'வீடு' திரைப்படம் உருவான கதை - இன்றும் பாடமாக இருக்கும் பாலுமகேந்திராவின் படைப்பு

வீடு படம்

பட மூலாதாரம், South Movie Zone/Youtube

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ் சினிமாவில் சில படங்களே காலத்தை கடந்து மனதில் நிற்கின்றன, தலைமுறைகளை தாண்டி பேசப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்களில் ஒன்று பாலுமகேந்திராவின் வீடு.

பாலுமகேந்திரா ஒரு பேட்டியில், ''நான் 18 படங்களை இயக்கியிருக்கிறேன். அதில் இரண்டு மட்டும் எனக்குத் திருப்தி அளித்தன. ஒன்று வீடு மற்றொன்று சந்தியாராகம். இந்தப் படங்களில்தான் நான் குறைந்த அளவு தவறுகள் புரிந்துள்ளேன். எந்த வியாபார நோக்கத்துடனும் இந்த படங்கள் எடுக்கப்படவில்லை. இந்தப் படங்களை இயக்கும் போதுதான் நேர்மையுடன் பணியாற்றினேன்'' என்று கூறியிருக்கிறார்.

1988ல் உருவான வீடு படத்தில் அர்ச்சனா, சொக்கலிங்கபாகவதர், பானுசந்தர், பசி சத்யா முக்கியமான பாத்திரங்களில் நடித்தனர். இளையராஜா இசையமைக்க, வழக்கம்போல் பாலுமகேந்திராவே ஒளிப்பதிவையும் கையாண்டார். கூடுதலாக எடிட்டிங் பணியையும் கவனித்தார். லண்டனை சேர்ந்த கலாதாஸ் என்பவர் சில லட்ச ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தார்.

அந்த காலத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற 'வீடு', சிறந்த படத்துக்கான தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றது.

இன்று பாலுமகேந்திராவின் 87வது பிறந்தநாள். வீடு படம் குறித்த நினைவுகளை அந்த படத்தில் பணியாற்றியவர்கள், பாலுமகேந்திராவுக்கு நெருக்கமானவர்களிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்

Balumahendra, Veterian Director, Tamil cinema

பட மூலாதாரம், Redpix/Youtube

நான் ஹீரோயினா? ஆச்சரியப்பட்ட அர்ச்சனா

வீடு படத்தின் கதைநாயகி அர்ச்சனா பிபிசி தமிழிடம் பேசுகையில், ''நான் திரைப்படக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு அமெரிக்க இயக்குனர் மூலமாக பாலுமகேந்திராவை சந்தித்தோம். மூன்றாம்பிறை போன்ற வெற்றிகளை கொடுத்துவிட்டு அவர் சினிமாவின் உச்சத்தில் இருந்தார். நானும், நடிகர் நாசரும்தான் அந்த சந்திப்பில் இருந்தோம். அப்போது என்னை பல வித கோணங்களில் போட்டோ எடுத்தார் பாலுமகேந்திரா. அந்த மாதிரி என்னை யாரும் போட்டோ எடுத்தது இல்லை. நான் மிரண்டு போய்விட்டேன்.

ஒரு வாரம் கழித்து 'உன்னை என் படத்தில் நடிக்க வைக்கப்போகிறேன். அதுவும் ஹீரோயினாக' என்றார். நான் ஆச்சரியப்பட்டேன். 'சினிமா நடிகைக்கான எந்த விஷயமும் என்னிடம் இல்லை. நான் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டவள், நான் எளிமையானவள்' என்றேன். உடனே அவரோ 'அன்பு, காதல், உணர்ச்சிகள் எளிமையானது, வாழ்க்கையும் எளிமையானது. என் சினிமாவும் எளிமையானது' என்று சொல்லி, வீடு படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தின் கதை முழுமையாக எனக்கு தெரியாது. ஆனால், அந்த வீடு கரு எப்படி உருவானது என பின்னாளில் தெரிந்துகொண்டேன்.

