'திகில் படம் போன்றது' - நீரின் மூலம் மூளையை தாக்கும் அமீபா உலகம் முழுவதும் பரவும் ஆபத்தா?

பட மூலாதாரம், Bruno da Rocha-Azevedo, Herbert B. Tanowitz and Francine Marciano-Cabral / Interdisciplinary Perspectives on Infectious Diseases
- எழுதியவர், இசபெல் ஷா
- பதவி, குளோபல் ஹெல்த்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கோஸ்டாரிகாவிற்கு மகிழ்ச்சியான குடும்பச் சுற்றுலாவாக அமைந்திருக்க வேண்டிய ஒரு பயணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே, தனது ஒரே மகன் இறந்ததால் ஸ்டீவ் ஸ்மெல்ஸ்கி அழுதுகொண்டிருந்தார்.
அப்போது 11 வயதாக இருந்த ஜோர்டான், பொதுவாக "மூளையை உண்ணும் அமீபா" என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபோவ்லெரியால் ஏற்பட்ட மூளைத் தொற்றால் இறந்து போனார்.
பொதுவாக வெப்பமான ஏரிகள், வெந்நீர் ஊற்றுகள் மற்றும் கைவிடப்பட்ட நீச்சல் குளங்களில் காணப்படும் இந்த அமீபா, மக்கள் தண்ணீரில் குதிக்கும் போது நாசித் துவாரங்கள் வழியாக உடலுக்குள் நுழைகிறது, மூளை திசுக்களை வேகமாகத் தாக்கத் தொடங்குகிறது.
"ஜோர்டான் ஒரு நாள், ஒரே ஒரு முறை நீந்தினான், [இப்போது] அவன் இல்லை," என்று 67 வயதான ஸ்டீவ் பிபிசி உலக சேவையிடம் கூறுகிறார்.
கடந்த ஆண்டு, இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நெக்லேரியா ஃபோவ்லெரி தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இது உலகளவில் பதிவு செய்யப்பட்ட மிகப்பாரிய பரவலாகும். மேலும் சமீபத்திய மாதங்களிலும் இந்தியாவில் பாதிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு முன்பு உலகம் முழுவதும் 500-க்கும் குறைவான பாதிப்புகளே கண்டறியப்பட்டிருந்தன.
இந்தத் தொற்றின் பரவல் ஆராய்ச்சியாளர்களிடையே கவலைகளை மீண்டும் தூண்டியுள்ளது.
"எதிர்காலத்தில் இன்னும் அதிகமான பாதிப்புகள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதை நாம் உலகம் முழுவதும் காண்போம்," என்கிறார் பிரிட்டனில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு ஒட்டுண்ணியியல் வல்லுநர் அனஸ்டாசியோஸ் சாவுசிஸ்.

பட மூலாதாரம், Steve Smelski
'இது உங்கள் மனதை உங்களை விட்டுப் பிரிக்கிறது'
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீவ், கோஸ்டாரிகாவில் தாங்கள் இருந்த ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஒரு இயற்கை வெந்நீர் ஊற்றில் தனது மகனுடன் சேர்ந்து பல மணி நேரம் வாட்டர் ஸ்லைடுகளில் விளையாடிக் கழித்திருந்தார், அப்போதுதான் ஜோர்டானுக்கு தலைவலி ஏற்படத் தொடங்கியது.
விமானம் மூலம் வீட்டிற்குத் திரும்பிய பிறகு, வலி மேலும் மோசமடைந்தது மற்றும் ஜோர்டான் வாந்தி எடுக்கத் தொடங்கினார். அவரது பெற்றோர் அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர், அங்கு அவர் மாயத்தோற்றங்களை காணத் தொடங்கினார். கூரையில் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் காண முடிகிறது என்று அவர்களிடம் கூறினார்.
"அவன் எங்களைப் பார்த்தான், ஆனால் நாங்கள் யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் யார் என்று கூட அவனுக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை," என்று ஸ்டீவ் நினைவு கூர்கிறார்.
ஜோர்டானுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த போதே, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் பின்னர் இறந்து போனார்.
"நீந்தியதில் இருந்து ஏழரை நாட்களில் அவன் இல்லாமல் போனான்," என்று ஸ்டீவ் கூறுகிறார். "இதற்கு முன்பு அவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவன் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தான்."
நெக்லேரியா ஃபோவ்லெரியால் ஏற்படும் மூளைத் தொற்றான பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செஃபாலிடிஸ் (பிஏஎம்) காரணமாக ஜோர்டான் இறந்தார்.
