இரான் - அமெரிக்கா பேச்சுக்கு நடுவே போர் விமானங்களை உள்ளடக்கிய பாகிஸ்தான் குழு சௌதி சென்றது ஏன்?

பட மூலாதாரம், GOP
பாகிஸ்தானில் இருந்து ஒரு ராணுவக் குழு சௌதி அரேபியாவின் கிங் அப்துல் அஜீஸ் விமானப்படை தளத்திற்கு வந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை சௌதி பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, "இந்தப் பயணம், இரண்டு சகோதரத்துவ நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான கூட்டு உத்திசார் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்றுள்ளது."
மேலும் அந்த அறிக்கையில், "பாகிஸ்தான் குழுவில் அந்நாட்டு விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் உதவி விமானங்கள் இடம்பெற்றுள்ளன. இது இரு நாடுகளின் பாதுகாப்பு படைகள் இடையே கூட்டு ராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. செயல்பாட்டு தயார்நிலையின் தரத்தை உயர்த்தி பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க பங்களிக்கிறது."
2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா 'கூட்டு உத்திசார் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன. அதன் கீழ் இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல் இரண்டு நாடுகளுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும்.
இரு நாடுகளின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை 'வரலாற்றுச் சிறப்புமிக்கது' எனக் குறிப்பிட்டிருந்தனர்.
பல தசாப்த கால வரலாறு கொண்ட ராணுவ ஒத்துழைப்பு

பட மூலாதாரம், Ministry of Defense Saudi Arab
கத்தார் தலைநகர் தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு அரபு நாடுகள் மத்தியில் கவலை நிலவிய சமயத்தில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
சமீபத்திய இரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போரில், இரானிய ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்களால் சௌதி அரேபியா இலக்கு வைக்கப்பட்டபோதும் இந்த ஒப்பந்தம் குறிப்பிடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, சௌதி தலைநகர் ரியாத்தில் முகமது பின் சல்மான் மற்றும் ஷெபாஸ் ஷெரீஃப் இடையேயான சந்திப்புக்குப் பிறகு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் "எட்டு தசாப்தங்களாக பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா இடையேயான பாதுகாப்பு கூட்டணி மற்றும் உத்திசார் நலன்களைக் கருத்தில் கொண்டு இருநாடுகளும் 'பரஸ்பர பாதுகாப்புக்கான உத்தி சார் ஒப்பந்தத்தை' கையெழுத்திட்டுள்ளன." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பது, எந்த தாக்குதலுக்கும் எதிரான பொது தற்காப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் எந்த ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதுவது ஆகியவையே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா இடையேயான இந்த ஒப்பந்தம், தங்களின் தற்காப்பு மற்றும் பாதுகாப்பை பராமரித்து பிராந்தியம் மற்றும் உலகில் அமைதியை நிறுவுவது என்கிற இருநாடுகளின் பொது நோக்கம் பிரதிபலிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு சௌதி பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக ஒரே நேர் கோட்டில் எப்போதும் சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு பல தசாப்தங்களாக தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 2015-இல் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷரீஃப், பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக சௌதி அரேபியா தலைமையிலான ராணுவ கூட்டணியின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு படையை தலைமை தாங்குவதற்கு நியமிக்கப்பட்டார்.
மத்திய கிழக்கின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் உத்தரவாதமா?