அது அவர் அம்மாவின் கதை. ஆசிரியராக இருந்த அவர் இலங்கை மட்டக்களப்பில் வீடு கட்டும்போது, அந்த வேலை, பிரச்னைகள் காரணமாக கடும் மன உளைச்சல் ஆகி ஆளே மாறியிருக்கிறார். சிரிப்பதை மறந்து பணிசுமையில் முழ்கியிருக்கிறார். அது பாலுமகேந்திராவை பாதிக்க, வீடு கட்டுவதை படமாக எடுத்தார்.'' என்றார்.

வீடு

பட மூலாதாரம், South Movie Zone/Youtube

மழையை கூட சாதகமாக்கினார்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

''முதல் நாள் படப்பிடிப்புக்கு சாலிகிராமம் வந்தபோது காலையில் நல்ல வெயில். ஆனால், படப்பிடிப்பு தொடங்கும்போது நல்ல மழை. இன்றைக்கு படப்பிடிப்பு இருக்காது என நினைத்தேன். ஆனால், அவரோ அந்தமழையை கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தி படப்பிடிப்பை தொடங்கினார். படத்தில் மவுண்ட்ரோடு காட்சிகள் உட்பட பல இடங்களில் மழை வரும். அதெல்லாம் நிஜ மழை. இயற்கையும் அந்த படத்துக்கு கை கொடுத்தது.'' என்றார் அர்ச்சனா.

''சென்னை சாலிகிராமத்தில் இன்றைக்கு பாலுமகேந்திரா ஸ்டூடியோ இருக்கும் இடத்தில், நிஜமாகவே ஒரு வீட்டை கட்டி அந்த படப்பிடிப்பை நடத்தினார். அப்போது சாலிகிராமத்தில் இவ்வளவு வீடு, நெரிசல், இரைச்சல் இருக்காது. மரத்தடியில் அமர்ந்துகொள்வோம். பக்கத்து வீடுகளில் காஸ்ட்யூம் மாற்றுவோம். அவர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே நடித்தேன். நான் மேக்கப் இல்லாமல் நடித்தேன். ஒருமுறை முகத்தை கழுவியபோதுகூட, அதை ஷாட்டாக எடுத்து படத்தில் பயன்படுத்தினார். நடிகர்கள், நடிப்பு, காட்சிகள் எல்லாமே யதார்த்தம். அதுதான் அந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்பேன்.'' என கூறுகிறார் அர்ச்சனா

தேசிய விருது

''எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எடுக்கப்பட்ட அந்த படம் எனக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. நான் 30க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டாலும், இன்றைக்கும் வீடு பற்றிதான் பேசுகிறார்கள், புகழ்கிறார்கள், விவாதம் நடத்துகிறார்கள்.

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் படத்தின் சொல்லப்பட்ட வீடு கட்டும் விஷயம். உலகம் முழுக்க எல்லாரும் சொந்த வீடு கட்ட நினைக்கிறார்கள். அது தனி மனிதனின் கனவு, ஆசை. அப்போது பல பிரச்னைகளை, அனுபவங்களை சந்திக்கிறார்கள். அதை வீடு படத்தில் சொல்லியிருக்கிறார் பாலுமகேந்திரா. படம் யதார்த்தமாக இருந்தது. நிஜ வாழ்க்கையை, வலியை, மனித உணர்ச்சியை சொன்னது. அதனால் மக்கள் மனதில் நிற்கிறது'' என்கிறார் அர்ச்சனா.

வீடு

பட மூலாதாரம், South Movie Zone/Youtube

பாலுமகேந்திரா மகன் கூறுவது என்ன?

பாலுமகேந்திரா மகனும், பிரபல ஒளிப்பதிவாளருமான ஷங்கி மகேந்திரா பிபிசி தமிழிடம் பேசுகையில் ''வீடு படப்பிடிப்பு சமயத்தில் நான் போர்டிங் பள்ளியில் படித்து வந்தேன். விடுமுறை நாட்களில் அப்பா படப்பிடிப்பு செல்வேன். அப்படி வீடு படப்பிடிப்பு சென்று இருக்கிறேன். நிஜமாக வீடு படத்தில் வரும் வீடு இன்றைக்கு பாலுமகேந்திரா சினிமா பட்டறை, ஸ்டூடியோ இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்பாவுக்கு சினிமா தவிர எதுவும் தெரியாது.

