண்டுகளைக் கழித்திருப்பார்கள்.
சிங்கப்பூர் குழந்தைகள் சங்கத்தின் மூத்த மருத்துவ உளவியலாளர் ஜெரமி ஹெங் கூறுகையில், ஒரு குழந்தையின் ஆரம்பகால வாழ்க்கையில் பலதரப்பட்ட இடையூறுகளால் ஏற்படும் மன அழுத்தம், "மூளை வளர்ச்சி, உணர்ச்சி மேலாண்மை, கற்றல் மற்றும் பிணைப்புப் பாதுகாப்பு ஆகியவற்றைப் எதிர்மறையாகப் பாதிக்கலாம்" என்றார்.
இதனால் அதிர்ச்சி தொடர்பான அறிகுறிகள் மற்றும் மனநலச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான அபாயங்களும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
குழந்தைகள் சிங்கப்பூரிலேயே தங்குவார்களா அல்லது இந்தோனீசியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா என்று கேட்கப்பட்டபோது சிங்கப்பூர் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இந்தோனீசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யுவோன் மெவெங்க்காங் பிபிசியிடம் கூறுகையில், அவர்கள் "குழந்தையின் நலனைச் சிறந்த முறையில் பாதுகாக்கும் கொள்கையின் அடிப்படையில் குழந்தைப் பாதுகாப்பிற்கு" முன்னுரிமை அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
ஒரு குழந்தைக்காக இவ்வளவு காலம் காத்திருந்த பிறகு, டேவிட்டும் அலியும் மார்கஸை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
"எங்கள் குழந்தையை எங்களுடனேயே வைத்திருப்பதற்குச் சட்டப்பூர்வமாக எங்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ, அவ்வளவு தூரம் நாங்கள் செல்வோம்" என்கிறார் டேவிட் .
மார்கஸ் இந்தோனீசியாவுக்குத் திரும்ப வேண்டியிருந்தால், அவனைச் சட்டப்பூர்வமாகத் தத்தெடுப்பதற்கான ஒரு வழியைத் தான் கண்டுபிடிப்பேன் என்றும் டேவிட் கூறினார்.
"நான் அவனை விட்டுவிட மாட்டேன்" என்று உறுதி கூறும் டேவிட், "எந்த பெற்றோரும் இறுதிவரை போராடுவார்கள்" என்றார்.
கூடுதல் தகவல் : பிபிசி இந்தோனீசியாவிற்காக யுலியா சபுத்ரா மற்றும் அசியந்தி பஹ்லேவி
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































