முதல்வர் விஜய் வசம் உள்ள துறையில் திமுக பிரதிநிதிகள் ஆதிக்கம் - தொடங்கிய சிக்கல் என்ன?

பட மூலாதாரம், CMOTamilnadu
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகள் பெரும்பாலும் திமுக வசமுள்ளன. இந்த மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள சூழ்நிலையில், பல இடங்களில் இப்போதே அரசுடனான மோதல் துவங்கியுள்ளது.
தனது அறையில் முதல்வர் விஜய் படத்தை வைக்கக்கூடாது என கோவை மேயர் ரங்கநாயகி தடுத்துள்ளார். சென்னை மேயர் பிரியா ராஜன், இதுவரை முதல்வரைச் சந்திக்கவில்லை. இத்தகைய போக்கு சென்னையில் பொதுமக்களை பாதிக்குமென்று 'வாய்ஸ் ஆஃப் பீப்பிள்' அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.
வாக்குச்சாவடி வீதமாக எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு கிடைத்துள்ளது என்பது தெரியுமென்பதால், வரும் நாட்களில் உள்ளாட்சிப் பணிகளில் அது எதிரொலிக்கும் என்கிறார் சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் லோகநாதன்.
ஆனால் அன்றாடப் பணிகளுக்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது என்கின்றனர் திமுக மக்கள் பிரதிநிதிகள்.
''நான் பதவியிலிருக்கும் வரை, மேயருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் முதல்வர் விஜய் படத்தை வைக்க வேண்டாமென்று கூறியிருப்பதாக'' கோவை மேயர் ரங்கநாயகி பிபிசியிடம் தெரிவித்தார்.
தனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஓய்வில் இருப்பதால்தான் முதல்வரைச் சந்திக்கவில்லையென்று பிபிசியிடம் கூறிய சென்னை மேயர் பிரியா ராஜன், மக்களுக்காக அரசுடன் இணைந்து பணி செய்வோம் என்றார்.

பட மூலாதாரம், Getty Images
முதல்வர் வசம் நகராட்சித்துறை - திமுக வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்
அமைச்சரவையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதல்வர் விஜய் வசம் உள்ளது. மக்களுக்கு நேரடியாக சேவையாற்றக்கூடிய முக்கியப் பொறுப்பிலுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் கீழ்தான் தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் உட்பட பெருவாரியான நகர்ப்புற உள்ளாட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.
சில நகராட்சிகள், பேரூராட்சிகளைத் தவிர, மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை திமுகவைச் சேர்ந்தவர்களே அதிகமாக வகித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில், மாநிலத்தில் ஆளுகின்ற கட்சியே அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிந்தபின், சில மாதங்கள் கழித்து நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களின் பதவிக்காலம் முடிவதே வழக்கம். வரும் 2027 ஜனவரி வரையிலும் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு பதவிக்காலம் உள்ளது.
வழக்கமாக திமுக அல்லது அதிமுக மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்போது, இவ்விரண்டு கட்சிகளில் மற்றொரு கட்சி, மாநிலத்தில் ஆட்சிக்கு வரும்போது, நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களில் சிறுசிறு மோதல்கள் நடக்கும்.
இப்போது முதல்முறையாக வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருப்பது, ஒரு புதிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே ஆளும்கட்சிக்கும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் மோதல் போக்கு உருவாகியுள்ளது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் வைப்பதற்காக, அதிகாரப்பூர்வமான விஜய் புகைப்படம், அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் மேயர் அறையில் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட முதல்வர் விஜய் படத்தை வைப்பதற்கு கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மறுத்துள்ளார். மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் முதல்வர் விஜய் படத்தை வைக்கக்கூடாது என்று மறுத்து, அவருடைய உதவியாளர் இருக்கைக்கு மேற்புறத்தில் அதை வைக்கச் செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர், ''எங்களுடைய பதவிக்காலம் வரும் ஜனவரி வரையிலும் இருக்கிறது. அதுவரையிலும் எனது அறையில் எங்களுடைய தலைவர்கள் படங்கள் மட்டுமே வைக்க அனுமதிப்பேன்.முதல்வர் விஜய் படத்தை வைக்க மாட்டேன். அதேபோன்று எங்கள் கட்சியின் தலைவர்கள் படங்களையும் எடுக்க மாட்டேன்.'' என்று கூறியிருந்தார்.
அதேபோன்று மேயர் அறையில் இப்போதும் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோருடைய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் அகற்றப்படவில்லை.
பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, ''நான் சொன்னது உண்மைதான். மாநகராட்சி நிர்வாகமே அந்த அறையை எனக்கு ஒதுக்கியிருந்தாலும் அது மேயருக்கு ஒதுக்கப்பட்ட அறை என்ற வகையில், அதில் எங்களுடைய கட்சித் தலைவர்களின் படங்களை வைப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. அதேநேரத்தில் முதல்வர் விஜய் படத்தை வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் மறுத்தேன்.'' என்றார்.
''அதேநேரத்தில் மேயர் அலுவலகத்தில் முதல்வர் படம் இருக்க வேண்டுமென்பதால் அதை வேறொரு இடத்தில் வைத்துள்ளோம். மாநகராட்சி மன்றக் கூடத்தில் முதல்வரின் படம் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி வரை எங்களுக்கு பதவிக்காலம் உள்ளது. அதுவரை எனது அறையில் முதல்வர் விஜய் படத்தை வைக்க வேண்டாமென்பதே எனது நிலைப்பாடு.'' என்றும் அவர் கூறினார்.
அரசு விதிகள் என்ற முறையில் மேயர் அறையில் முதல்வர் புகைப்படத்தை கட்டாயம் வைக்க வேண்டுமென்று உத்தரவு வந்தால் அதை ஏற்பீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு, ''அப்படி கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். அப்படியொரு நிலை வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு எனது அறையில் வைக்க நான் அனுமதிக்கவில்லை.'' என்றார்.

பட மூலாதாரம், CMOTamilnadu
இதுகுறித்து கோவை மாநகராட்சி விதிகளில் என்ன கூறப்பட்டுள்ளது, மாநகராட்சி நிர்வாகம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது பற்றி கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் பிபிசி பேசியபோது, ''மேயர் வைக்க வேண்டாமென்று மறுத்துள்ளதால் இப்போதைக்கு அங்கு வைக்கவில்லை. இதுதொடர்பாக என்ன விதிகள் உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். அதைப் பார்த்தபின்பே அடுத்த என்ன செய்வது என்பது பற்றி திட்டவட்டமாகச் சொல்ல முடியும்.'' என்றார்.
கோவை மேயரைப் போலவே, மாநகராட்சியிலுள்ள சில மண்டலத் தலைவர்களும், நிலைக்குழுத் தலைவர்களும் தங்களுடைய அறைகளில் முதல்வர் விஜய் படத்தை வைக்க அனுமதிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அதுபற்றி அவர்களில் சிலரிடம் பேசியபோதும் அவர்களும் அதை ஒப்புக்கொண்டனர்.
பிபிசியிடம் பேசிய கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுசாமி, ''அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மேயருக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள அறையில், பொறுப்பிலுள்ள முதல்வர் படத்தை வைக்க அனுமதிப்பதே முறை. அதை மறுப்பதற்கு மேயருக்கு தனிப்பட்ட முறையில் உரிமையோ, அதிகாரமோ இருப்பதாக நான் கருதவில்லை. அதை வைப்பதற்கு அனுமதிப்பதில் ஒரு பிரச்னையுமில்லை.'' என்றார்.