பட மூலாதாரம், @Spa_Eng
இந்த ஒப்பந்தம் பற்றி மேலதிக தகவல்களை இரு நாடுகளும் வழங்காத நிலையில் இந்தியா அதற்கு எதிர்வினையாற்றி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், "எங்களின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மையில் தாக்கம் செலுத்த வல்ல இந்த முக்கியமான முன்னேற்றத்தின் மீது கவனம் செலுத்தி தொடர்ந்து வேலை செய்வோம். தனது நலன்களைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதியாக இருக்கிறது." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சமூக ஊடகப் பயனர்கள் இந்த ஒப்பந்தம் தொடர்பான தங்களின் பார்வையை பகிர்ந்திருந்தனர்.
பாகிஸ்தான் பிரதமரின் சௌதி அரேபிய பயணம் தொடர்பான காணொளியைப் பகிர்ந்து பத்திரிகையாளர் தலத் ஹுசைன் குறிப்பிடுகையில், "வளங்கள் மற்றும் வலுவான ராணுவ திறன் இணைந்த இந்தக் கலவையானது ஆட்டத்தை மாற்றியமைக்கும் கூட்டணியாகும். இது இதைவிட மிகச் சரியான வியூக ரீதியாகவும் அமைந்துள்ளது." என்றார்.
முன்னாள் அமைச்சர் முஷாஹித் ஹுசைன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஒப்பந்தத்தின் மூலம், மத்திய கிழக்கின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பவராக மேற்குலக நாடுகளின் இடத்தை பாகிஸ்தான் அமைதியாகப் பிடித்துள்ளது." எனத் தெரிவித்தார்.
இரு முஸ்லிம் நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் உத்தி சார் பாதுகாப்பு ஒப்பந்தம் மூன்று காரணங்களுக்காக மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டார். அதனை மேலும் விவரித்த அவர், "இது கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் அரேபியர்களுக்கு அமெரிக்கா செய்த துரோகம் ஆகியவற்றுக்குப் பிறகு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் பாலத்தீனம், கத்தார், இரான், லெபனான் மற்றும் யேமனில் இருந்து 'அகண்ட இஸ்ரேல்' தாக்குதலுக்கு உள்ளான நேரத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது." என்றார்.

அணுசக்தி பாதுகாப்பு மீதான தெளிவின்மை

பட மூலாதாரம், SPA
இந்த ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு இந்திய பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்திய பிறகு சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவின் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கைக்கு இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் கேள்வி.
இந்த ஒப்பந்தம் அதிர்ச்சியளிப்பதாக இந்திய பயனர் தேகஸ்வி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்த ஒப்பந்தம் மிகத் தீவிரமான வியூக மாற்றம் என்றும் இது பாகிஸ்தான் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் நீண்ட காலமாக அதிகாரப்பூர்வமற்ற பாதுகாப்பு ஒப்பந்தம் கொண்டிருப்பதாக கூறும் அணு ஆயுத ஆய்வாளரும் எழுத்தாளருமான ராபியா அக்தர் தற்போதைய ஒப்பந்தம் பாதுகாப்பு உறவுகளை முறைப்படுத்துகின்றன என்றார்.
"அணுசக்தி தடுப்பைப் பொருத்தவரையில் இது தெளிவான உத்தரவாதம். ஆனால் இது சித்தாந்தத்தில் மாற்றம் இல்லை. சௌதிக்கு அதிகாரப்பூரவமாக அணுசக்தி பாதுகாப்பை பாகிஸ்தான் வழங்குவதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் இந்த விவகாரத்தில் உள்ள குழப்பம் சௌதி அரேபியாவின் நோக்கங்களுக்கு உகந்ததாக உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஜல்மாய் கலிஸாத், இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்த அறிவிப்பு ஒரு நன்மையளிக்கும் நகர்வு என்றார். "இது ஓர் உடன்படிக்கை இல்லை. ஆனால் இதை ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கை இடையே இரு நாடுகளும் பிரித்துப் பார்க்கின்றவா என்பது தெரியவில்லை." என்றார்.
"ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்ற நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இது கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலா? அல்லது சௌதி நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான் அணுசக்தி திட்டம் தொடர்பான வதந்திகளின் அதிகாரப்பூர்வ உறுதிபடுத்தலா?" என்றார்.
மேலும் அவர், "இந்த ஒப்பந்தத்தில் ஏதேனும் ரகசிய பிரிவுகள் உள்ளதா. அப்படியென்றால் அவை என்ன? இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மீதான சௌதி அரேபியாவின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறதா? இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கில் இலக்குகளைத் தாக்கும் அணு ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளை பாகிஸ்தான் கொண்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இலக்குகளைச் சென்றடையும் அமைப்புகளையும் அது உருவாக்கி வருகிறது. கேள்விகள் இருக்கவே செய்கின்றன." எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































