ஆளுநருடன் விஜய் மீண்டும் சந்திப்பு: அதிமுக, விசிக, இந்திய கம்யூ. கூறியது என்ன?

பட மூலாதாரம், Riya Mariyam R/NurPhoto via Getty Images
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அக்கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்திவிட்டது. விசிக மற்றும் இடதுசாரிகளிடம் அக்கட்சி ஆதரவு கேட்டுள்ளது.
விஜய் சந்திப்பும் ஆளுநர் அறிக்கையும்
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் மக்கள் மாளிகையில் (ஆளுநர் மாளிகை) தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்துள்ளார். முன்னதாக நேற்றும் விஜய் பொறுப்பு ஆளுநரை சந்தித்தார்.
பொறுப்பு ஆளுநரை சந்தித்துவிட்டு விஜய் சென்ற சில மணி நேரத்திற்குப் பிறகு லோக் பவன் (ஆளுநர் மாளிகை) சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், "தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜயை இன்று லோக் பவனுக்கு அழைத்தார். இந்த சந்திப்பின்போது, ஆட்சியமைப்பதற்கு அவசியமான, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேவைப்படும் பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என்று ஆளுநர் விளக்கினார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மீது திருமாவளவன் விமர்சனம்
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநரின் செயல்பாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாஜகவும் அமித் ஷா- மோதி ஆகியோரும் தமிழ்நாடு அரசியலில் தலையீடு செய்து குழப்பத்தை உருவாக்குகின்றனர். தவெக தனிப்பெரும் கட்சியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அவரை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அதுதான் அரசியலமைப்பு சட்டம் காட்டும் வழிகாட்டுதல். அவர் ஆதரவு கோரிய நிலையில் இன்னும் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இங்கு குழப்பம் ஏற்படுவதற்கு இடம் கொடுக்கிறார். அடுத்ததாக, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடியவர்கள் யார், யார் என்ற பட்டியலை ஆளுநர் கோர முடியாது. விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அவருக்கு அறுதி பெரும்பான்மை இருக்கிறதா என்பதை சட்டப்பேரவையில் நிரூபிப்பதற்கு அவரை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், பாஜக திரைமறைவில் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
மக்கள் அளித்த தீர்ப்பின்படி விஜய் பதவியேற்பதுதான் சரி, அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம். பாஜக, ஆர் எஸ் எஸ், சங் பரிவார் அவரை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்புகிறோம் என அவர் கூறியிருப்பதை நாங்கள் பரிசீலிக்கிறோம். முன்கூட்டியே முடிவை அறிவிக்க முடியாது, பரிசீலித்து அறிவிக்கப்படும்.
விஜய்க்கு மத்திய அரசே தாங்களாக பாதுகாப்பு அளித்தனர். இப்போது அதை நீக்குகின்றனர். விஜயை தங்களின் கைப்பாவையாக வைத்துக்கொள்ள பாஜக முயற்சிக்கிறது. ஆளுநரும் அதற்கேற்ப செயல்படுவதாக தெரிகிறது. அவரை முதலமைச்சராக்க அனுமதிக்காவிட்டால் தமிழ்நாட்டை மேலும் குழப்ப திட்டமிட்டுள்ளனர் என்றே தெரிகிறது." என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், FB/Thirumavalavan
இந்திய கம்யூனிஸ்ட் கூறியது என்ன?
தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
"சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், தெளிவான தீர்ப்பை வழங்கவில்லை. எனினும், தவெகவுக்கு 108 உறுப்பினர்களை வழங்கி, அதனை தனிப் பெரும் முதன்மை எண்ணிக்கை கொண்ட கட்சியாக தேர்வு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியுள்ளார். பதவி ஏற்புக்கு முன்பு தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல.
தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் உணர்வை மதித்து நடக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.

பழனிசாமி கிங்மேக்கர் ஆவாரா? அதிமுக பதில்
தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. நேற்று காங்கிரஸ் தன் 5 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தது.
மறுபுறம், திடீர் திருப்பமாக அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் திடீரென புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், சென்னை பசுமைவழிசாலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர்களின் ஒருவரான செம்மலை, "எங்களின் நிலைப்பாட்டை பற்றி எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவெடுப்பார். அவர் ஒரு தேர்ந்த அரசியல் தலைவர். எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டுமோ அதை கச்சிதமாக செய்வார். அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் நடக்கும். அவர் எடுக்கும் முடிவு நல்லதாகவே இருக்கும்." என்றார்.
புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, "எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் வரவழைக்கப்பட்டு சட்டப்பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது நடைமுறை. அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அவர்கள் ஊருக்கு செல்லாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிலென்ன தவறு?" என்றார்.
செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்களை தவெவுக்கு இழுத்துவிடுவார் என்ற அச்சத்தினால் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்விக்கு, "அப்படியெல்லாம் எதுவும் நடக்காது, அப்படிப்பட்ட நபர்கள் எங்கள் எம்எல்ஏக்கள் அல்ல. அனைவரும் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு கட்டுப்பட்டவர்கள். இது வதந்தி" என்றார்.
அதிமுக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை என தகவல் பரவுவது குறித்த கேள்விக்கு, "எதுவாக இருந்தாலும் நல்ல முடிவை தீர்க்கமாக எடுப்பார்." என்றார்.
எடப்பாடி பழனிசாமி 'கிங் மேக்கரா' என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "அவர் கிங் மேக்கர் அல்ல, அவரேதான் கிங்." என்றார்.

ஆனால், தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக வெளியான செய்தி தவறானது என, அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக தவெகவுக்கு ஆதரவளிப்பது போன்ற செய்திகளும் கருத்துகளும் வந்துகொண்டிருக்கின்றன. அது முற்றிலும் தவறான செய்தி. அதிமுக மிகப்பெரிய இயக்கம். எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.
இந்த சூழலில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டாக புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது. என் சகோதரர் மு.க.ஸ்டாலின் 'மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்' என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
'பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல' என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்." என தெரிவித்துள்ளார்.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு

முன்னதாக, தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை புதன்கிழமை நேரில் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
விஜய் உடன் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், செங்கோட்டையன், என்.ஆனந்த், அருண் ராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உடன் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

இந்த நிலையில், 16வது சட்டப்பேரவை மே 5-ஆம் தேதி முதல் கலைக்கப்படுவதாக நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன. தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?
இந்நிலையில், நேற்று இரவு அதிமுக-திமுக கூட்டணி குறித்த ஊகங்கள் தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களில் பெரியளவில் பேசுபொருளாக மாறியது.
எனினும், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி தன் எக்ஸ் பக்கத்தில், "காங்கிரஸின் துரோகத்தையும் (ஒருவேளை மற்ற கூட்டணிக் கட்சிகளின் துரோகத்தையும்) மீறி, திமுக ஒரு திறமையான எதிர்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதை நிறுத்துமாறு பாஜகவை அதிமுக வற்புறுத்துகிறது. இது மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். ஜனநாயகம் வெல்லும் என நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு காபந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பொறுத்திருந்து பார்ப்போம்" என தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு நெருக்கடியோ அல்லது மற்றொரு தேர்தலையோ திமுக விரும்பவில்லை என்றும், "பள்ளி குழந்தைகளுக்கு இலவச காலை உணவுத் திட்டம் மற்றும் பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை போன்ற புதிய திட்டங்களை புதிய அரசு தொடர வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், mkstalin/X
விசிக, இந்திய கம்யூ. கூறியது என்ன?
இந்தச் சூழலில் தவெக-விடம் இருந்து ஆதரவு கோரி கடிதம் வந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், முற்போக்கு அரசை அமைக்க விரும்புகிறோம், அதற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"நாங்கள் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டோம்" என்றும் அவர் கூறினார்.
செயற்குழுவில் ஆலோசித்த பிறகு முடிவு அறிவிக்கப்படும் என வீரபாண்டியன் தெரிவித்தார்.
இதேபோல் விசிகவும் இதுதொடர்பாக ஆலோசித்து தனது முடிவை அறிவிக்கும் என்று அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































