வெனிசுவேலாவில் அமெரிக்கா, பிரிட்டனின் ரகசிய நடவடிக்கை: 13 கிலோ யுரேனியம் எங்கே சென்றது?

சர்வதேச அணுசக்தி முகமை, யுரேனியம் இடமாற்றத்திற்கான பயிற்சியை வழங்கியதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டது

பட மூலாதாரம், IAEA

படக்குறிப்பு, சர்வதேச அணுசக்தி முகமை, யுரேனியம் இடமாற்றத்திற்கான பயிற்சியை வழங்கியதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டது
    • எழுதியவர், ஏஞ்செல் பெர்முடெஸ்
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கடந்த ஏப்ரல் மாதம், ஒரு நாள் இரவில், வெனிசுவேலாவில் மிகவும் அசாதாரணமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

வெனிசுவேலா தலைநகர் கராகாஸுக்கு வெளியே அமைந்துள்ள வெனிசுவேலா அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைமையகத்தில் இருந்து கராபோபோ மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ கபெல்லோ துறைமுக நகரத்திற்கு, ஒரு வெனிசுவேலா ராணுவ வாகன அணிவகுப்பு சுமார் 160கி.மீ தூரம் அமைதியாகப் பயணித்தது. இந்த நகர்வு மிகுந்த ரகசியத்துடனும், மக்களின் கவனம் ஈர்க்கப்படாமலும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ரகசிய இரவுப் பயணத்திற்கான காரணம் பல நாட்கள் கழித்தே தெரிய வந்தது. சுமார் 13கிலோகிராம் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் அடங்கிய ஒரு கொள்கலனை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு ராணுவம் பாதுகாப்பு அளித்து வந்தது. இந்த அணுப் பொருளைப் பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்வதே அதன் நோக்கமாக இருந்தது.

இதுவொரு வழக்கமான சரக்குப் போக்குவரத்துப் பணியல்ல. இந்த நடவடிக்கையில் வெனிசுவேலா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய அரசுகளின் ஈடுபாடு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையும் இதில் ஈடுபட்டிருந்தது. இந்த நடவடிக்கை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் நிறைவடைவதை உறுதி செய்வதற்காக, இதற்கான திட்டமிடலும் தயாரிப்புகளும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாக அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.

மே 8ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், சர்வதேச அணுசக்தி முகமை, இது "கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு கூட்டுப் பணி. இது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில், இந்த வகை அணுப் பொருள் தவறான கைகளில் கிடைத்தால், அது அணு ஆயுதப் பரவல் அபாயத்தையோ அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தலையோ ஏற்படுத்தக்கூடும்" என்று கூறியுள்ளது.

அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் (HEU) என்பது 20%-க்கும் அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியம். யுரேனியம் செறிவூட்டல் என்பது யூரேனியம்-235 எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை யுரேனியத்தின் செறிவை அதிகரிக்கும் ஒரு செயல்முறை.

ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தின் (Royal United Services Institute) அணு ஆயுதப் பரவல் மற்றும் அணுக் கொள்கைக் குழுவின் ஆய்வாளரான ஜாக் கிராஃபோர்டின் கூற்றுப்படி, இந்த வகை யுரேனியம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஆற்றல் அளிப்பது போன்ற அமைதியான நோக்கங்களுக்காக, உலகம் முழுவதுமுள்ள அணு உலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அணு ஆயுதங்களுக்குத் தேவைப்படும் பிளவுபடும் அணுப் பொருளை (fissile material) உருவாக்கவும் இது பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

கிராஃபோர்ட் பிபிசி வெரிஃபையிடம் பேசியபோது, "வெனிசுவேலாவில் இருந்து அகற்றப்பட்ட 13 கிலோ அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம், கோட்பாட்டளவில், ஒரு சிறிய அணு ஆயுதமாக சுத்திகரிக்கப்படுவதற்குப் போதுமானது. ஆயினும், அதில் 20 சதவிகிதத்திற்கும் சற்று அதிகமான யுரேனியம்-235 இருந்தது. மேலும், அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் பொதுவாக 90% முதல் ஆயுதத் தரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது" என்று தெரிவித்தார்.

