இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதலுக்குப் பிறகு ஓராண்டில் நடந்துள்ள மாற்றம் என்ன? 3 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நான்கு நாட்கள் நீடித்த ராணுவ மோதல் நிறைவடைந்து ஓராண்டாகிவிட்டது.
2025 மே 10 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, பல சந்தர்ப்பங்களில் இரு நாடுகளும் இதை தங்களது வெற்றியாகவே கூறிவருகின்றன.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் ராணுவத்தை மீண்டும் பிரபலமாக்கிய அதேநேரத்தில், பாகிஸ்தான் மீண்டும் அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளியாக மாறியது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது தொடுத்த போரினால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இரு தரப்புக்கும் இடையில் மத்தியஸ்தராக பங்காற்றும் நிலைக்கு வருவதிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
மற்றொருபுறம், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தில் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் அவசியம் இல்லை என்று இந்தியா மறுத்ததையடுத்து, இந்தியாவுக்கும் அமெரிக்க நிர்வாகத்துக்கும் இடையிலான உறவுகள் சவாலானதாக மாறின.
அதன் பின்னர், அமெரிக்கா இந்தியாவுக்கு 50 சதவிகித கூடுதல் சுங்கவரி விதித்ததையும் உலகம் கண்டது.
இந்த சூழ்நிலைகளில் புதிய வாய்ப்புகளைத் தேடிய இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுடன் தனது வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தியது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில், இரு நாடுகளும் தங்களது அரசியல் மற்றும் ராணுவ நிலைப்பாடுகளை மேலும் வலுப்படுத்த முயன்றன.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்பான அமெரிக்கத் தடைகளை சமாளிப்பது முதல் இரான் சம்பந்தப்பட்ட மோதலின்போது நுட்பமான சமநிலையைப் பேணுவது வரை கடந்த ஆண்டில், இந்தியா பல சந்தர்ப்பங்களில் பொறுமையாகவும் ராஜதந்திர ரீதியாகவும் செயல்பட வேண்டியிருந்தது.
இந்த விஷயங்களை மையமாகக் கொண்டு ராணுவ மோதல்களின் எதிர்காலம், கடந்த ஓராண்டில் பாகிஸ்தான் அளித்த பதில்கள் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு தூதரகக் கொள்கை என மூன்று முக்கிய விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மீண்டும் மோதல் ஏற்பட்டால் இந்தியா அதற்கு தயார் நிலையில் இருக்கிறதா?
கடந்தாண்டு நடைபெற்ற ராணுவ மோதலின்போது, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதையும், அவற்றை வானிலேயே தடுத்து நிறுத்தியதையும் பொதுமக்களும் நேரடியாகக் கண்டனர்.
இந்தியா தனது டிரோன்கள் மற்றும் க்ரூயிஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகளை குறிவைத்தது.
மறுபுறம், பாகிஸ்தான் "டிரோன் ஸ்வார்ம்" அதாவது பல டிரோன்களை கூட்டாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கூறியது.
பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, எதிர்காலத்தில் மீண்டும் இப்படிப்பட்ட மோதல்கள் ஏற்பட்டால், நிலைமைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
இந்த சூழலில், இந்தியா டிரோன் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பாதுகாப்பு மூலோபாயங்களில் எவ்வாறு செயல்பட்டு வருகிறது?
இதற்கு பதிலளிக்கும் பிபிசி செய்தியாளர் ஜுஹல் புரோஹித், "இந்தியாவில் டிரோன்களின் பயன்பாடு இனி கண்காணிப்புக்கு மட்டுமானதாக இருக்காது. தற்போது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட டிரோன்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது. அவை 'காமிகேஸ் டிரோன்கள்' அல்லது 'தற்கொலை டிரோன்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இவை கிட்டத்தட்ட ஒரு ஏவுகணை போல செயல்படுகின்றன. இதைத் தவிர, குவாட்காப்டர் டிரோன்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன."
