எல்-நினோ தமிழ்நாட்டின் மீது தாக்கம் ஏற்படுத்துமா? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

எல்-நினோ தமிழ்நாட்டின் மீது தாக்கம் ஏற்படுத்துமா? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னை போன்ற நகரங்களில், கோடைக்காலம் என்பது நீண்ட வெப்ப அலைகள், அதிகரித்து வரும் மின்சாரத் தேவை, தொடர்ச்சியான தண்ணீர் பற்றாக்குறை குறித்த அச்சங்கள் எனத் தீவிரமான நிகழ்வுகள் நிறைந்த ஒரு பருவமாக மாறி வருகிறது.

தென்னிந்திய நிலப்பரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள பசிபிக் பெருங்கடலில் எல்-நினோ எனப்படும் ஒரு காலநிலை அமைப்பு உருவாகத் தொடங்கும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

வெகுதொலைவில் இருந்தாலும், அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்த நிகழ்வு சரியாக எப்படிச் செயல்படுகிறது? குறிப்பாக, தமிழ்நாட்டின் மீது இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

உலகளாவிய விளைவுகளைக் கொண்ட பசிபிக் மாற்றம்

எல்-நினோ என்பது கடல் மற்றும் வளிமண்டலத்தை உள்ளடக்கிய ஓர் இயற்கை சுழற்சியான எல்-நினோ-தெற்கு அலைவு (ENSO) எனப்படும் ஒரு பெரிய காலநிலை அமைப்பின் ஓர் அங்கமாகும்.

சாதாரண சூழ்நிலைகளில், ஆண்டு முழுவதும் கிழக்கிலிருந்து மேற்காகத் தொடர்ந்து ஒரே திசையில் வீசும் வர்த்தகக் காற்று (தொடர்ந்து நில நடுக்கோட்டை நோக்கியும் பின்னர் மேற்கு நோக்கித் திரும்பியும் வீசும் கடும் காற்று) வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் வெப்பமான மேற்பரப்பு நீரை மேற்கு நோக்கித் தள்ளுகின்றன. இது தென் அமெரிக்காவுக்கு அருகில் குறைந்த நீர் மேலே எழுவதற்கு அனுமதிக்கிறது.

இருப்பினும், எல்-நினோ நிகழ்வின்போது, இந்தக் காற்று பலவீனமடைகின்றன அல்லது திசைமாறுகின்றன. வெப்பமான நீர் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் முழுவதும் கிழக்கு நோக்கிப் பரவி, கடல் மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்தி, வளிமண்டல சுழற்சியை மாற்றுகிறது.

விஞ்ஞானிகள் இதை "ஒருங்கிணைந்த கடல்-வளிமண்டல நிகழ்வு" என்று விவரிக்கின்றனர். இது உலகளவில் வானிலை முறைகளை சீர்குலைக்கக்கூடும். இது பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது மற்றும் பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும்.

இதன் விளைவுகள் சீரானவையாக இருக்காது என்கிறார், சுயாதீன வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த். "சில பகுதிகள் கனமழையை அனுபவிக்கும் அதேவேளையில், பிற பகுதிகள் வறட்சி மற்றும் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலை நிலவும்" என்று விளக்குகிறார் அவர். மேலும் காலநிலை மாற்றம் இந்த உச்சநிலைகளை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

எல்-நினோ தமிழ்நாட்டின் மீது தாக்கம் ஏற்படுத்துமா? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

இந்திய நிலப்பரப்பில் எல்-நினோவின் முக்கியத்துவம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தியாவின் காலநிலை மற்றும் பருவமழையுடன், குறிப்பாக, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையுடன் இந்த நிகழ்வு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

என்சோ-வுக்கும் (ENSO) பருவமழைக்கும் இடையிலான தொடர்பு பல்லாண்டுக் காலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இது இந்திய நிலப்பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான காலநிலை நிகழ்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின்படி, எல்-நினோ பொதுவாக இந்தியாவில் பலவீனமான பருவமழையுடன் தொடர்புடையது.

எல்-நினோவுக்கும் தென்மேற்குப் பருவமழைக்கும் இடையே "தலைகீழ் உறவு" இருப்பதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. அதாவது, பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பமான சூழல், இந்திய துணைக் கண்டத்தில் மழைப்பொழிவு குறைவுக்கு வழிவகுக்கும் என்று விளக்குகிறார் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்.

நேச்சர் ஆய்விதழில் வெளியான சமீபத்திய ஆய்வு என்சோ மற்றும் இந்திய பருவமழையை "வெப்பமண்டல காலநிலையின் இரண்டு மாபெரும் சக்திகள்" என்று விவரிக்கிறது. மேலும் அவை ஒன்றுக்கொன்று எவ்வளவு வலுவாக தாக்கம் செலுத்துகின்றன என்பதையும் அது எடுத்துக்காட்டுகிறது.