சர்வதேச அணுசக்தி முகமை, யுரேனியம் இடமாற்றத்திற்கான பயிற்சியை வழங்கியதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டது

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேலும் பேசிய கிராஃபோர்ட், "அமைதியான பயன்பாடுகளுக்காக உத்தேசிக்கப்பட்ட அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, அணு ஆயுதங்களை உருவாக்க விரும்பும் அரசு சாரா அமைப்புகளோ அல்லது அரசுகளோ கையகப்படுத்தும் சாத்தியக்கூற்றை முன்கூட்டியே அகற்றுவதற்கான சமீபத்திய சர்வதேச முயற்சியாகவே இது திரும்பப் பெறப்பட்டுள்ளது," என்று விளக்கினார்.

சுருக்கமாகக் கூறுவதெனில், அமைதி சார்ந்த அறிவியல் பணிகளுக்காக உத்தேசிக்கப்பட்ட அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஆயுதக் குழுக்கள், குற்றவியல் அமைப்புகள் அல்லது அணு ஆயுதங்களை உருவாக்க விரும்பக்கூடிய அரசுகளின் கைகளில் சென்று சேராமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு பரந்த சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

பல ஆண்டுகளாக, இராக், ரஷ்யா, கியூபா, வட கொரியா போன்ற நாடுகளுடன் வெனிசுவேலா அரசு கொண்டுள்ள நெருங்கிய உறவுகள் அமெரிக்க அரசுக்கு ஒரு கவலையாக இருந்து வருகிறது. பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த உறவுகள் சர்வதேச அணுசக்தி முகமையின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, வெனிசுவேலாவில் இருக்கும் முக்கியமான அணுசக்திப் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இது இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. வெனிசுவேலா முதலில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெற்றது எப்படி? இறுதியில் அந்தப் பொருளை அமெரிக்காவிடம் ஒப்படைக்க அந்நாடு ஒப்புக்கொண்டது ஏன்?

இந்தக் கேள்விகள்தான் இந்த அசாதாரணமான சர்வதேச நடவடிக்கையுடைய பின்னணியின் மையமாக இருக்கின்றன.

ஐசன்ஹோவர் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 'அமைதிக்கான அணுக்கள்' (Atoms for Peace) திட்டத்தின் பின்னணியில், வெனிசுலா தனது பரிசோதனை அணு உலை ஒன்றைப் பெற்றது

பட மூலாதாரம், Bettmann/Getty Images

படக்குறிப்பு, ஐசன்ஹோவர் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 'அமைதிக்கான அணுக்கள்' (Atoms for Peace) திட்டத்தின் பின்னணியில், வெனிசுலா தனது பரிசோதனை அணு உலை ஒன்றைப் பெற்றது

அமைதிக்கான அணுக்கள்

வெனிசுவேலா சமீபத்தில் அமெரிக்காவிடம் ஒப்படைத்த 13 கிலோகிராம் அளவுள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஆரம்பத்தில் RV-1 அணு உலைக்கான எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த அணு உலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஏனெனில், இதுதான் லத்தீன் அமெரிக்க பிராந்தியத்திலேயே முதன்முதலாகக் கட்டப்பட்ட அணு உலை.

ஆர்.வி-1 என்பது 1960களின் முற்பகுதியில், கராகாஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள 'வெனிசுவேலா அறிவியல் ஆய்வுக் கழகத்தில்' நிறுவப்பட்ட ஒரு பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிக்கான அணு உலையாகும். கடந்த 1950களில் அப்போதைய அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய முன்னெடுப்பான, "அமைதிக்கான அணுக்கள்" (Atoms for Peace) திட்டத்தின் ஒரு பகுதியாக இது நிறுவப்பட்டது.