அப்போது அவர் மேனேஜராக இருந்த கோவிந்தன் என்பவர் அந்த இடத்தை வாங்கி, வீடு கட்ட உதவினார். அந்த படம் முடிந்தபின் 10 ஆண்டுகளாக அந்த வீடு, இடம் அப்படியே இருந்தது. அந்த வீடு இருந்த இடத்தில் பாலுமகேந்திரா சினிமா பட்டறை, ஸ்டூடியோ உருவானது.

என் பாட்டி ராசாம்மா இலங்கையில் வீடு கட்டிய அனுபவத்தைதான் அப்பா வீடு படமாக எடுத்தார். இலங்கையில் இருந்த அந்த வீட்டில் அப்பாவுக்கும் பங்கு இருந்தது. அப்பா இறந்தபின் இலங்கை சென்று வீடு கரு உருவான இடத்தை நாங்கள் குடும்பத்துடன் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். போர் சூழல் முடிந்தபின் இப்போது அந்த இடம் எப்படி இருக்கிறது என தெரியவில்லை. வீடு படமும், அந்த வீட்டின் நினைவுகளும் மனதில் நிற்கிறது '' என்கிறார்.

வட இந்தியாவில் 'பதேர் பாஞ்சலி', தென்னிந்தியாவில் 'வீடு'

பாலுமகேந்திரா சிஷ்யரும், இயக்குனரும், வசனகர்த்தாவுமான சுகா, ''நான் திருநெல்வேலியில் படித்துகொண்டிருந்தபோது வீடு பார்த்ததாக நினைவு. பிற்காலத்தில் நான் வாத்தியார் என செல்லமாக அழைக்கும், என் குருநாதர் பாலுமகேந்திராவிடம் வீடு படம் பற்றி நினைவுகளை அதிகம் பேசியிருக்கிறேன். நடிகை அர்ச்சனாவுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தில் அவர் நடிப்பு பற்றி பலரும் பேசுகிறார்.

கதைப்படி தாத்தா இறந்தவுடன் அவர் பெட்டியை அர்ச்சனா திறந்து பார்ப்பார். அப்போது அவர் எழுதிய உயிலை படித்துவிட்டு தாத்தாவின் பாசத்தை நினைத்து ஓவனெ கதறி அழுவார் அர்ச்சனா. இதுதான் எனக்கு பிடித்த காட்சி . இந்த படத்துக்கு பாலுமகேந்திராவுக்கு சம்பளம் கிடையாது. வீடு படப்பிடிப்பு நடந்த அந்த இடத்தை சம்பளமாக கொடுத்தார்கள். படப்பிடிப்பு முடிந்து சில ஆண்டுகளாக அந்த வீடு அப்படியே இருந்தது. அப்போது நானும், பாலுமகேந்திராவும் அங்கே அடிக்கடி வருவோம். பழைய நினைவுகளை பேசுவோம். நிஜ மழையில் பல காட்சிகளை எடுத்ததை அவர் பகிர்ந்து இருக்கிறார். அப்போது இளையராஜாவின் இசை என் மனதிற்குள் ஒலிக்கும்.'' என்றார்,

''பல படங்களில் சின்ன நடிகராக, முகம் தெரியாத இருந்த பலரை வீடு படத்தில் நடிக்க வைத்தார். 'வட இந்திய சினிமாவில் சத்யஜித்ரேவின் பதேர்பாஞ்சலி என்றால், தென் இந்திய சினிமாவில் பாலுமகேந்திராவின் வீடு' என ஒரு விழாவில் இயக்குனர் பாலசந்தர் கூறினார். அதுதான் படத்துக்கு கிடைத்த பெரிய பாராட்டு'' என்றார் சுகா.