அவர் மேலும் கூறுகையில், "சிறிய டிரோன்களை உருவாக்கும் திறன் இந்தியாவுக்கு இருந்தாலும், சில முக்கிய கூறுகளுக்காக இன்னும் சீனாவை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது இந்திய அரசுக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது." என்றார்.
பெரிய கண்காணிப்பு டிரோன்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய டிரோன்களைப் பொறுத்தவரை, இந்த மேம்பட்ட திறன்களைப் பெறுவதற்கு இந்தியா தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளைச் சார்ந்துள்ளது.
இந்திய அரசின் உத்திகள்

பட மூலாதாரம், Getty Images
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மே 6-7 இரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டும் பிபிசி செய்தியாளர் ஜுஹல் புரோஹித், இந்தியா எதிர்கால ராணுவத் திட்டங்களுக்காக நான்கு முக்கிய உத்திகளின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறார்:
1. வான் பாதுகாப்பு – 'சுதர்சன் சக்கரம்'
மோதலின்போது, பாகிஸ்தான் பெருமளவில் "டிரோன் ஸ்வார்ம்" தாக்குதல்களை மேற்கொண்டது. இதுகுறித்து பேசும் ஜுஹல் புரோஹித், "இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக வான் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது."
"பிரதமர் மோதி 'சுதர்சன் சக்கரம்' திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டார். இது வான் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்."
2. தன்னாட்சி தளங்கள்
படைவீரர்களின் நேரடி இருப்பு தேவைப்படாத ஆயுதங்களை உருவாக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது என்று கூறும் ஜுஹல் புரோஹித், "இதிலும் ஒரு சவால் உள்ளது, இந்த தொழில்நுட்பங்களை நாமே இந்தியாவில் உருவாக்க முடியுமா என்பதே முக்கிய கேள்வி" என்கிறார்.
3. திறன் மேம்பாட்டு அமைப்புகள்
வானில் பறக்கும்போதே விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் திறன் மற்றும் 'வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள்' (AEW&C) போன்றவை தொடர்பாக குறிப்பிடும் ஜுஹல் புரோஹித், "போர் விமானங்கள் வானில் பறந்து கொண்டிருக்கும்போது, அவற்றுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் திறன் இந்தியாவிடம் ஏற்கனவே உள்ளது. ஆனால் அதை மேலும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்கிறார்.
4. உள்நாட்டு உற்பத்தி
பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டிய அவசியம் குறித்து கூறும் ஜுஹல் புரோஹித், "மேலே கூறப்பட்ட மூன்றையும் இந்தியாவில் அதிகளவில் தயாரிக்கும் நமக்கு திறன் உள்ளதா? அவற்றை எப்படி உருவாக்க முடியும்? உருவாக்க முடியாவிட்டால் என்ன சவால்கள் உள்ளன என்பதிலேயே தற்போது கவனம் செலுத்தப்படுகிறது" என்கிறார்.
பாதுகாப்பு துறையில் இந்தியா யாருடன் இணைந்து செயல்படுகிறது?
"ரஷ்யா உடன் இந்தியாவுக்கு நீண்டகால உறவுகள் உள்ளன. எஸ்-400 பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சுகோய் போர் விமானங்கள் காரணமாக, ரஷ்யா இன்னும் இந்திய பாதுகாப்பு அமைப்பின் முக்கிய பகுதியாக உள்ளது."
அதே நேரத்தில் "அமெரிக்காவின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏனெனில் இந்தியாவின் ஹெச்ஏஎல் தேஜஸ் திட்டத்துக்கான இயந்திர தொழில்நுட்பம் அமெரிக்காவை சார்ந்துள்ளது."
இதற்கு அப்பால், "பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுடன் கூட்டு உற்பத்தி தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன." என்றார்.