எல்-நினோவுக்கும் இந்தியாவின் பருவமழைக்கும் இடையிலான தொடர்புக்கு, பலவீனமான பருவமழை, இந்தியா முழுவதும் விவசாயம், நீர் இருப்பு ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய விளைவுகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உருவாகி வரும் எல்-நினோ சூழ்நிலையின் காரணமாக, 2026ஆம் ஆண்டில் தென்மேற்குப் பருவமழை "இயல்பைவிடக் குறைவாக" இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது.

எல்-நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஒரு வெப்பமயமாதல் கட்டத்தைக் குறிப்பதாகவும், அது வளிமண்டல சுழற்சி முறைகளை மாற்றியமைப்பதாகவும் புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல ஆய்வு நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் கூறியுள்ளார். இதன் விளைவாக, இந்திய துணைக் கண்டத்துக்கு மழையைக் கொண்டு வருகின்ற பருவக் காற்று பலவீனமடையக்கூடும்.

வரலாற்று ரீதியாக, இந்தியாவில் ஏற்பட்ட பல பெரிய வறட்சிகள் எல்-நினோ நிகழ்வுகளுடன் ஒருங்கே நிகழ்ந்துள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எல்-நினோவின் விளைவாக வெப்பம் கடுமையாக இருக்கும் எனக் கூறும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், "மழைப்பொழிவு விஷயத்தில் எல்-நினோ மட்டுமின்றி இந்திய பெருங்கடல் இருமுனையும் (Indian Ocean Dipole) சேர்ந்தே தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய பெருங்கடல் இருமுனை நேர்மறையாக இருந்தால் மழைப்பொழிவு நல்ல வகையில் இருக்கும். அதுவே, எதிர்மறையாக இருந்தால் மழைப்பொழிவு குறைவாக இருக்கும்," என்று குறிப்பிட்டார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள்படி, 2026ஆம் ஆண்டின் பருவமழை நாடு முழுவதும் வழக்கத்தைவிடக் குறைவாகவே இருக்கக்கூடும். வழக்கமான நீண்டகால சராசரி மழை அளவில் சுமார் 92% மட்டுமே பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது "வழக்கத்தைவிடக் குறைவான" அளவு என்ற பிரிவின்கீழ் வருகிறது.

இந்த முன்னறிவிப்பு உண்மையானால், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா "வழக்கத்தைவிடக் குறைவான" மழைப்பொழிவைக் கொண்ட பருவமழைக் காலத்தை 2026இல் எதிர்கொள்ளும்.

மேலும், எதிர்பார்க்கப்படும் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாக இருப்பது, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் 'எல்-நினோ' சூழல் உருவாகக்கூடும் என்ற சாத்தியக்கூறுதான் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு மழை அளவு குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வடகிழக்கு, வடமேற்கு மற்றும் தென் இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கமான அளவிலோ அல்லது அதைவிட சற்று அதிகமாகவோ மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

எல்-நினோ தமிழ்நாட்டின் மீது தாக்கம் ஏற்படுத்துமா? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

தென்னிந்திய மாநிலங்களை பாதிக்குமா?

அடிப்படையில், "வழக்கத்துக்கு மாறான அளவில் பசிபிக் பெருங்கடல் சூடாவதால் ஏற்படும் நிகழ்வே எல்-நினோ எனப்படுகிறது," என்று விளக்கிய ஸ்ரீகாந்த், "இது ஒரு முன்னறிவிப்பு மட்டுமே; எல்-நினோ உருவாகும் வலிமை மற்றும் கால அளவைப் பொறுத்தே அதன் தாக்கம் மாறுபடும். பசிபிக் பெருங்கடல் தொடர்ந்து வெப்பமடைந்தால், அந்த நிகழ்வு உருவாகி, அதன் விளைவுகளை இந்திய நிலப்பரப்பு சந்திக்கக்கூடும்," என்று விளக்கினார்.

எல்-நினோ மற்றும் தென்மேற்குப் பருவமழை இடையிலான "தலைகீழ் உறவு" நன்கு நிறுவப்பட்டு இருந்தாலும், அது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஒரே மாதிரியாகப் பாதிப்பதில்லை, இது குறிப்பாக தென் மாநிலங்களுக்குப் பொருந்தும் என்கிறார் ஸ்ரீகாந்த்.

மேலும் பேசிய அவர், "எல்-நினோ காலகட்டத்தின் தென்மேற்குப் பருவமழையைப் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பருவகால கணிப்புகளும் அதையே குறிக்கின்றன. இருப்பினும், வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை, இந்த நிகழ்வின் தாக்கம் நேர்மறையானதாகவே இருக்கக்கூடும். அதனால் சில சந்தர்ப்பங்களில் வடகிழக்குப் பருவமழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறினாலும், இது உறுதியாகக் கூற முடியாத ஒன்று," என்று விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, எல்-நினோ நிகழ்வின்போது, எந்த அளவுக்கு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிடக் குறைவான அளவே இருக்க வாய்ப்புள்ளதோ, அதே அளவுக்கு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு.

இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தலைமையிலான ஓர் ஆய்வில், நாட்டின் மத்தியப் பகுதிகளில் சமீபத்திய பத்து ஆண்டுகளில் எல்-நினோவுக்கும் மழைக்கும் இடையிலான தொடர்பு பலவீனமடைந்து இருந்தாலும், தென்னிந்தியாவில் அது ஒப்பீட்டளவில் நிலையானதாகவே நீடிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எல்-நினோ தமிழ்நாட்டின் மீது தாக்கம் ஏற்படுத்துமா? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

அதிகரிக்கும் வெப்ப அலை அபாயம்

எல்-நினோ ஆண்டில், வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் வழக்கமான அளவிலோ அல்லது அதைவிட சற்று கூடுதலாகவோ மழை பெய்யக்கூடும் என்பதை முந்தைய கால தரவுகள் சுட்டிக்காட்டுவதாகக் கூறுகிறார், சுயாதீன வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்.

அதேவேளையில், இருப்பதிலேயே மிகப்பெரிய சவாலாக இருக்கப் போவது கடுமையான வெப்பம்தான் என்று கூறும் சுந்தர்ராஜன், அதன் பாதிப்புகளை பரவலாக மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றார்.

மழைப்பொழிவு முறைகளில் மாற்றத்தைக் காட்டுவதற்கு முன்பாகவே, எல்-நினோ தெற்காசியா முழுவதும் வெப்பநிலையில் அதன் தாக்கத்தை அதிகரிக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில், "மேலும் தீவிரமான மற்றும் நீண்டகால வெப்ப அலைகள், நீர் வளங்கள் மோசமாக வற்றுதல்" போன்ற பிரச்னைகளை மக்கள் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நீர்நிலைகள் கிட்டத்தட்ட வற்றிப்போனபோது சென்னை கடுமையான நீர் நெருக்கடியைச் சந்தித்தது. இத்தகைய நிலைமைகள் விரைவாக அபாயகரமான சூழலை ஏற்படுத்தக்கூடும். இது எல்-நினோ காரணமாக மட்டுமே ஏற்பட்டது அல்ல; பல காரணிகள் இணைந்து உருவானது.

இருப்பினும், எல்-நினோ இந்தியாவின் சில பகுதிகளில் மேகங்கள் உருவாவதைத் தடுக்கும் வகையில் வளிமண்டல சுழற்சியை மாற்றியமைத்து, வெப்பநிலை மேலும் உயர்வதற்கு வழிவகுப்பதாக அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.

பல்லாண்டுக்கால ஆய்வுகளுக்குப் பிறகும்கூட, எல்-நினோவின் துல்லியமான தாக்கத்தைக் கணிப்பது இன்னும் சவாலாகவே உள்ளது. அது தனியாகச் செயல்படுவதில்லை என்பதும் இந்திய பெருங்கடலில் ஏற்படும் வெப்பமயமாதல் போன்ற பிற காரணிகளும் பருவமழையைப் பாதிக்கின்றன என்பதும் அதற்கான காரணங்களில் ஒன்று.

இந்திய பெருங்கடல் வெப்பமயமாதல், பருவமழையின் முக்கிய உந்து சக்தியான நிலம்-கடல் வெப்பநிலை வேறுபாட்டை ஏற்கெனவே பலவீனப்படுத்தி வருவதை ராக்ஸி மேத்யூ கோலின் ஆராய்ச்சி காட்டுகிறது. இது முன்னறிவிப்புகளை மேலும் சிக்கலாக்குகிறது.

அதோடு, தென்னிந்தியா போன்ற பகுதிகளில் என்சோ-பருவமழை இடையிலான உறவு வலுவாக இருந்தாலும், புயல்கள் மற்றும் பருவமழை காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் போன்ற குறுகிய கால வானிலை அமைப்புகள் போன்றவையும் உள்ளூர் மழைப்பொழிவில் தாக்கம் செலுத்துவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய கணிப்புகளின்படி, 2026ஆம் ஆண்டில் எல்-நினோ நிலைமைகள் உருவாகக்கூடும் என்பதும், ஆனால் அதன் சரியான வலிமையும் கால அளவும் நிச்சயமற்றதாகவே இருப்பதும் தெரிகின்றன.

அதே நேரம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு இது, வழக்கத்தைவிட வெப்பமான கோடைக் காலத்தையும் வலுவிழந்த தென்மேற்குப் பருவமழையையும், நிச்சயமற்ற, ஆனால் தீவிரமாக இருக்கக்கூடிய வடகிழக்குப் பருவமழையையும் வழங்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு