பிரதமர் மோதியிடம் கேள்வி கேட்க முயன்றது ஏன்? - நார்வே பத்திரிகையாளர் பிபிசிக்கு அளித்த பேட்டி

பட மூலாதாரம், @HelleLyngSvends/X
- எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
- பதவி, ஆசிரியர், பிபிசி ஹிந்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
பிரதமர் நரேந்திர மோதி தற்போது ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளார். பிரதமர் மோதியின் நார்வே பயணத்தின் போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்த கருத்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நார்வே பிரதமர் ஜோனாஸ் ஸ்டோருடனான கூட்டறிக்கைக்குப் பிறகு, பெண் பத்திரிகையாளர் ஹெலா லாங் பிரதமர் நரேந்திர மோதியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பினார், அதே நேரத்தில் பிரதமர் அங்கிருந்து வெளியேறுவதைக் காண முடிகிறது.
பிபிசி நியூஸ் ஹிந்திக்கு ஹெலா லாங் பேட்டியளித்தார்.
ஒரு பத்திரிகையாளராகக் கேள்வி கேட்பது தனது பணி என்றும், ஒரு சக்திவாய்ந்த நாடு தனது சிறிய நாட்டிற்கு வந்து அவர்களுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்பும் போது, கேள்வி கேட்பது தனது பொறுப்பு என்றும் அப்பேட்டியில் ஹெலா கூறினார்.
நார்வேயின் தலைநகரான ஆஸ்லோவிலிருந்து திங்கள்கிழமை வெளியான ஒரு காணொளியில், பத்திரிகையாளர் ஹெலா லாங் , "பிரதமர் மோதி, உலகின் மிகவும் சுதந்திரமான பத்திரிகையாளர்களிடமிருந்து நீங்கள் ஏன் கேள்விகளை எதிர்கொள்வதில்லை?" என்று கூறுவதைக் கேட்க முடிகிறது.
ஹெலா லாங் சமூக ஊடகங்களிலும் இந்த விஷயம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார், அதன் பிறகு நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, அவரை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்துக்கு வந்து கேள்விகளைக் கேட்குமாறு கேட்டுக்கொண்டது.
செய்தியாளர் கூட்டத்தில் அவருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான விவாதமும் பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரங்கள் குறித்து ஹெலா லாங் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் விரிவாகப் பேசினார்.

பிரதமர் மோதியிடம் கேள்வி கேட்கப்பட்டபோது என்ன நடந்தது?
ஹெலாவிடம் முதலில் அவரது அடையாளம் குறித்து கேட்கப்பட்டது. இக்கேள்விக்குப் பதில் அளித்த அவர், "சுருக்கமாகச் சொன்னால், நான் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறேன். நார்வேயின் தேசியப் பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளேன். நான் பணியாற்றிய முந்தைய பத்திரிகைக்காக அமெரிக்கத் தேர்தலைக் குறித்து செய்தி சேகரிக்கக்கூட நான் அனுப்பப்பட்டேன். இப்போது நான் நார்வேக்குத் திரும்பி, அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் குறித்து செய்தி சேகரித்து வருகிறேன்" என்று கூறினார்.
இந்தியப் பிரதமரும் நார்வே பிரதமரும் கூட்டறிக்கை வெளியிட்ட நிகழ்வில் ஹெலா லாங்கே கலந்து கொண்டார். அப்போது என்ன நடந்தது என்று அவரிடம் கேட்கப்பட்டது.
இக்கேள்விக்கு அவர், "ஒரு நாட்டுத் தலைவர் நார்வேக்கு வரும்போதெல்லாம், சாலைகளில் அதிக அளவில் காவல்துறை அதிகாரிகள் இருப்பார்கள், சில சாலைகள் மூடப்படும். ஒட்டுமொத்த அமைப்பும் மிகவும் கண்டிப்பானது. அங்கீகாரத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் அங்கு எவ்வாறு நுழைவது என்பதை நீங்கள் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும்" என்றார்.
"நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்திற்கு நாங்கள் சென்றடைந்தோம். பின்னர் இரு தலைவர்களும் அறைக்குள் வந்து பேசத் தொடங்கினர்."
"முதலில், நார்வே பிரதமர் இந்தியா மற்றும் நார்வே இடையிலான உறவுகள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்தும் பேசினார். அதன் பிறகு, பிரதமர் மோதியும் தனது தொலைநோக்கு பார்வை மற்றும் இந்த அரசுமுறைப் பயணத்தின் நோக்கம் குறித்தும் பேசினார்" என்று ஹெலா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நார்வேயில் இதுபோன்ற பத்திரிகையாளர் சந்திப்புகளில் பொதுவாக இது தான் நடக்கும். தலைவர் ஊடகங்களிடம் பேசிவிட்டு, பின்னர் சில கேள்விகளை எதிர்கொள்வார். உதாரணமாக, கடந்த ஆண்டு மக்ரோங் (பிரான்ஸ் அதிபர்) இங்கு வந்தபோது, அவர் நார்வே பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்" என்றார்.
மேலும், "பத்திரிகையாளர்களாகிய எங்களது வேலை கேள்வி கேட்பதுதான் என்று நான் நம்புகிறேன். ஒரு சக்திவாய்ந்த நாடு எங்களது சிறிய நாட்டுக்கு வந்து எங்களுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்பும் போது, கேள்வி கேட்பது எங்களது பொறுப்பாகும். உங்கள் பிரதமர் கேள்விகளை எதிர்கொள்ள விரும்புவதில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் கேள்வி கேட்பது எனது கடமையாக இருந்தது" என்றும் ஹெலா கூறினார் .
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கேள்விகளை எதிர்கொள்வது அரிதாகவே காணப்படுகிறது.
இதுவரை, அவர் இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே வெளிநாடுகளில் கேள்விகளை எதிர்கொண்டுள்ளார் (ஜூன் 2023 மற்றும் பிப்ரவரி 2025 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்கள்).
இது அடிக்கடி நடக்கும் ஒன்றல்ல.
இரு பிரதமர்களும் கேள்விகளை எதிர்கொள்வார்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதா என்று நாங்கள் ஹெலாவிடம் கேட்டோம்.
இதற்கு ஹெலா, "இல்லை. கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்" என்றார்.
மேலும், "அதுதான் எனது பணியை இன்னும் முக்கியமானதாக மாற்றுகிறது. ஏனென்றால், ஒரு வெளிநாட்டுத் தலைவர் இங்கு வந்து ஜனநாயகத்தை வரையறுப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது"என்று கூறினார் ஹெலா.
தொடர்ந்து பேசிய அவர், "ஜனநாயகம் என்றால் என்ன? உங்கள் பிரதமர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பேசுகிறார். ஆனால், உங்கள் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நபரை கேள்வி கேட்பதற்கான வாய்ப்பே இல்லை என்றால் ஜனநாயகம் என்பது என்னவாக இருக்கும்?"
"இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை மற்றும் மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்டு, இவ்வளவு பெரிய நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நபரை கேள்வி கேட்பது எனது கடமையாக இருந்தது"என்றும் குறிப்பிட்டார்.
பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் 157-வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
நார்வேயில் பணிபுரியும் ஒரு பத்திரிகையாளருக்கு, குறிப்பாக இங்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவரிடம் கேள்வி கேட்கும்போது, பத்திரிகை சுதந்திரக் குறியீடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இக்கேள்விக்குப் பதிலளித்த ஹெலா, "நார்வேயில், எங்கள் சமூகம் செயல்படும் விதம் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் பிரதமர் சில ஆயிரம் மக்கள் மட்டுமே வாழும் நார்வேயின் மிகச்சிறிய பகுதிக்குச் செல்லும் போது கூட, அவர் உள்ளூர் செய்தித்தாள்கள் மற்றும் செய்தி சேனல்களுடன் பேசுகிறார் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்றார்.
மேலும், "எங்கள் பத்திரிகைகள் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் இயங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்கிறோம் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து பதில்களைக் கோருகிறோம். அதுதான் எங்கள் பணி. எங்களைப் போல இதழியலுக்கு மதிப்பு அளிக்காத வெளிநாட்டுத் தலைவர்களை நாங்கள் சந்திக்கும்போதும் அதையே தான் செய்கிறோம்"என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நார்வே பிரதமர் அந்த இடத்திற்குத் திரும்பி வந்து ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. நீங்கள் அங்கு இருந்தீர்களா?என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
"நேற்று மிகவும் பரபரப்பாக இருந்த எனது பிரதமர், பிரதமர் மோதி புறப்பட்ட பிறகு முக்கிய நார்வே ஊடக நிறுவனங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். நான் அந்த வரிசையில் இல்லை. அவருக்கு நேரம் இருக்கிறதா என்று கேட்டேன், ஆனால் அவருக்கு நேரம் இல்லை. அது எனக்குப் பரவாயில்லை, ஏனென்றால் நான் நினைத்தால் இந்த வாரத்தில் எப்போதாவது அவருடன் பேச முடியும் என்பது எனக்குத் தெரியும்" என்று ஹெலா அக்கேள்விக்குப் பதில் அளித்தார்.
பதில் அளித்த நார்வே பிரதமர்
அதன் பிறகு, இந்திய ஊடகங்கள் நார்வே பிரதமரிடம் கேள்வி எழுப்பிய அதே வேளையில், இந்தியப் பிரதமரிடம் கேள்வி கேட்காதது ஹெலாவுக்கு விசித்திரமாகத் தெரிந்ததா என்ற கேள்வி ஹெலாவிடம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு அவர், "நான் ஆச்சரியப்படவில்லை, ஏனென்றால் இது அதிர்ச்சியளிப்பதாக இல்லை. மாறாக இது கவலையளிக்கிறது. உங்கள் தலைவர்களிடமும் அவர்களது கொள்கைகளிடமும் உங்களால் நேரடியாகக் கேள்விகளைக் கேட்க முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள நீங்கள், விவாதங்களை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்கிறீர்கள் என்பது குறித்து நான் கவலைப்படுகிறேன்" என்றார்.
மேலும், "அதுதான் எனக்குக் கவலையளிக்கிறது. இன்றைய நார்வே தலைவர்களும் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தும்போது, மனித உரிமை மீறல்களும், பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டின் வீழ்ச்சியும் தொடர்வதற்கு நம்மை அறியாமலேயே நாம் இடமளிக்கிறோமா? இது எங்களது பிரதமர்களுக்கு ஒரு சிக்கலான உலக அரசியல் சூழ்நிலையாகும்"என்றும் ஹெலா கூறினார்.
நார்வே, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் பின்லாந்து போன்ற நோர்டிக் நாடுகள் பல ஆண்டு காலங்களாக மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளன, மேலும் அங்கு பத்திரிகை சுதந்திரம் அடிக்கடி விவாதத்துக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது.
இந்தியா மனித உரிமைகளை மதிப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது. நீதித்துறை, சட்டமன்றம் அல்லது நிர்வாகத்துறை என அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் மதிக்கப்படுகின்றன.
பத்திரிகை சுதந்திரத்திற்கு முதலிடம் கொடுக்கும் நாடுகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், இந்த ஒட்டுமொத்த விவாதத்தையும் அரசாங்கம் செயல்படும் விதத்தையும் எவ்வாறு பார்க்கிறார்கள்?என்று ஹெலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த ஹெலா, "இது மிகவும் நல்ல கேள்வி. நீங்கள் நேரடியாக களத்தில் இல்லாதபோது விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால் அம்னெஸ்டி மற்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற சர்வதேச அறிக்கைகளை நான் நம்புகிறேன். நேற்றைய தினத்திற்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனக்குப் பல செய்திகள் வந்தன. மக்கள் பேசும் விஷயங்கள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன" என்றார்.
"இருப்பினும், இந்தியாவில் தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஒரு பெரிய பிளவு இருப்பதை நான் அறிவேன். எனவே, நான் நம்பும் அதே ஆதாரங்களையே இப்போதும் நம்புகிறேன்."
"அம்னெஸ்டி சிலருக்கு சர்ச்சைக்குரியதாக இருக்கலாம், ஆனால் எனக்கு இல்லை. மேலும் எங்களது பிரதமர் வெளியுறவுக் கொள்கையில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர். அவர் தனது வாழ்க்கையை அதன் மூலமே கட்டமைத்துள்ளார். மென்மையான அதிகாரம் என்பதைத் தான் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்."
"ஆனால், எங்களது மதிப்புகளுக்கும் இந்தியாவின் மதிப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து நான் எதிர்பார்த்ததை விட அவர் மிகவும் வெளிப்படையாகப் பேசினார்"எனக் கூறினார் ஹெலா.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடந்த விவாதம்
பிரதமர் மோதியிடம் கேள்வி கேட்கப்பட்ட பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் ஹெலாவை டேக் செய்து, ஒரு முறையான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.
அங்கு சென்ற அவர், மீண்டும் அக்கேள்வியை எழுப்பினார்.
கேள்வி பதில்களின் போது வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் சி.பி. ஜார்ஜுடன் ஹெலாவுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த அனுபவம் எப்படி இருந்தது மற்றும் பதில்களில் அவர் திருப்தி அடைந்தாரா? என்று ஹெலாவிடம் கேட்டபோது, "முதலாவதாக, நான் ஏற்கனவே அந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இந்தியத் தூதரகம் பின்னர் இந்த அழைப்பை விடுத்தது, அது ஒரு நல்ல விஷயம். நான் எனது கேள்விகளுடன் அங்கு சென்றேன்" என்றார்.
"ஆனால் அந்த முழு செயல்முறையிலும் தவறாக இருந்தது என்னவென்றால், அதற்கு உடனடியாக நீங்கள் பதிலளிக்க முடியுமா என்று நான் கேட்டுக்கொண்டே இருந்தது தான்"என்றார்.
அது ஒரு பிரச்னையாக இருந்தது.
அவர் மூன்று அல்லது நான்கு கேள்விகளை எடுத்துக்கொண்டு, பின்னர் அவற்றுக்குப் பதிலளித்தார்.
ஒரு பத்திரிகையாளராக, எனது கேள்விக்கு எனக்குப் பதில் கிடைக்காவிட்டால், பதிலளிப்பவரை நான் தடுத்து நிறுத்தி, மீண்டும் அவரை விஷயத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் நேற்று அப்படி நடக்கவில்லை."
"நான் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கேள்வி கேட்டேன், ஆனால் அவர் அந்தப் பகுதிக்குப் பதிலளிக்கவில்லை. சுமார் ஒரு நிமிடத்துக்குப் பிறகு நான் அவரது பேச்சில் குறுக்கிட்டு, உரையாடலை மீண்டும் அந்த விவகாரத்திற்குக் கொண்டு வர முயன்றேன், ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. இது சவாலாக இருக்கிறது" என்றார்.
"நார்வேயில்,ஒரு கேள்விக்குக் கிடைக்கும் பதில் பிடிக்கவில்லை என்றால், அதை மீண்டும் கேட்க எனக்குப் பழக்கமாகிவிட்டது. குறைந்தபட்சம் எனது கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது போன்ற உணர்வாவது எனக்கு ஏற்படும். நான் ஒரு கேள்வி கேட்பதும், பின்னர் நான் எதைக் கேட்டேனோ அதற்கு அந்த அரசியல்வாதி பதிலளிப்பதும் எனக்கு முக்கியம்.
மேலும் அந்தப் பதில்கள் பொதுவாக மிகவும் சுவாரஸ்யமானதாகவும், மற்றவர்களின் கருத்துக்களைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழியாகவும் இருக்கும்."
"ஆனால் நேற்று உரையாடல் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் தடுப்பூசி விநியோகம் மற்றும் யோகா பக்கம் திரும்பியது. நான் யோகாவையும், இந்தியப் பண்பாட்டின் பல விஷயங்களையும் விரும்புகிறேன். இந்தியா சில சிறந்த பணிகளைச் செய்கிறது. ஆனால் எந்தவொரு நாட்டைப் பற்றிய புகழாரங்களைக் கேட்பதற்காகவும் நான் வழக்கமாகச் செய்தியாளர் கூட்டங்களுக்குச் செல்வதில்லை"என்று கூறினார் ஹெலா.

பட மூலாதாரம், X/@Narendramodi
'இந்தியாவில் பத்திரிகைத் துறையில் பணியாற்றுவது அபாயகரமானது '
பிரதமர் அல்லது வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து தெளிவான பதில் வராதது ஹெலாவுக்கு ஆச்சரியத்தை அளித்ததா? என்று கேட்டோம்.
சமீபத்தில், நெதர்லாந்து பிரதமரும் இந்தியாவில் சிறுபான்மையினரின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்து கவலை தெரிவித்திருந்தார்.
இது குறித்துப் பேசிய அவர், "எனக்கு பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு பத்திரிகையாளர் எப்போதும் தனது முழு முயற்சியையும் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
இரண்டாவது செய்தியாளர் கூட்டத்தில் நான் சற்று முரட்டுத்தனமாக நடந்துகொண்டது போல் சிலர் உணர்ந்திருக்கலாம். ஆனால் இதுதான் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பத்திரிகை முறை. நீங்கள் குறுக்கிட்டு பதிலைப் பெற முயற்சிக்க வேண்டும். இருப்பினும், நேற்று எனக்கு அந்தப் பதில் கிடைக்கவில்லை" என்றார்.
ஹெலாவின் கேள்வி தொடர்பாக, பிரதமரின் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், அது ஒரு ஊடக சந்திப்பு அல்ல, அதனால் தான் பிரதமர் பதிலளிக்கவில்லை என்று வாதிடுகின்றனர்.
இந்த வாதத்தை அவர் எப்படிப் பார்க்கிறார்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் கூறிய ஹெலா, "அவர் எப்போதாவது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கிறாரா? அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தால் ஒழிய, அவர் பதில் அளிப்பதை நான் பார்த்ததில்லை" என்றார்.
பிரதமர் மோதி வெளிநாடுகளில் இரண்டு முறை பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதிலும், ஹெலா அதற்கு, "அவர் தனது சொந்த நாட்டு ஊடகங்களின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் விமர்சனப் பார்வைகொண்ட ஊடகங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் இதழியல் என்பது ஆபத்தான ஒரு தொழில். அங்குள்ள பத்திரிகையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்றும்,
"எனவே நான் பத்திரிகை துறையில் இருக்கும் வரை, கேள்விகளை எதிர்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன் நார்வேக்கு வரும் எந்தவொரு பிரதமர் அல்லது அதிபரின் அணுகுமுறையையும் தொடர்ந்து எதிர்ப்பேன். நான் எப்போதும் முயற்சி செய்வேன்" என்றும் கூறினார் ஹெலா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