வீடு

பட மூலாதாரம், South Movie Zone/Youtube

'அந்த பழைய செங்கல்சுவர்'

பாலுமகேந்திரா சிஷ்யரும், இயக்குனருமான சீனுராமசாமி ''​வெயிலும் புழுதியுமாய்க் கழியும் எளிய மனிதர்களின் நாட்களை நாம் பலநேரம் கவனிப்பதேயில்லை. ஆனால், தன் தாயாரின் வாழ்வில் நேர்ந்த ஒரு வலியைச் சுமந்துகொண்டு, இயக்குநர் பாலுமகேந்திரா அதை மிக நுட்பமாகக் கவனித்துச் செதுக்கிய படைப்புதான் வீடு. 1988-ல் வெளிவந்த இந்தத் திரைப்படம், தமிழ் சினிமாவின் வெறும் வரலாற்று ஆவணம் அல்ல. ஒரு சாமானிய நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தின் பெருமூச்சுகளால் கட்டப்பட்ட வாழ்வியல் கோலம். எந்தவித சினிமாத்தனமான ஒப்பனையுமின்றி, மனிதர்களின் அன்றாடப் போராட்டங்களையும் சின்னஞ்சிறு கனவுகளையும் திரையில் அசலாகப் பதிவு செய்ததாலேயே இப்படம் இன்றும் நம்மால் கொண்டாடப்படுகிறது.'' என்றார்

''​யதார்த்தமான கலைப் படங்கள் ஏன் பல தசாப்தங்களைக் கடந்தும் சாகாவரம் பெற்று வாழ்கின்றன என்பதற்கு இந்தப் படமே ஒரு சாட்சி. நம்பமுடியாத சண்டைக்காட்சிகளோ, வலிந்து திணிக்கப்பட்ட காதல் பாடல்களோ இன்றி, மனித மனதின் இயல்பான உணர்ச்சிகளை மட்டுமே இவை நம்பியிருக்கின்றன. திரையில் ஓடும் கதை தன்னுடையதோ, இல்லை தன் அண்டை வீட்டாரினுடையதோ என்ற நெருக்கத்தைப் பார்வையாளனுக்குக் கடத்தும் வித்தையை 'வீடு' அநாயாசமாகச் செய்திருந்தது.

​ஒரு சொந்த வீடு என்ற கனவைச் சுமந்து திரியும் ஒரு குடும்பம், அதனை எழுப்பும் முயற்சியில் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளையும், கட்டிட அனுமதி வாங்குவதில் உள்ள அதிகாரச் சிக்கல்களையும் பாலுமகேந்திரா மிக நேர்த்தியாகவும் வலியோடும் படமாக்கியிருந்தார்.

இந்த அசலான படைப்பிற்காகவே சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும், அர்ச்சனாவிற்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் 'வீடு' பெற்றுத் தந்தது.

​படத்தின் ஆன்மாவே முதியவரான அந்தத் தாத்தாவும், பேத்தி சுதாவும் தான். பாதி கட்டப்பட்ட அந்த வீட்டின் செங்கல் சுவரைத் தாத்தா தன் சுருக்கம் விழுந்த கைகளால் தடவிப் பார்க்கும் அந்த ஒற்றைக் காட்சி, பல கோடி வார்த்தைகள் சொல்ல முடியாத ஒரு பெரும் உணர்வைச் சொல்லிச் செல்லும். ஒரு சொந்த வீடு என்பது அந்த முதியவருக்கு வெறும் செங்கல்லும் சிமெண்டும் அல்ல அது ஒரு தலைமுறையின் வாழ்நாள் கனவு மற்றும் பாதுகாப்பு அரண்.

தன் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைத் தன் பேத்தி சுதாவிற்காக அவர் பாதுகாத்து வைத்திருப்பதைச் சொல்லும்போது, தமிழ்ச் சமூகத்தின் ஆழமான உறவுச் சங்கிலியும், முதியவர்களின் அளப்பரிய தியாகமும் நம் கண்முன் வந்து நிற்கின்றன.

குடும்பச் சுமையைச் சுமக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் சோர்வு, கோபம், ஏமாற்றம், இயலாமை, வைராக்கியம் என அனைத்தையும் தன் உடல்மொழியிலும் கண்களிலும் அர்ச்சனா மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.

எந்தவித அலங்காரமுமற்ற அவரது எதார்த்தமான தோற்றம் படத்திற்குப் பெரும் பலம். அதேபோல, எந்த நடிப்புப் பயிற்சியும் இல்லாத பாகவதரின் முகமும், அந்தத் தளர்ந்த நடையும், பேத்தியின் மீது அவர் காட்டும் பரிவும் ஒரு நிஜமான தாத்தாவைத் திரையில் பார்த்த திருப்தியை நமக்கு வழங்கின.