பஹல்காம் தாக்குதல், 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றி இன்னும் பதில் கிடைக்காத கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
ராணுவத் தயாரிப்புகள் வேகமாக நடைபெற்று வந்தாலும், பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்னும் சில அடிப்படை கேள்விகளை எழுப்பி வருகின்றன. அவற்றில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் இதுவரை விடையளிக்கப்படாத பெரிய கேள்விகளாக உள்ளன.
பஹல்காம் தாக்குதலின்போது உளவுத்துறை தோல்வி ஏற்பட்டதா?
"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின்போது இந்திய விமானப்படைக்கு ஏற்பட்ட ஆரம்பகட்ட இழப்புகள் குறித்து ஏன் தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை?
இந்தக் கேள்விகளுக்கான பதில் என்னவாக இருக்கலாம் என, ஜுஹல் புரோஹித் தனது கருத்துகளை முன்வைக்கிறார்.
"எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளை மூன்று முக்கிய அம்சங்களாக சுருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். முதலில் பஹல்காம் தாக்குதல் ஏன் நடந்தது? இரண்டாவதாக உளவுத்துறை தகவலே இல்லையா அல்லது சரியான நேரத்தில் தகவல் கிடைக்கவில்லையா? மூன்றாவதாக, இதற்கான பொறுப்பை யார் நிர்ணயித்தார்கள்?"
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அது தொடர்பாக கருத்து கூறும் ஜுஹல் புரோஹித்,
"இதுகுறித்து இன்னும் அமைதியே நிலவுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது."
இந்தியாவின் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி கூறியதை மேற்கோள் காட்டும் ஜுஹல் புரோஹித், "இந்த நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு ஆரம்பக்கட்ட இழப்புகள் ஏற்பட்டிருந்தன."
"அந்த இழப்புகள் என்ன? அவை ஏன் ஏற்பட்டன?" என்று கேள்வி எழுப்பும் அவர், "இந்தியாவின் போர் விமானங்கள் பலவற்றை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது" என்று சொல்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரே ஆண்டில் பாகிஸ்தானின் சர்வதேச பங்களிப்பு எப்படி மாறியுள்ளது?
பாகிஸ்தானின் ராஜீய ரீதியிலான முயற்சிகள் குறித்து அந்நாட்டில் நிலவும் கருத்து என்ன?
பாகிஸ்தானில் உள்ள பிபிசி செய்தியாளர் ஃபர்ஹத் ஜாவேத், இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறார்: "கடந்த ஓராண்டில் பாகிஸ்தானில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலோபாய நிலைப்பாட்டில் இருந்த வெற்றிடத்தை பாகிஸ்தான் கடந்து முன்னேறியுள்ளது."
"முன்னதாக, பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பலவீனமானதும், ராஜீய ரீதியாக முக்கியத்துவம் இழந்த நாடாகவும் கருதப்பட்டது. அமெரிக்கா உடனான உறவுகள் மிகவும் பதற்றமாக இருந்தன. அதேபோல், பிற மேற்கு நாடுகளிடம் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக நம்பகத்தன்மையை இழந்திருந்தது."
ஆனால் தற்போது நிலைமைகள் மாறியுள்ளதாக கூறும் அவர், "தற்போது இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மோதலில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டதை நாம் பார்த்தோம்."
அவரது கருத்துப்படி, 2025 மே மாதத்தில் நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் மோதல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் புதிய வகையிலான ராஜீய அணுகுமுறை அப்போதுதான் தொடங்கியது."
"பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மேம்பட்டு வரும் நல்லுறவுக்கு, அதிபர் டொனால்ட் டிரம்பின் 'பரிவர்த்தனை' சார்ந்த வெளியுறவுக் கொள்கையே ஒரு முதன்மைக் காரணியாகப் பரவலாகக் கருதப்படுகிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.
டிரம்புக்கும் பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கும் இடையிலான நல்லுறவு

பட மூலாதாரம், Getty Images
பிபிசி செய்தியாளர் ஃபர்ஹத் ஜாவேத்தின் கருத்துப்படி, "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசீம் முனீரை வெள்ளை மாளிகையில் மதிய உணவிற்கு அழைத்து உபசரித்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்."
"இதன் மூலம், டிரம்ப் நிர்வாகம் தனது 'பரிவர்த்தனை அடிப்படையிலான' வெளிநாட்டு கொள்கையின் வழியாக, பாகிஸ்தானில் நீண்ட காலமாக இருந்து வரும் 'ராணுவ ஆதரவு கொண்ட முடிவெடுக்கும் அரசியல் அமைப்பை' ஏற்றுக்கொண்டுள்ளது என்ற சமிக்ஞைகள் கிடைக்கின்றன."
பாகிஸ்தான் ராணுவம் ஏன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது? அதன் அடுத்தகட்டத் திட்டங்கள் என்ன?
இந்த மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் ராணுவத் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய பணிகள் ஏதேனும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் ஃபர்ஹத் ஜாவேத், "ராணுவத் தயார்நிலை என்று பார்க்கப்போனால், இந்தியாவுடனான அண்மை மோதலை தனது 'வெற்றியாக' சித்தரிக்கிறது."
"கடந்த ஓராண்டாக பாகிஸ்தானில் கொண்டாட்ட சூழல் காணப்படுகிறது. இந்த போரில் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. தற்போது பாகிஸ்தான் ராணுவம் முன்பைவிட அதிகமாக தாக்குதல் நோக்குடைய அணுகுமுறையை எடுத்துள்ளது."
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டும் அவர், "2025 மே 7ஆம் தேதி நடைபெற்ற மோதலில் பாகிஸ்தான் வெளிப்படுத்திய ராணுவ வலிமை, அதன் மொத்த திறனில் வெறும் 10 முதல் 15 சதவிகிதம் மட்டுமே," என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் ராணுவ சீர்திருத்தங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. வரவிருக்கும் பட்ஜெட்டில் ராணுவச் செலவுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மட்டுமல்லாமல், துருக்கியுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பாகிஸ்தான் மேலும் வலுப்படுத்தியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.
'பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்' என இந்தியா கூறிய இடங்களில் தற்போதைய நிலை என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images
"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின்போது ஒன்பது இடங்களை இந்தியா தாக்கியது. அவை "பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முகாம்கள்" என்று இந்தியா கூறியிருந்தது. தற்போது அந்த இடங்களின் நிலைமை என்ன?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் செய்தியாளர் ஃபர்ஹத் ஜாவேத், "இந்தியா குறிவைத்ததாகக் கூறப்படும் இடங்களில் தற்போது மறுகட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பகுதிகளில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளும் நடைபெறுவதாகக் கூறப்படுவதை மறுக்கும் பாகிஸ்தான், அவற்றை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அடிப்படை கட்டமைப்புகள் என வகைப்படுத்துகிறது." என்றார்.
மேலும், "கடந்த ஆண்டு மே 7 அன்று மோதல் தொடங்கியபோது, நான் (பாகிஸ்தான் நிர்வகிக்கும்) காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத்தில் உள்ள ஒரு மசூதியின் சுற்றுவட்டாரப் பகுதிக்குச் சென்றிருந்தேன். அது இந்தியா 'பயங்கரவாத முகாம்' என்று கூறி குறிவைத்த இடமாகும்."
"அங்குள்ள உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, மசூதி தீவிரவாத முகாமாக இருக்காவிட்டாலும், அதன் அருகிலிருந்த மற்றொரு இடம், 2010க்கு முன்பு தடை செய்யப்பட்ட ஆயுத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முகாமாக செயல்பட்டது. ஆனால் அதன் செயல்பாடுகள் பின்னர் நிறுத்தப்பட்டுவிட்டன."