பட மூலாதாரம், PriyarajanDMK/X
முதல்வர் விஜயை இதுவரை சந்திக்காத சென்னை மேயர்
இதேபோன்று சென்னை மாநகராட்சியிலும் அரசுக்கும், மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சூழல் விவாதப் பொருளாகியுள்ளது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று, 10 நாட்களுக்கு மேலாகியும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அவரைப் பார்க்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதை மறுத்துள்ள மேயர், தனக்கு காலில் காயம் என்பதால் பார்க்கவில்லை என்று ஊடகங்களில் கூறியுள்ளார்.
மேயரின் நடவடிக்கையை சென்னையிலுள்ள 'வாய்ஸ் ஆஃப் பீப்பிள்' அமைப்பு கண்டித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள பதிவில், ''அரசியல் கருத்து வேறுபாடுகளால் உள்ளாட்சிகளின் செயல்பாடு பாதிக்கக்கூடாது. மாநகராட்சி மன்றத்திற்கு இன்னும் சுமார் ஓராண்டு பதவிக்காலம் உள்ள நிலையில், நிர்வாகத்தை திறம்பட நடத்துவதற்கு மாநில அரசு, மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே ஆக்கப்பூர்வமான ஒருங்கிணைப்பு அவசியம்.'' என்று தெரிவித்துள்ளது.
பிபிசியிடம் பேசிய வாய்ஸ் ஆஃப் பீப்பிள் அமைப்பின் நிர்வாகி சாரு கோவிந்தன், ''மாநில அரசும், மாநகராட்சி மன்றமும் இணைந்து செயல்படாவிட்டால் பாதிக்கப்படப்போவது மக்கள்தான். கோடையின் தாக்கம் இப்போது மிக அதிகமாகவுள்ளது. மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசுடன் இணைந்து மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்து மழைக்காலம் துவங்கும்போது, இந்த ஒருங்கிணைப்பு இன்னும் அதிகமாகத் தேவைப்படும். இதில் அரசியல் பார்க்கக்கூடாது.'' என்றார்.
பெருமழைக்காலங்களில் அரசும், மாநகராட்சி மன்றமும் இணைந்து செயல்படாவிட்டால் ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து அவர் விளக்கினார்.
சாலை, மழைநீர் வடிகால் பராமரிப்பு, தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை, துாய்மைப்பணி, பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ள மாநகராட்சி நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் மாநில அரசுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டால்தான் பேரிடர்களை எதிர்கொள்ள முடியுமென்றும் பலரும் கருத்துக் கூறியுள்ளனர்.
''சென்னை மேயர் பிரியா ராஜன், முதல்வரை சந்திக்க வேண்டும். அவர் கூறியுள்ள காரணம் ஏற்கத்தக்கதல்ல. குறைந்தபட்சம் ஒரு வாழ்த்தையாவது அவருடைய அலுவலகம் வெளியிட்டிருக்கலாம்.'' என்றாார் சாரு.
சென்னை மேயர் பிரியா ராஜனிடம் இதுபற்றி பிபிசி தமிழ் பேசியது. அதற்கு பதிலளித்த அவர், ''ஏற்கெனவே இதற்கான காரணத்தை நிர்வாகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் நான் விளக்கியிருக்கிறேன். தேர்தல் முடிவு வரும் முன்பே எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. முழுமையாக ஒரு மாதம் ஓய்வில் இருந்தால்தான் விரைவாக குணமாகும் என்று மருத்துவர்கள் கூறியிருப்பதால் நான் எங்குமே வெளியில் செல்லவில்லை. கையில் காயமாயிருந்தால் பரவாயில்லை. காலில் காயம் என்பதால் நடமாட முடியவில்லை.'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''மக்கள் பணி செய்வதில் நாங்கள் எப்போதும் பின் தங்க மாட்டோம். எங்களுக்கு இருக்கும் பதவிக்காலம் வரையிலும் நிச்சயமாக அரசுடன் இணைந்து பணி செய்வோம். அதில் எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. அதேபோன்று முதல்வரை வேண்டுமென்றே சந்திக்க மறுப்பதாகக் கூறுவதும் தவறானது. உண்மையிலேயே காயம் காரணமாகத்தான் என்னால் போகமுடியவில்லை.'' என்றார்.

பட மூலாதாரம், DIPR
தவெக எம்எல்ஏக்களும், திமுக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும்
தமிழகத்தில் தவெக வென்றுள்ள பெரும்பாலான தொகுதிகள், நகர்ப்புறங்களில் உள்ளன. அடுத்த ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமென்ற சூழ்நிலை இருப்பதால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் கட்சியை வலுப்படுத்தும்பொருட்டு, தவெக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிர்வாகங்களில் தலையிடவும், அதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் வலுக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
''இப்போதுள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த வாக்குச்சாவடியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு கிடைத்துள்ளது என்பதை இப்போது எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும். அதை வைத்து பகுதிவாரியாக பணிகளைச் செய்வதில் பாகுபாடு காட்டப்படலாம். ஆனால் அரசுடன் இணைந்து பணி செய்ய வாய்ப்பு குறைவே.'' என்றார் சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் தலைவர் லோகநாதன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