பிஏஎம் தொற்றால் பாதிக்கப்பட்ட பலரைப் போலவே, ஜோர்டானுக்கும் ஆரம்பத்தில் மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல்) இருப்பதாகவே கருதப்பட்டது, ஏனெனில் இந்த இரண்டு நிலைகளின் அறிகுறிகளும் ஆரம்பக் கட்டங்களில் ஒரே மாதிரியாகத் தோன்றலாம்.
மருத்துவர்கள் இதற்கான காரணங்களை ஒன்றிணைத்துக் கண்டறிவதற்குள், காலம் கடந்துவிட்டது. அந்தத் தொற்று அவரது மூளையில் கடுமையான வீக்கத்தைத் தூண்டி, மீட்டெடுக்க முடியாத சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.
"இது உங்கள் எண்ணங்களை எடுத்துக்கொள்கிறது. நீங்கள் யார் என்பதையே இது உங்களிடமிருந்து பறித்து விடுகிறது," என்கிறார் ஸ்டீவ்.

பட மூலாதாரம், Steve Smeski
புதிய இடங்களில் நாம் இதை ஏன் காண்கிறோம்?
தொற்று மற்றும் பொதுச் சுகாதாரம் குறித்த ஆய்விதழில் வெளியிடப்பட்ட 2025-ஆம் ஆண்டின் மதிப்பாய்வின்படி, 1962 மற்றும் 2023-க்கு இடையில், உலகளவில் 488 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவை பெரும்பாலும் தெற்கு அமெரிக்க மாகாணங்கள், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டன. அவர்களில் சுமார் 97% பேர் இறந்துவிட்டனர்.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளில், இந்த பாதிப்புகளில் கணிசமான விகிதம் இத்தாலி மற்றும் பெல்ஜியம் உட்பட வட அரைக்கோளத்தில் உள்ள நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் மினசோட்டா உள்ளிட்ட குளிர்ந்த வட அமெரிக்காவிலும் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் கடந்த ஆண்டு ஸ்லோவாக்கியா தனது முதல் உறுதிப்படுத்தப்பட்ட நெக்லேரியா ஃபோவ்லெரி தொற்றைப் பதிவு செய்தது.
இந்த அமீபாவுடன் பொதுவாக தொடர்புபடுத்தப்படும் ஏரிகள் மற்றும் ஆறுகளைத் தாண்டிய இடங்களிலும் பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன
தைவானில், 2023ஆம் ஆண்டு உட்புற சர்ஃபிங் மையம் ஒன்றில் நெக்லேரியா ஃபோவ்லெரி பாதிப்புக்கு ஆளான பிறகு ஒரு நபர் இறந்தார். அதே ஆண்டில் அமெரிக்காவில், மாசுபட்ட ஸ்பிளாஷ் பேட் எனப்படும் நீர் விளையாட்டுத் தளத்தில் இந்த அமீபா பாதிப்புக்கு ஆளான பிறகு ஒரு குழந்தை உயிரிழந்தது.
காலநிலை மாற்றம் காரணமாக ஏரிகள் மற்றும் குளங்கள் அதிக வெப்பமடைவதால், இந்த அமீபா ஒரு காலத்தில் அது உயிர்வாழ முடியாத அளவுக்குக் குளிராக இருந்த பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
"தண்ணீர் வெப்பமடையும் போது, [இந்த அமீபா] அதிக சுறுசுறுப்பாக மாறும்," என்கிறார் சாவுசிஸ். "அப்போது பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக நீரில் இறங்கும் மக்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும்."
இதனால் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்றும், ஆனால் அதிகரித்து வரும் ஆபத்து குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், இந்த அமீபாவைக் கண்டறியும் திறனில் விஞ்ஞானிகள் முன்னேற்றம் அடைந்துள்ளதால், பதிவாகும் பாதிப்பு சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
"இதன் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே இருந்திருக்கலாம், இவற்றை எவ்வாறு சோதிப்பது என்று இப்போது நாம் அறிந்திருப்பதால் தான் இந்த எண்ணிக்கைகள் அதிகரிப்பதை நாம் தற்போது உணர்கிறோம் என்பது எனது கருதுகோள்," என்று சாவுசிஸ் கூறுகிறார்.
குழந்தைகள் ஏன் அதிக ஆபத்தில் உள்ளனர்?
வல்லுநர்களின் கூற்றுப்படி, பெரியவர்களை விடக் குழந்தைகள் நெக்லேரியா ஃபோவ்லெரியால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
"இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி வயது 12. ஏனெனில் குழந்தைகள் வெதுவெதுப்பான நீரில் விளையாடுவதை விரும்புகிறார்கள்," என்று வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தின் நீர் அறிவியல் நிபுணர் பேராசிரியர் இயன் ரைட் கூறுகிறார். "இது மிகவும் கொடூரமானது."
இளைய வயதினருக்கு மூக்கிற்கும் மூளைக்கும் இடையே உள்ள தடையை இந்த அமீபா கடப்பது எளிதாக இருக்கக்கூடும் என்பதால் குழந்தைகள் இந்தத் தொற்றுக்கு ஆளாவதற்கான அதிக ஆபத்தில் இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.
"இது ஒரு கெட்ட கனவு, ஒரு திகில் படம் அல்லது ஸ்டீபன் கிங்கின் நாவல் போன்றது" என்று ரைட் கூறுகிறார்.
"உங்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, ஆனால் அது ஏற்பட்டால், நீங்கள் இறக்க நேரிடலாம்."
ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்தால், மூளையில் உள்ள வீக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுடன் சேர்த்து, மருந்துகளின் கலவையைக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முயல்கின்றனர். இருப்பினும், இதிலிருந்து உயிர் பிழைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே உள்ளது.
ஆனால் இந்தியாவின் கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட தொற்றுப் பரவல், இந்த நோய் எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்த அனுமானங்களுக்குச் சவால் விடுத்துள்ளது.
தொற்று பாதிப்பு அறியப்பட்ட 200 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்துள்ளனர். இது வரலாற்று ரீதியான உயிர் பிழைப்பு விகிதமான சுமார் 3%-ஐ விட மிக அதிகமாகும் என்று கம்யூனிகேஷன்ஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
இந்தக் கண்டுபிடிப்புகள், மூளையை உண்ணும் அமீபாவால் ஏற்படும் தொற்றுகள் முன்பு நினைத்தது போல குணப்படுத்த முடியாதவை அல்ல என்பதை உணர்த்துகின்றன.
முன்கூட்டியே கண்டறிதல், மருத்துவப் பணியாளர்களிடையே அதிக விழிப்புணர்வு மற்றும் மிகவும் சீரான சிகிச்சை முறைகள் ஆகியவை இந்த மேம்பட்ட முடிவுகளுக்குப் பங்களித்திருக்க வாய்ப்புள்ளது என்று இந்த ஆய்வின் பின்னணியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி
நீரில் விளையாடும்போது மட்டுமல்லாமல், ஒரு நபர் நாசி கழுவும் அமைப்பை பயன்படுத்தும் போதும் நெக்லேரியா ஃபோவ்லெரி உடலுக்குள் நுழையலாம். இவை பொதுவாக சளி, சைனஸ் தொற்றுகள் அல்லது ஒவ்வாமை அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறப் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆரோக்கியமாக இருந்த 71 வயது பெண்மணி ஒருவர், மோட்டார் ஹோமில் இருந்து பெறப்பட்ட குழாய் நீரைக் கொண்டு நாசி கழுவும் சாதனத்தை நிரப்பிப் பயன்படுத்திய இரண்டு வாரங்களுக்குள் இறந்து போனார்.
சடங்கு ரீதியான நாசிச் சுத்திகரிப்பு என்பது இஸ்லாம் உள்ளிட்ட மத வழிபாட்டு முறைகளின் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் தோன்றிய முழுமையான மருத்துவ முறையான ஆயுர்வேதம் போன்ற பிற நடைமுறைகளின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
ஏற்கனவே மிகக் குறைவாக இருக்கும் இந்த ஆபத்தை மேலும் குறைக்க எளிய வழிமுறைகள் உள்ளன.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நாசிச் சுத்திகரிப்புக்கு தொற்று நீக்கப்பட்ட, காய்ச்சி வடிகட்டிய அல்லது ஏற்கனவே காய்ச்சிக் குளிரூட்டப்பட்ட நீரைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறது, ஏனெனில் மாசுபட்ட குழாய் நீர் இத்தகைய அரிதான தொற்றுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.
வெதுவெதுப்பான நன்னீரில் நீந்தும்போது, மூக்கிற்குள் தண்ணீர் வலுக்கட்டாயமாக நுழைவதற்கான ஆபத்தைக் குறைக்க வேண்டும் என்று அந்த அமைப்பு பரிந்துரைக்கிறது. இதில் தண்ணீரில் குதிக்கும் போது அல்லது மூழ்கும் போது உங்கள் மூக்கைப் பிடித்துக் கொள்வது அல்லது மூக்குக் கிளிப்பைப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.
"சந்தேகமாக இருந்தால், உங்கள் தலையைத் தண்ணீருக்கு அடியில் கொண்டுபோகவேண்டாம்," என்று ரைட் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