கடந்த 1953ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியன்று, ஐசன்ஹோவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஒரு முக்கியமான உரையை ஆற்றினார். அந்த உரையில், அணுசக்தி தொழில்நுட்பம் போருக்காகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விவரித்தார். அந்தக் காலகட்டத்தில், அணுசக்தி குறித்த அறிவை முழுமையாகப் பெற்ற ஒரே நாடாக அமெரிக்கா மட்டும் இருக்கவில்லை. மேலும் பல நாடுகள் அணுகுண்டுகளை உருவாக்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தன. இதன் விளைவாக, அணு ஆயுதங்கள் உலகம் முழுவதும் பரவுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக அப்போது ஐசன்ஹோவர் எச்சரித்தார்.

இருப்பினும், அணு ஆயுத அச்சுறுத்தலைக் குறைப்பது மட்டுமே போதுமானது இல்லை என்று அவர் வாதிட்டார். அணுசக்தி தொழில்நுட்பம் மனித குலத்தின் நன்மைக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டுமென அவர் உறுதியாக நம்பினார்.

ஐசன்ஹோவர், "இந்த ஆயுதத்தை வீரர்களிடம் இருந்து பறித்துக்கொள்வது மட்டுமே போதுமானதல்ல. இதன் ராணுவத் தன்மைகளை நீக்கிவிட்டு, அமைதி சார்ந்த ஆக்கபூர்வமான பணிகளுக்கு இதைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களின் கைகளில் இது ஒப்படைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, ஐ.நா சபையின் கீழ் ஒரு சர்வதேச அணுசக்தி முகமையை உருவாக்குமாறு ஐசன்ஹோவர் முன்மொழிந்தார். அணுசக்திப் பொருட்களை அமைதி சார்ந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதுடன், மருத்துவம், விவசாயம், அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கும் பொறுப்பான அமைப்பாக இது செயல்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவால் சிறை பிடிக்கப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ

பட மூலாதாரம், Donald Trump/Truth Social

படக்குறிப்பு, அமெரிக்காவால் சிறை பிடிக்கப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ

அணுசக்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடுகள், தாங்கள் உற்பத்தி செய்யும் அணுப் பொருட்களில் ஒரு பகுதியை இந்தப் புதிய முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை யோசனையாக இருந்தது. அந்த முகமையானது அந்த அணுப் பொருட்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து, பின்னர் அணுசக்தியின் அமைதி சார்ந்த பயன்பாடுகள் குறித்து ஆராய விரும்பும் விஞ்ஞானிகளுக்கும் ஆய்வாளர்களுக்கும் அவற்றை வழங்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

ஐசன்ஹோவர் ஆற்றிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரைதான், பிற்காலத்தில் 'சர்வதேச அணுசக்தி முகமை' உருவாக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இது "அமைதிக்கான அணுக்கள்" திட்டத்திற்கும் உத்வேகம் அளித்தது. இதன் மூலம், வளரும் நாடுகள் அணுசக்தியை அமைதியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் வகையில், அமெரிக்கா அவற்றுக்குப் பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆதரவை வழங்கியது.

ஐசன்ஹோவரின் உரைக்குப் பிறகு ஓராண்டுக்குள், அமெரிக்கா தனது அணுசக்தி சட்டத்தைத் திருத்தியது. அணு ஆயுதங்களை உருவாக்க அவற்றைப் பயன்படுத்த மாட்டோம் என்று பிற நாடுகள் உறுதியளித்தால், அணு தொழில்நுட்பத்தையும் அணுப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய இந்தப் புதிய விதிகள் அனுமதித்தன.

மார்ச் 1955இல், ஐசன்ஹோவர் நிர்வாகம் ஒரு படி மேலே சென்று, அப்போது "சுதந்திர உலகம்" என்று அழைக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இருந்த நாடுகளுக்கு, அணுக்கரு வினைகளில் பயன்படுத்தப்படும் சிறப்புப் பொருளான பிளவுபடும் பொருளைக் குறிப்பிட்ட அளவில் வழங்க அமெரிக்க அணுசக்தி ஆணையத்திற்கு அது அங்கீகாரம் அளித்தது. அந்த நாடுகள் அணு உலைகளைக் கட்டவும் அந்த ஆணையத்தால் உதவ முடியும்.