குறிவைக்கப்பட்ட மசூதியின் புனரமைப்புப் பணிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"எங்கள் குழு பஹாவல்பூர் மற்றும் முரிட்கேவுக்குச் சென்றபோது, அந்த இடங்களுக்குள் நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், அந்தக் கட்டடங்களிலும் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை நாங்கள் கவனித்தோம்."
"மௌலானா மசூத் அசாருடன் தொடர்புடைய முகாம்கள் இவை என்றும், இந்த இடங்களையே குறிவைத்து தாக்கியதாக இந்திய ராணுவம் கூறியிருந்தது."
போரால் புத்துயிர் பெற்ற பாகிஸ்தான் ராணுவம்

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் உறவின் பின்னணியில் இந்தியாவின் ராஜீய உத்தி
இந்தியா–பாகிஸ்தான் போருக்குப் பிறகான ராஜதந்திர முயற்சிகளில் யாருக்கு எவ்வளவு வெற்றி கிடைத்தது?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த இந்தியாவின் முன்னாள் தூதர் மீரா சங்கர், "இந்த போருக்குப் பிறகு, அமெரிக்காவுடன் பாகிஸ்தானுக்கு நெருக்கம் அதிகரித்தது. அது பாகிஸ்தானுக்கு புத்துயிர் கொடுப்பதாக அமைந்தது."
"அமெரிக்கா, பாகிஸ்தானின் ராணுவத் தலைமையினருக்கு அளித்த முக்கியத்துவம் மிகவும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது. இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தானில் ராணுவத்தின் நிலை சற்றுத் தளர்ந்திருந்தது. ஆனால் பின்னர் அது மீண்டும் வலுவடைந்தது."
"அசீம் முனீருக்கு 'ஃபீல்ட் மார்ஷல்' பதவி வழங்கப்பட்டதுடன், அவரின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டது" என்று கூறும் அவர்,
"ஆசிம் முனீரை டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கு அழைத்தது இதற்கு முன்பு ஒருபோதும் நடக்காத ஒன்று. ஏனெனில் அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தானின் குடியரசு தலைமையையே ஆதரித்து வந்துள்ளது."
"இப்போது இரான் தொடர்பான மத்தியஸ்த முயற்சிகளில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றி வருகிறது."

பட மூலாதாரம், Getty Images
மோதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகளை எவ்வாறு பார்க்கலாம்? இந்தியா எந்த வகையான தூதரகச் சவால்களை எதிர்கொண்டது?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் மீரா சங்கர், "டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது அதிக அளவிலான வரிகளை விதித்தது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தத்தையும் கொடுத்தது. அமெரிக்க தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்" என்று குறிப்பிட்டார்.
"டொனால்ட் டிரம்ப் போன்ற தலைவர்கள் எல்லாவற்றையும் மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வார்கள். இந்த முறை, 'கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள்' அமைப்பாகச் செயல்படக்கூடிய ஆலோசகர்கள் அவரிடம் இல்லை," என்றும் மீரா சங்கர் கூறுகிறார்.
இந்த சவாலான காலகட்டத்தில் இந்திய தூதரகத்தின் அணுகுமுறை குறித்து பேசும் அவர், "இந்தியா மிகவும் முதிர்ச்சியான அணுகுமுறையை வெளிப்படுத்தியது. உடனடியாக கடுமையான பதிலளிக்கும் அணுகுமுறையை இந்தியா எடுக்கவில்லை."
அவர் ஓர் உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்: "ஆரம்பத்தில், இந்தியா மீது விதிக்கப்பட்ட வர்த்தக வரிகளுக்கு எதிராக இந்தியா எந்தவொரு எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. இருப்பினும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பிரச்னை எழுந்த போது, இந்தியா தனது பொருளாதாரக் தேவைகள் மற்றும் விவசாயிகளின் நலன்களிலும் சமரசம் செய்துகொள்ள மறுத்துவிட்டது."
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































