தமிழில் ஆஷா போஸ்லே உணர்வுப்பூர்வமாக பாடியது எப்படி? நினைவுகளை பகிரும் திரையுலகினர்

ஆஷா போஸ்லே

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்திய திரையுலகில் நீங்கா இடம் பிடித்த பாடல்களை பாடியுள்ள மறைந்த பாடகி ஆஷா போஸ்லே, தமிழிலும் பிரபலமான பல பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் இசையில் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளன. தமிழில் 20க்கும் மேற்பட்ட பாடல்களை ஆஷா போஸ்லே பாடியுள்ளார், அந்த பாடல்கள் ஒவ்வொன்றும் வெவேறு ரகமானவை. பாரம்பரிய இசை, ராப், ஜாஸ், கஸல் பாடல்கள் என பலவித பாடல்கள் ஆஷா போஸ்லே தன் தனித்துவமான குரலால் பாடியுள்ளார்.

1990-ஆம் ஆண்டில் பஞ்சு அருணாசலம் இயக்கி வெளியான புதுப்பாட்டு படத்தில்தான் ஆஷா போஸ்லே தமிழில் தன் முதல் பாடலை பாடினார். அப்படத்தில், 'எங்க ஊரு காதல் பத்தி என்ன நினைக்கிற' எனும் பாடலை இளையராஜாவும் ஆஷா போஸ்லேவும் இணைந்து பாடியிருப்பார்கள். வெளிநாட்டிலிருந்து திரும்பிய பெண்ணும் கதாநாயகனும் சேர்ந்து பாடுவது போன்று இந்த பாடல் அமையப் பெற்றிருக்கும். இப்பாடலை கங்கை அமரன் எழுதினார்.

அதிலிருந்து அவர் இளையராஜா இசையில் பாடிய பாடல்கள் பலவும் இன்றும் நிலைத்திருக்கின்றன. 'செண்பகமே, செண்பகமே' (எங்க ஊரு பாட்டுக்காரன்) , ' ஓ, பட்டர்ஃபிளை' (மீரா), 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' (ஹேராம்), 'சாத்து நட சாத்து' (சேதுபதி ஐபிஎஸ்) உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழிலும் பாடல்களை பாடியுள்ளார். இருவர் படத்தில் 'வெண்ணிலா வெண்ணிலா', அலைபாயுதே படத்தில் 'செப்டம்பர் மாதம்' ஆகிய பாடல்கள் ஆஷா பாடியவை.

வித்யாசாகர் இசையில் ‘சந்திரமுகி' திரைப்படத்தில் 'கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம்' என்ற பாடலை பாடியுள்ளார்.

ஆஷா போஸ்லேவுடன் முதல் சந்திப்பு - பாடகி மின்மினி

தமிழ் திரையுலகில் பாடகி மின்மினியின் பயணம் ஆஷா போஸ்லே முன்னிலையில் தொடங்கியது என்று சொல்லலாம். ஆஷா போஸ்லேவை முதன்முதலில் தான் சந்தித்த அனுபவத்தை பாடகி மின்மினி பகிர்ந்துகொண்டார்.

"முதன்முதலாக நான் இளையராஜாவை அப்போதுதான் சந்திக்கிறேன். சென்னையில் இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்றபோதுதான் ஆஷா போஸ்லே மீரா படத்துக்காக 'ஓ பட்டர்ஃபிளை' பாடலை பாடிக்கொண்டிருந்தார். அவரை பார்த்தது ஒரு கனவு போன்று இருந்தது. எனக்கு அப்போது 20 வயது. என்னை சுற்றி இளையராஜா, ஆஷா போஸ்லே போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். எனக்கு அப்போது இளையராஜா கூட தெரியாது. ஆனால், ஆஷா போஸ்லேவை தெரியும். அவர் எப்படி பாடுவார் என்பதை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாடல் பதிவு செய்யப்படும் இடத்தில்தான் நான் இருந்தேன். சிறுவயதிலிருந்தே ஆஷா போஸ்லே என்றால் மிகவும் பிடிக்கும். அவருடைய இந்தி பாடல்களை கேட்டுத்தான் பாட வேண்டும் என்ற ஆசை தோன்றியது" என்கிறார் மின்மிணி.