​மனிதர்களின் வலிகளையும், அவர்களின் எளிய கனவுகளையும் அணு அணுவாகப் பதிவு செய்ததால்தான், எதார்த்த வாழ்வியல் சினிமாவின் உச்சமாக, காலத்தால் அழியாத ஒரு காவியமாக 'வீடு' இன்றும் நம் நெஞ்சங்களில் அப்படியே நிலைத்து நிற்கிறது. பாகவதரை நடிக்க அழைத்தபோது அவர் பாட்டுக்காக என நினைத்து இருக்கிறார். 'உங்களுக்கு நடிப்பு வருமா' என பாலுமகேந்திரா கேட்க, அவர் தொடை தட்டி ராவணகாவியம் காட்சியை நடித்து காண்பித்து, 'நான் அந்த கால நாடக நடிகர்' என கம்பீரமாக சொன்னாராம். 80வயதில் அவருக்கு அங்கீகாரத்தை கொடுத்தது வீடு படம்'' என்கிறார்.

வீடு

பட மூலாதாரம், South Movie Zone/Youtube

இயக்குநர், நடிகர் சசிகுமார், ''நான் பாலுமகேந்திரா இயக்கி நடித்த தலைமுறை படத்தை தயாரித்தேன். அந்த சமயத்தில் வீடு படப்பிடிப்பு நடந்த, அப்போது அவர் அலுவலமாக இருந்த பாலுமகேந்திரா ஸ்டூடியோ சென்று பேசுவேன். படம் வளர, வளர வீடு வளர்ந்தது என்று அந்த அனுபவங்களை சொன்னார். அதையே பிற்காலத்தில் அவர் ஆபீசாக மாற்றி பணியாற்றினார். வீடு படத்துக்கு இயற்கையும் உதவி செய்து இருக்கிறது.

வீடு படத்திலும் பல இடங்களில் நிஜ மழை காட்சிகளை பாலுமகேந்திரா பயன்படுத்தி இருப்பார். அதெல்லாம் கொடை. வீடு கட்டுவது என்பது பலரின் கனவு. அதை சொன்ன வீடு படத்தை இன்னும் நெடுங்காலம் மக்கள் நினைவில் வைத்து இருப்பார்கள். தாத்தா, பேத்தி, காதல், வீடு கட்டும் கஷ்டம் என பல சீன்கள் இன்றும் மனதில் நிற்கிறது. வயதான தாத்தாவை அழுத்தமாக நடிக்க வைத்தார். இளையராஜாவின் இசையாக இன்னும் காதில் ஒலிக்கிறது. வீடு படத்தின் கிளைமாக்ஸ் மனதில் கனமாக இன்றும் நிற்கிறது'' என்றார்.

'வீடு படம் அல்ல பாடம்'

வீடு படத்தில் சித்தாளாக முக்கிய வேடத்தில் நடித்த பசி சத்யா, ''இன்றும் பல கல்லூரிகளில் சினிமா சம்பந்தப்பட்ட கருத்தரங்கில் வீடு படம் ஒரு பாடமாக இருக்கிறது. அந்த படம் எப்படி எடுக்கப்பட்டது நடிப்பு காட்சிகள் கரு, குறித்து மாணவர்கள் விவாதிக்கிறார்கள். அப்படி படித்த மாணவர்கள் பொது இடங்களில் என்னிடம் வீடு குறித்து ஆர்வமாக பேசுகிறார்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை தொடும் நிலையிலும் ஒரு படம் பற்றி பேசுவது மகிழ்ச்சி. இயக்குனர் பாலுமகேந்திரா மிகவும் மென்மையானவர். ஷாட், கட், ஆக்சன் என்பதை கூட மெதுவாகவே சொல்வார். அதேசமயம் தேவை இல்லாமல் ஒரு புருவம் அசைந்தால் கூட அது வேண்டாம் என்பார். அந்த வீட்டை நிஜமாகவே கட்டியதிலும் எனக்கு பங்கு உண்டு. சித்தாளாக பல நாட்கள் நான் செங்கல் சுமந்தேன் அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு இன்றும் தொடர்கிறது" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு