தலித் இளைஞரை மணமுடித்த பெண் காரில் கடத்தல் - இரண்டரை மணி நேரத்தில் காவல்துறை மீட்டது எப்படி?

பட மூலாதாரம், Ajithkumar
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
"என் மனைவியை அவரின் வீட்டார் காரில் கடத்த முயன்றபோது நானும் என் அம்மாவும் எவ்வளவோ தடுக்க முயன்றோம். ஆனாலும் தடுக்க முடியவில்லை. என் மனைவியை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி வேகமாக காரை ஓட்டிச் சென்றுவிட்டனர்," என்கிறார் அஜித்குமார்.
திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) நடந்த சம்பவம் இது. அஜித்குமாரின் மனைவி சித்திரவள்ளியை காரில் கடத்த முற்பட்டபோது அவரும் அவரது அம்மா விஜயலட்சுமியும் தடுக்க முயற்சிக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் ஞாயிற்றுக்கிழமை வைரலானது.
பட்டப்பகலில் நடந்த கடத்தல் சம்பவம் இந்த காணொளி மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பட்டியல் பிரிவை சேர்ந்த அஜித்குமார் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சித்திரவள்ளியை அவருடைய பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி சமீபத்தில் தான் திருமணம் செய்த நிலையில் இச்சம்பவம் நடந்தது.
எனினும், கடத்தப்பட்ட சுமார் இரண்டரை மணிநேரத்தில் போலீஸார் அப்பெண் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரை மீட்டு கணவர் அஜித்குமாருடன் மீண்டும் சேர்த்து வைத்தனர். இச்சம்பவத்தில் என்ன நடந்தது?
மணப்பாறை சித்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். பட்டியல் பிரிவை சேர்ந்த இவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவரும் முடுக்குபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த சித்திரவள்ளி என்பவரும் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சித்திரவள்ளி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். மணப்பாறையில் சித்திரவள்ளி தன் சகோதரியின் பாத்திரக் கடையில் பணியாற்றி வந்தபோது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
"எங்கள் திருமணத்துக்கு சித்திரவள்ளியின் வீட்டில் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என தெரியும். அவ்வளவு எதிர்ப்பு இருந்தது. நான் அவர்கள் வீட்டுக்கு சென்று எங்களின் விருப்பத்தை தெரியப்படுத்தினால், சித்திரவள்ளியை ஏதாவது செய்து விடுவார்கள் என பயந்தேன். அதனாலேயே அங்கு செல்லவில்லை," என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய அஜித்குமார்.
எனவே இருவரும் ஜூன் 25 அன்று சித்திரவள்ளியின் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அன்றைய தினமே மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அஜித்குமாரும் சித்திரவள்ளியும் சென்றுள்ளனர். அங்கு சமாதான முயற்சி நடைபெறவே சித்திரவள்ளியின் பெற்றோர் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் காவல் நிலையத்திலிருந்து சென்றுவிட்டதாக கூறுகிறார் அஜித்குமார். பின்னர், சித்திரவள்ளி தன் கணவர் அஜித்குமார் வீட்டிலேயே இருந்துள்ளார்.
"வீடியோவில் பதிவான அந்த கடத்தல் சம்பவத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு (ஜூலை 1) அவருடைய அக்கா கணவர் முருகேசன் என்னை சாதியை குறிப்பிட்டு அநாகரிகமாக திட்டி, தாக்க முயற்சித்தார். ஆனால், நான் அவரை மிரட்டியதாக கூறி, காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்துவிட்டார்." என்கிறார் அஜித்குமார்.
இந்த புகார் மீதான விசாரணைக்காக மணப்பாறை காவல் நிலையத்துக்கு ஜூலை 4 அன்று அஜித்குமார் தன் மனைவி சித்திரவள்ளி, தாயார் விஜயலட்சுமி மற்றும் சகோதரருடன் சென்றுள்ளார். ஆனால், அன்றைய தினம் புகார் அளித்த முருகேசன் வராததால், அவர் காவல் நிலையத்துக்கு வரும் நாளில் தாங்கள் மீண்டும் வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டதாக தெரிவித்தார் அஜித்குமார்.
ஆட்டோ மூலம் வீடு திரும்பி கொண்டிருந்தபோதுதான் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறவனூர் அருகே சித்திரவள்ளி காரில் கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
"காவல் நிலையத்தில் இருந்து நாங்கள் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு காரில் வந்த சித்திரவள்ளியின் சகோதரியின் கணவர் முருகேசன் மற்றும் அவருடைய தம்பி பிரகாஷ், ஆகியோர் ஆட்டோவை மறித்து காரை நிறுத்தி, சித்திரவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர். சித்திரவள்ளியின் அண்ணன் மலைச்சாமி, தம்பி அழகர் ஆகியோர் காரின் கதவை மூடி காரை வேகமாக இயக்கி காட்டுப் பக்கமாக சென்றனர்," என அஜித்குமாரின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், UGC
அப்போது மற்றொரு காரில் வந்த 3 பேர் அஜித்குமாரை பிடித்துக்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்குமாரும் அவருடைய தாய் விஜயலட்சுமியும் அந்த கடத்தலை தடுக்க எவ்வளவோ முயன்றும் கார் வேகமாக சென்றதை வைரலான காணொளியில் பார்க்க முடிந்தது.
தன் மனைவியை கடத்தியபோது தன்னையும் தன் மனைவியையும் தாக்கியதாகவும் தன்னை சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியதாகவும் அஜித்குமார் கூறினார்.
"என்னையும் என் மனைவியையும் முகத்தில் தாக்கினர். இடுப்பில் கத்தி வைத்திருந்தனர். நானும் என் அம்மாவும் எவ்வளவோ கதறியும் எதுவும் செய்ய முடியவில்லை. 'விடுங்க, விடுங்க' என காரை தட்டினேன். என் அம்மாவும் கத்தினார்." என்றார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
அதன்பின், உடனடியாக அஜித்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் இதுகுறித்து பேசிய திருச்சி எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ், "சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. ஏற்கெனவே சம்பந்தப்பட்ட முருகேசன் என்பவரின் மொபைல் எண் எங்களிடம் விசாரணைக்காக இருந்ததால், அவருடைய எண்ணை நாங்கள் பின்தொடர்ந்தோம். அதன்மூலம் அப்பெண்ணை வைத்திருந்த இடத்தைக் கண்டறிந்தோம். இரண்டரை மணிநேரத்தில் அப்பெண்ணை மீட்டுவிட்டோம். தற்போது அப்பெண் அவரின் கணவர் வீட்டில் உள்ளார்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
யாகவபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் அடைக்கப்பட்டிருந்த சித்திரவள்ளியை போலீஸார் மீட்டனர்.
"அஜித்குமாரை விட்டுப் பிரிந்துவிடு, இல்லையென்றால் அவரை கொன்றுவிடுவோம், என குடும்பத்தினர் சித்திரவள்ளியை மிரட்டியுள்ளனர்," என்கிறார், இத்தம்பதியின் வழக்கறிஞர் ஆனந்தன்.
இச்சம்பவம் தொடர்பாக, சித்திரவள்ளியின் சகோதரியின் கணவர் முருகேசன் மற்றும் அவருடைய தம்பி பிரகாஷ் , சித்திரவள்ளியின் அண்ணன் மலைச்சாமி, தம்பி அழகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆள் கடத்தல், மிரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சித்திரவள்ளி இந்த அதிர்ச்சி மற்றும் பயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை எனவும் அஜித்குமார் கூறினார்.
இதுதொடர்பாக, சித்திரவள்ளியின் குடும்பத்தினரிடம் பேசுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