"என்னை ஆஷா போஸ்லேவிடம் அறிமுகப்படுத்திய போது என் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார். அவ்வளவுதான், எனக்கு அது போதுமே. என் பெயரைக் கூட நான் கூறவில்லை. அதன்பின் நான் அவரை சந்தித்தது இல்லை." என்றார்.

அன்றைய தினமே பாடகி மின்மினிக்கு குரல் தேர்வு நடந்தது. மீரா திரைப்படத்திலேயே 'லவ்வுன்னா லவ்வு' பாடலை மின்மினி பாடினார்.

"தமிழில் அவர் பாடியதில் 'செண்பகமே செண்பகமே' பாடல் பிடிக்கும். போஸ்லேவின் பாடல்களை கேட்கும்போது நம் மன கண்ணில் காட்சிகள் விரியும். சிறுவயதிலிருந்து அவருடைய கஸல் பாடல்கள் பிடிக்கும். தேன் மாதிரி இனிமையான குரல் அவருக்கு." என்கிறார் பாடகி மின்மினி.

சகோதரி லதா மங்கேஷ்கருடன் ஆஷா போஸ்லே

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சகோதரி லதா மங்கேஷ்கருடன் ஆஷா போஸ்லே

'தாய்மொழி அல்லாத தமிழில் உணர்வுப்பூர்வமாக பாடிய ஆஷா போஸ்லே'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பாடகி சுஜாதாவுக்கும் ஆஷா போஸ்லேவுக்கும் இசை ரீதியாக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆஷா போஸ்லே இந்தியில் பாடிய பாடல்கள் பலவற்றை சுஜாதா தான் தமிழில் பாடியுள்ளார்.

"ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடிய இந்தி பாடல்கள் பலவற்றை நான் தான் தமிழில் பாடியுள்ளேன். அது எனக்கு மிகப்பெரிய பாக்கியம். ரங்கீலா திரைப்படத்தில் வரும் 'ரங்கீலா ரங்கீலா' எனும் பாடலை தமிழில் நான் பாடினேன். 'தாள்' (Taal) படம் 'தாளம்' என தமிழில் ரீமேக் செய்யப்பட்டபோது, இந்தியில் ஆஷா போஸ்லே பாடிய பாடல்களை நான் தமிழில் பாடினேன். 'காதல் இல்லாமலே', 'வா மன்னவா' போன்ற பாடல்களை அப்படத்தில் பாடினேன். அதேபோன்று, சந்திரமுகி திரைப்படத்தில் 'கொஞ்ச நேரம்' பாடலை நான் தெலுங்கில் பாடினேன். ரன் திரைப்படத்தில் 'காதல் பிசாசே' பாடலை ஆஷா போஸ்லேவின் சாயலில் பாடுமாறு வித்யாசாகர் என்னிடம் கூறினார். அதனால், அவர் பாடிய பாடல்களில் அவர் எப்படி வார்த்தைகளை உச்சரிப்பார் என்பதையெல்லாம் உற்றுகவனித்து, அந்த பாடலை பாடினேன்." என்கிறார் சுஜாதா.

"நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. ஒருமுறைதான் அவரை நேரில் சந்தித்துள்ளேன். தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியொன்றில் அவர் விருந்தினராக கலந்துகொண்டார். அன்றைக்குதான் அவரை சந்தித்தேன். அப்போது, 'உங்களை பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன்" என என்னிடம் கூறினார். அதுவே எனக்கு மிகப்பெரிய விஷயம், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பாடல் சம்பந்தமாக பல விஷயங்களை குழந்தைகளுக்கு அந்த நிகழ்ச்சியில் கூறினார்." என்கிறார் சுஜாதா.

"என் பாடல்களில் அவருடைய தாக்கம் அதிகம். ஒவ்வொரு பாடலுக்கும் என்ன தேவையோ அது அவரின் பாடல்களில் இருக்கும். ஒவ்வொரு பாடலிலும் அவருடைய அடையாளம் இருக்கும். அவருடைய பாடல்கள் எல்லாமே பிடிக்கும். குறிப்பாக. 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' என்ற பாடல். அவர்தான் அந்த பாடலே எனும் அளவுக்கு பாடியிருப்பார். தமிழ் மட்டுமல்ல எந்த மொழி பாடலாக இருந்தாலும் வெறும் வரிகளை படித்து மட்டும் அவர் பாடுவதில்லை, அவற்றை உள்வாங்கி பாடியிருப்பார். அது கடினமான ஒன்று." என்றார் சுஜாதா.

ஆஷா போஸ்லேவின் தமிழ் உச்சரிப்பு

ஆரம்பத்தில் ஆஷா போஸ்லேவுக்கு தமிழ் உச்சரிப்பில் சிரமங்கள் இருந்ததாக கூறுகிறார் பாடலாசிரியர் கங்கை அமரன். ஆஷா போஸ்லேவின் முதல் பாடலான 'எங்க ஊரு காதல் பத்தி என்ன நினைக்கிற', 'செண்பகமே செண்பகமே' உள்ளிட்ட பாடல்களை கங்கை அமரன் தான் எழுதியுள்ளார்.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "செண்பகமே என்பதை 'செண்புகமே' என்றும் சந்தனமே என்பதை 'சந்துனம்' என்றும் அவர் ஆரம்பத்தில் உச்சரித்ததாக" கூறியுள்ளார்.

செண்பகமே பாடலை ஆஷா போஸ்லேவை பாட வைக்க இளையராஜா தயங்கியதாகவும் அவர் அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

ஆனால், 'செண்பகமே' பாடல் படத்தில் மூன்று விதங்களில் வந்தாலும், அதில் ஆஷா போஸ்லே பாடியதுதான் அதிக புகழ்பெற்றது என்கிறார் இசை விமர்சகரும் நடிகருமான ஷாஜி சென்.

"ஆஷா போஸ்லேவுக்கு மொழியை கிரகிப்பதில் பிரச்னைகள் இருந்தாலும் தமிழில் பல பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளன. 'செண்பகமே செண்பகமே' பாடலை ஆஷா போஸ்லே ஒருவிதமாகவும், மனோ, சுனந்தா ஆகிய பாடகர்கள் வெவ்வேறு விதங்களிலும் பாடியிருப்பார்கள். அவற்றில், ஆஷா போஸ்லே பாடியதுதான் மிகப்பெரியளவில் ஹிட்டானது. உச்சரிப்பில் பிரச்னைகள் இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான பாணி அவருடையது. தமிழ் பாடலை அவருடைய மொழியில் எழுதி பாடுவது சவாலானது. தமிழில் 'ழ' உச்சரிப்பு கடினம். ஆனால், அவரை பொறுத்தவரை சர்வசாதாரணமாக செய்வது போன்று இருக்கும். மிகக்குறுகிய காலத்திலேயே அவர் கற்றுக்கொள்வார் என அறிந்திருக்கிறேன்" என்றார் ஷாஜி.

"தமிழில் குறைவாகவே பாடியிருந்தாலும் பல பன்முகத்தன்மை வாய்ந்த பாடல்களை அவர் பாடியுள்ளார். ஆஷா போஸ்லே பாடினால் நன்றாக இருக்கும் என இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்கள் நினைத்துள்ளனர்." என்கிறார் ஷாஜி.

காபரே, கிளப், காமம் சார்ந்த பாடல்கள் என தன் சகோதரி லதா மங்கேஷ்கர் பாடாத பலவித பாடல்களை ஆஷா போஸ்லே தயங்காமல் பாடியதாக குறிப்பிடுகிறார் ஷாஜி.

"சேதுபதி ஐபிஎஸ் படத்தில் வரும் 'சாத்து நட சாத்து', அப்படியொரு பாடல் தான். 'கொஞ்ச நேரம்' பாடல் கிளாசிக்கல். இருவர் படத்தில் வரும் 'வெண்ணிலா வெண்ணிலா' ஜாஸ் பாடல். தமிழ் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் பலவித பாடல்களை பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது." என கூறுகிறார் ஷாஜி.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு