காணொளி: குஜராத்தில் சிங்கத்தின் பிடியில் சிக்கியவர் உயிர் தப்பியது எப்படி?
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தின் பாலிதானா தாலுகாவில் உள்ள கராஜியா கிராமத்தில், ஜூலை 6 அதிகாலையில் கலுபாய் பர்மர் என்ற கால்நடை மேய்க்கும் நபரை சிங்கம் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
திங்கள்கிழமை காலை 8:30 மணியளவில் தான் வீட்டில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலுபாய் ஊடகங்களிடம் குறிப்பிட்டதாக பிபிசி நியூஸ் குஜராத்தியின் அல்பேஷ் தாபி தெரிவித்தார்.
அச்சம்பவம் குறித்து கலுபாய் விவரிக்கையில், "காலை 8:30 மணிக்கு என் பசுவுக்கு உணவளிக்கச் சென்றபோது, அங்கே ஒரு சிங்கம் அமர்ந்திருந்தது. அங்கிருந்து அது என்னைத் தாக்கியது. முதலில் அது என் தோளில் அடித்து என்னைக் கீழே தள்ளியது. பின்னர் என் கையை அதன் வாயில் கவ்விக்கொண்டது. சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்தது. பிறகு நான் அதைத் தடவிக் கொடுத்தேன்; அது என் கையை விட்டதும், நான் என் கையை எடுத்துக்கொண்டேன்." என்றார்.
இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்திய ஷேத்ருஞ்சி வனவிலங்குத் துறையின் துணை வனப் பாதுகாவலர் சிராக் அமின் பிபிசியிடம் பேசுகையில், கராஜியா கிராமத்தில் ஒரு இளம் சிங்கம் தாக்கியதில் கால்நடை மேய்க்கும் நபருக்கு உடல் ரீதியான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தனது ஐம்பது வயதுகளில் உள்ள கலுபாய் தொடர்ந்து பேசுகையில், மக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்ததாகவும், ஆனால் சிங்கம் அங்கிருந்து செல்வதற்குள் வனத்துறை குழுவால் கராஜியாவை அடைய முடியவில்லை என்றும் கூறினார்.
தாக்குதலின் போது பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடியோவில், சுற்றியுள்ள மக்கள் சத்தம் போடுவதும், சிங்கத்தின் மீது கற்களை வீசுவதையும் காண முடிகிறது.
சிங்கம் தன் மீது பாய்ந்த பிறகு, கிராம மக்களால் கூட தனக்கு பெரிதாக உதவ முடியவில்லை என்று கலுபாய் கூறினார்.
அந்த வீடியோவில் சிங்கம் திடீரென கலுபாயை விட்டுச் செல்வதைக் காணமுடிகிறது. சிங்கம் தன்னை விட்டுவிட்டு தனது பசுக்களை நோக்கிச் சென்றதாக கலுபாய் கூறுகிறார்.
இருப்பினும், கலுபாயின் இரண்டு பசுக்களுக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காமல் சிங்கம் அங்கிருந்து சென்றுவிட்டதாக கிராமத் தலைவர் கரம்ஷிபாய் சௌஹான் பிபிசியிடம் தெரிவித்தார்.
கரம்ஷிபாய் தொடர்ந்து பேசுகையில், "சிங்கம் திடீரென கிராமத்திற்குள் நுழைந்து, கலுபாயின் பக்கத்து வீட்டுக்காரரின் பண்ணைக்குச் சென்று அவரை நோக்கி ஓடியது. ஆனால் அவரது எருமை மாடு அதை எதிர்த்ததால், சிங்கம் அங்கிருந்து ஓடி, இரண்டு பசுக்கள் கட்டப்பட்டிருந்த கலுபாயின் வீட்டை நோக்கிச் சென்றது. ஆனால் பசுக்களுக்குப் பதிலாக, அது கலுபாயைத் தாக்கியது. இறுதியில், கலுபாயை விட்டுவிட்டு, அது அவரது பசுக்களை நோக்கி ஓடியது. இருப்பினும், கடைசியில் பசுக்களுக்கும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அது அங்கிருந்து சென்றுவிட்டது" என்றார்.
கரம்ஷிபாயின் மனைவி ஜிகுபென், கராஜியா கிராமத்தின் தற்போதைய சர்பஞ்ச் (தலைவர்) ஆவார்.
"இந்தத் தாக்குதலில் கலுபாயின் கழுத்து, தோள் மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் முதலில் சிகிச்சைக்காக பாலிதானாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் காயங்கள் பலமாக இருந்ததால், அவரை பாவ்நகருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அங்குள்ள மருத்துவர் கூறினார்" என்றார் கரம்ஷிபாய் .
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