ஓராண்டு கழித்து, வெனிசுவேலா அரசாங்கம், அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக்கிடம் இருந்து ஆர்.வி-1 அணு உலையை வாங்கியது. இந்த அணு உலை 3 மெகாவாட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தது. இது 1960ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

ஆர்.வி-1 பல ஆண்டுகளாக ஓர் ஆராய்ச்சி அணு உலையாகச் செயல்பட்டது. விஞ்ஞானிகள் இதை ஆய்வு மற்றும் பிற அமைதியான அணுசக்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தினர். இருப்பினும், 1991இல் இந்த அணு உலை பகுதியளவு மூடப்பட்டு, ஓர் ஆராய்ச்சி மையமாகச் செயல்படுவது நிறுத்தப்பட்டது.

வெனிசுவேலா அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த அணு உலை 1997இல் நிரந்தரமாக மூடப்பட்டது. அந்த நேரத்தில், எரிபொருளின் ஒரு பகுதி அகற்றப்பட்டது, மீதமுள்ள எரிபொருள் சமீபத்திய இடமாற்ற நடவடிக்கை நிகழும் வரை பாதுகாப்பான சேமிப்பில் வைக்கப்பட்டிருந்தது.

அணு உலை மூடப்பட்ட பிறகு, அந்த மையத்திற்கு ஒரு புதிய நோக்கம் வழங்கப்பட்டது. அணு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, அது காமா கதிர்களைப் பயன்படுத்தி மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களைத் தொற்றுநீக்கம் செய்யும் ஒரு மையமாக மாற்றப்பட்டது. இந்தச் செயல்முறை மருத்துவக் கருவிகள் மற்றும் பொருட்களில் இருந்து பாக்டீரியா மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அகற்ற உதவுகிறது.

ஐ.ஏ.இ.ஏ-வின் கூற்றுப்படி, ஆர்.வி-1 செயல்பட்ட ஆண்டுகளில், அது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளாலும் வழங்கப்பட்ட அணு எரிபொருளைப் பயன்படுத்தியது. சமீபத்தில் அகற்றப்பட்ட, எஞ்சியிருந்த அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் சில, தொடக்கத்தில் அந்த நாடுகளில் இருந்து வந்தவை.

எளிதாகக் கூறுவதெனில், வெனிசுவேலா சமீபத்தில் ஒப்படைத்த யுரேனியம் ரகசிய ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. அது, அணுசக்தியின் அமைதியான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சர்வதேச திட்டத்தின் கீழ், 1960களில் இருந்து இயங்கி வந்த ஓர் ஆராய்ச்சி அணு உலையில் மீதமிருந்த எரிபொருளாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு அணு உலை மூடப்பட்ட பிறகு, அதில் எஞ்சியிருந்த எரிபொருள் சேமிப்பில் வைக்கப்பட்டு இருந்தது. உலகளாவிய அணுசக்திப் பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நடவடிக்கையின் மூலம் அது அங்கிருந்து அகற்றப்பட்டது.

யுரேனியம் புவேர்ட்டோ கபெல்லோ துறைமுகத்தில் ஏற்றப்பட்டு, ரகசியமாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது

பட மூலாதாரம், NNSA

படக்குறிப்பு, யுரேனியம் புவேர்ட்டோ கபெல்லோ துறைமுகத்தில் ஏற்றப்பட்டு, ரகசியமாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது

மதுரோ சிறைபிடிப்பு முதல் யுரேனியம் மீட்பு வரை

இந்த நடவடிக்கையில் பங்கு வகித்த பிரிட்டிஷ் அரசு, எஞ்சியிருந்த அணு எரிபொருளை அகற்றுமாறு வெனிசுவேலா அதிகாரிகள் முதன்முதலில் 2017ஆம் ஆண்டிலேயே கோரிக்கை விடுத்து இருந்ததாக பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தது.

அதற்கு அடுத்த ஆண்டான, 2018இல் சர்வதேச அணுசக்தி முகமையின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, பிரிட்டன் இந்தத் திட்டமிடல் செயல்முறையில் இணைந்தது. இதன் மூலம், இந்த நடவடிக்கை இறுதியாகச் செயல்படுத்தப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இதுகுறித்த விவாதங்களும் ஏற்பாடுகளும் நடந்து வந்தது தெளிவாகிறது.

எனினும், ஒரு முக்கிய நிகழ்வு இந்த நடவடிக்கையின் அவசரத் தன்மையை வெகுவாக அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. செய்திகளின்படி, ஜனவரி 3ஆம் தேதி வெனிசுவேலாவின் அப்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடிக்க நடந்த முயற்சி, யுரேனியத்தை அகற்றும் பணியைத் துரிதப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது.

மே 7ஆம் தேதி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், வெனிசுவேலாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் யிவான் கில், மதுரோவை சிறை பிடிப்பதற்காக அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை, யுரேனியத்தை அகற்றுவது தொடர்பான "ஆபத்து அளவைப் புறநிலையாக அதிகரித்ததுடன், அதன் அவசரத் தன்மையையும் உறுதிப்படுத்தியது" என்று குறிப்பிட்டார். யுரேனியத்தை அகற்றுமாறு வெனிசுவேலா ஏற்கெனவே சில காலமாகக் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கைப்படி, அமெரிக்க ராணுவத்தின் இந்த நடவடிக்கை, 'வெனிசுவேலா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின்' தலைமையகத்திற்கு மிக அருகிலேயே நடைபெற்றது. இந்த நடவடிக்கை, பழைய ஆர்.வி-1 அணு உலைக்கு சுமார் 50மீட்டர் தொலைவு வரை நெருங்கி வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேமித்து வைக்கப்பட்டு இருந்த யுரேனியத்தை சுற்றியிருந்த பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்தச் சூழல் அதிகரித்து இருப்பதாகவும், அதை விரைவாக அகற்றுவதன் அவசியத்தை இது வலியுறுத்தி இருப்பதாகவும் வெனிசுவேலா அதிகாரிகள் வாதிட்டனர்.

இதன் விளைவாக, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஒரு ரகசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் வெனிசுவேலா அதிகாரிகள், அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம், சர்வதேச அணுசக்தி முகமை, பிரிட்டிஷ் அரசு ஆகியவை ஈடுபட்டன. வெனிசுவேலாவில் இருந்து யுரேனியத்தை பாதுகாப்பாக அகற்றி, அதை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்காக இருந்தது.

வெனிசுவேலா அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின்போது சர்வதேச அணுசக்தி முகமை பல முக்கியப் பணிகளைச் செய்தது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல், தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், நிறுவன ரீதியிலான ஆதரவை வழங்குவத்ல், இந்தச் செயல்முறையில் ஈடுபட்ட வெனிசுவேலா பணியாளர்களுக்குப் பயிற்சியளித்தல் ஆகிய பணிகளை அந்த முகமை மேற்கொண்டது.

பிரிட்டிஷ் கப்பலான 'பசிபிக் இக்ரெட்' வெனிசுலாவுக்கு வந்து, யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டது

பட மூலாதாரம், VANTOR

படக்குறிப்பு, பிரிட்டிஷ் கப்பலான 'பசிபிக் இக்ரெட்' வெனிசுலாவுக்கு வந்து, யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டது

வெனிசுலா அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின்போது IAEA பல முக்கியப் பணிகளை ஆற்றியது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல், தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், நிறுவன ரீதியான ஆதரவை வழங்குதல் மற்றும் இச்செயல்முறையில் ஈடுபட்ட வெனிசுலாப் பணியாளர்களுக்குப் பயிற்சியளித்தல் ஆகிய பணிகளை அந்த முகமை மேற்கொண்டது.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் உள்ள ஐகென் நகரில் அமைந்துள்ள 'சவான்னா ரிவர் சைட்' என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்டது. தற்போது, அணுசக்திப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் இந்த மையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இடமாற்றப் பணியை, பிரிட்டனின் 'அணுசக்தி உலைகளை அகற்றும் ஆணையத்தின்' ஒரு பிரிவான 'அணுப்பொருள் போக்குவரத்துத் தீர்வுகள்' நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிறுவனம் 'பசிபிக் இக்ரெட்' என்ற பெயருடைய ஒரு சிறப்பு சரக்குக் கப்பலை இந்தத் திட்டத்திற்காக வழங்கியது.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களுக்கு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உணர்திறன் மிக்க அணுசக்திப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காகவே இந்தக் கப்பல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, வெனிசுவேலாவில் இருந்து யுரேனியத்தை வெளியே கொண்டு செல்ல பசிபிக் இக்ரெட் கப்பல் பயன்படுத்தப்பட்டது. தென் கரோலினாவின் சார்ல்ஸ்டன் அருகே இருந்தபோது, ஏப்ரல் 11 அன்று கல்லப் தனது செயற்கைக்கோள் இருப்பிடத் தரவை அனுப்புவதை நிறுத்தியது. ஒரு வாரம் கழித்து, பிபிசி வெரிஃபை உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம், அந்தக் கப்பல் வெனிசுவேலாவில் உள்ள புவேர்ட்டோ கபெல்லோவில் நங்கூரமிட்டு இருப்பதை உறுதி செய்தது.

பின்னர் மே 4ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், பசிபிக் இக்ரெட் கப்பல் அமெரிக்காவை நோக்கித் திரும்பும் பயணத்தை மேற்கொண்டிருப்பதைக் காட்டின. அந்தக் கப்பலுடன் ஒரு பாதுகாப்பு கப்பல் போலத் தோற்றமளிக்கும் ஒன்றும் உடன் செல்வது போலத் தோன்றியது. மே 8க்குள் அது ஏற்கெனவே தென் கரோலினாவின் சார்ல்ஸ்டனுக்கு திரும்பி வந்துவிட்டதைப் படங்கள் காட்டின.

பிரிட்டனின் அணுசக்தி ஒழுங்குமுறை அலுவலகம் இந்த நடவடிக்கையைப் பாராட்டி, "இது எல்லா நேரங்களிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், மிக நுணுக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு முயற்சி" என்று கூறியது.

அமெரிக்க வெளியுறவுத் துறையும் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அறிவித்தது. மே மாதத் தொடக்கத்தில், தேசிய அணுசக்திப் பாதுகாப்பு நிர்வாகம், "7,340 கிலோவுக்கும் அதிகமான ஆயுதத் தர அணுப் பொருட்களை அகற்றியுள்ளது அல்லது அப்புறப்படுத்தியது என்பதை உறுதி செய்துள்ளது" என்று அது சுட்டிக்காட்டியது.

கடந்த 1960கள் மற்றும் 1970களில் கட்டப்பட்ட பல ஆராய்ச்சி அணு உலைகளுக்கு, அறிவியல் சோதனைகளை நடத்துவதற்கு முதலில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப்பட்டதாக சர்வதேச அணுசக்தி முகமை விளக்கியது. இருப்பினும், நவீன தொழில்நுட்பம் இப்போது குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தி இதேபோன்ற ஆய்வுகளைச் செய்ய அனுமதிக்கிறது. இதில் 20%க்கும் குறைவான யுரேனியம்-235 உள்ளது மற்றும் இது பாதுகாப்பு கண்ணோட்டத்தில் மிகவும் குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த மாற்றத்தின் விளைவாகப் பல நாடுகள் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கு பதிலாக குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்த தங்கள் ஆராய்ச்சி அணு உலைகளை மாற்றியமைத்துள்ளன. மற்ற பழைய அணு உலைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. சர்வதேச அணுசக்தி முகமையின் கூற்றுப்படி, உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அணு உலைகள் மற்றும் மருத்துவ ஐசோடோப் உற்பத்தி வசதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன அல்லது மூடப்பட்டுள்ளன.

இந்த முயற்சிகள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 7,000 கிலோ அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்க சர்வதேச அதிகாரிகளுக்கு உதவியுள்ளன. வெனிசுவேலாவில் இருந்து அகற்றப்பட்ட 13 கிலோ இப்போது அந்த மொத்த அளவில் சேர்க்கப்பட்டுள்ளது.

*கூடுதல் தகவல்கள்: பிபிசி வெரிஃபை

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு